சிவபெருமானைப் பற்றி அப்பர் எழுதிய சில பாடல்களைப் பார்ப்போம். கீழே பொருள் விளக்கம் உள்ளது. பொறுமையுடன் படிக்கவும்.
கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்யவல் லானைச்செந் தீமுழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர் கோனென்று வாழ்த்துவனே.
ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாய்என்னும் எம்பெரு மான் தன் திருக்குறிப்பே.
கன்மன வீர்கழி யுங்கருத் தேசொல்லிக் காண்பதென்னே
நன்மன வர்நவி தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றது போலப் பொலிந்துஇலங்கி
என்மன மேஒன்றிப் புக்கனன் போந்த சுவடில்லையே.
குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇம் மாநிலத்தே.
வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசு பதம்அருள் செய்தவன் பத்தர்உள்ளீர்
கோத்தன்று முப்புரந் தீவனைத் தான்றில்லை அம்பலத்துக்
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பதன் றோநம்தமக்கு ஊழைமையே.
பூத்தன பொற்சடை பொன்போன் மிளிரப் புரிகணங்கள்
ஆர்த்தன கொட்டி யரித்தன பல்குறட் பூதகணந்
தேத்தென என்று இசை வண்டுகள் பாடுசிற் றம்பலத்துக்
கூத்தனிற் கூத்துவல் லாருள ரோஎன்றன் கோல்வளைக்கே.
முடிகொண்ட மத்தமு முக்கண்ணி னோக்கு முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்த வெண்ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலுஎன் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை அம்பலக் கூத்தன் உ ரைகழலே.
படைக்கல மாக உன் நாமத்து எழுத்தஞ்சுஎன் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லேன் எழுபிறப் பும்உனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறுஅணிந்துஉன்
அடைக்கலங் கண்டா அணிதில்லைச் சிற்றம் பலத்தரனே.
பொன்னொத்த மேனிமேல் வெண்ணீறு அணிந்து புரிசடைகண்
மின்னொத்து இலங்கப் பலிதேர்ந் துழலும் விடங்கர்வேடச்
சின்னத்தி னான்மலி தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்னத்தன் ஆடல்கண்டு இன்புற்ற தால்இவ் இருநிலமே.
சாட எடுத்தது தக்கன்தன் வேள்வியிற் சந்திரனை
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனுந்
தேட எடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோநம்மை ஆட்கொண்டதே.
பொருள் விளக்கம்
கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்யவல் லானைச்செந் தீமுழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர் கோனென்று வாழ்த்துவனே.
கருமை நிறத்தை உடைய கண்டத்தினைப் பெற்றவனும், உலகங்களுக்கு தலைவனாக விளங்குபவனும், கற்பகம் மரம் போல் தன் அடியவர்களுக்கு வேண்டுபவற்றை வழங்குபவனும், போரில் ஈடுபட்ட மும்மதில்களை அழித்தவனும், செம்மை நிறத்தீயினை கையில் கொண்டு திருநடனம் புரிபவனும், தில்லை நகரில் இறைவனாகவும், சிற்றம்பலத்தில் பெரிய நடனம் புரிபவனும் ஆகிய சிவபெருமானை வானத்தில் உள்ள தேவர்களின் தலைவன் என்று வாழ்த்துவேன்.
ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாய்என்னும் எம்பெரு மான் தன் திருக்குறிப்பே.
கோபம் கொண்டு வெகுண்டு எழுந்த கூற்றுவனாகிய எமனை தன் பக்தனுக்காக (மார்கண்டேயனுக்காக) காலால் இடறியவனாய் தில்லை நகரில் திருச்சிற்றம்பலத்தில் என்று வந்தாய் என்னும் குறிப்புத் தோன்றும்படி கவித்த திருக்கையுடன் எம்பெருமான் நிகழ்த்தும் திருநடனத்தை கண்டு வணங்குங்கள். அத்திருநடனத்தினை மனதில் நிறுத்தி வழிபடுங்கள். அவ்வாறு செய்தால் உங்களுக்கு பிறப்பு இறப்பு உட்பட எவ்வித குறைபாடும் ஏற்படாது.
கன்மன வீர்கழி யுங்கருத் தேசொல்லிக் காண்பதென்னே
நன்மன வர்நவி தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றது போலப் பொலிந்துஇலங்கி
என்மன மேஒன்றிப் புக்கனன் போந்த சுவடில்லையே.
கல் போன்ற நெஞ்சங்களைக் கொண்ட உலகமக்களே. உங்களின் மனதில் உருவாகும் அற்ப ஆசைகளால் என்ன பயன்?. நல்ல மனத்தினை உடையவர்கள் வாழும் தில்லை நகர் சிற்றம்பலத்தில் எம்பெருமான் நிகழ்த்தும் ஆனந்த நடனத்தை தரிசிப்பதால் ஆன்ம பலன் கிட்டும். அப்படிப்பட்ட ஆன்ம பலத்தினை தரும் பொன் போன்ற நிறமுடைய சிற்றம்பலத்தில் வெள்ளி போன்ற வெண்மையான நீறினைப் பூசி திருநடனம் புரியும் கூத்தபிரானின் காட்சியானது பொன் மலையின் மீது வெள்ளி மலை இருப்பது போல அடியேனுடைய மனத்தினுள் சுவடு தெரியாமல் புகுந்து மனத்தில் உறுதியாக நிலைபெற்று விட்டது.
குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇம் மாநிலத்தே.
வளைந்த புருவங்களையும், கோவைப்பழம் போன்ற சிவந்த வாயில் தாங்கிய அழகிய புன்னகையும், கங்கை நதியினைத் தலையில் தாங்கியதால் உண்டான ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் பூசிய வெண்மையான திருநீற்றுப் பூச்சினையும், பேரின்பத்தைத் தரும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதற்கு இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தல் விரும்பத்தக்கச் செயலாகும்.
வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசு பதம்அருள் செய்தவன் பத்தர்உள்ளீர்
கோத்தன்று முப்புரந் தீவனைத் தான்றில்லை அம்பலத்துக்
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பதன் றோநம்தமக்கு ஊழைமையே.
நம்முடைய நல்வினையின் பயனாக நமக்கு இந்த ஒப்பற்ற மனிதப் பிறவி கிடைத்துள்ளது. இப்பிறவினை மதித்துச் செயற்படுவீர்களாக. அர்ச்சுனனுக்குப் பாசுபதம் என்னும் ஆயுதத்தை வழங்கி அருள் செய்தவனும், முப்புரங்களை சிரித்து தீயிட்டு அழித்தவனும், தில்லை அம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனும் சிவபெருமானுக்கு அடியவராக இருப்பததே இப்பிறவியின் கடமையாகும்.
பூத்தன பொற்சடை பொன்போன் மிளிரப் புரிகணங்கள்
ஆர்த்தன கொட்டி யரித்தன பல்குறட் பூதகணந்
தேத்தென என்று இசை வண்டுகள் பாடுசிற் றம்பலத்துக்
கூத்தனிற் கூத்துவல் லாருள ரோஎன்றன் கோல்வளைக்கே.
பொன்னிறமான கொன்றை மலர்களை தலையில் சூடியதால் சடையானது பொன்நிறமாக ஒளிவீச, சிவனடியார்கள் மகிழ்ச்சியால் ஆரவாரிக்க, சிவகணங்கள் வாத்தியங்களை ஒலிக்க, தெத்தே என்று வண்டுகள் ஒலிக்கும் தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும் சிவபெருமானைப் போல, திரண்ட வளையல்களை அணிந்த என் மகளுடைய மனத்தினைத் தம் நாட்டியத்தால் கவரவல்லார் பிறர் உளரோ
முடிகொண்ட மத்தமு முக்கண்ணி னோக்கு முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்த வெண்ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலுஎன் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை அம்பலக் கூத்தன் உ ரைகழலே.
தலையில் அணிந்த ஊமத்தைப்பூவும், மூன்று கண்களின் பார்வையும், அழகிய புன்சிரிப்பும், உடுக்கையை ஒலிக்கும் திருக்கையும், உடல் முழுவதும் பூசிய திருநீறும், உமையம்மையை இடத்தில் பெற்ற உடலுமும், புலித் தோலை அணிந்த இடையும், தில்லை நகரில் சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும் எம் பெருமானின் ஒலிக்கின்றன கழல்களை அணிந்த திருவடிகளும் அடியேனுடைய உள்ளத்தில் நிலையாக இடம் பெற்று விட்டன.
படைக்கல மாக உன் நாமத்து எழுத்தஞ்சுஎன் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லேன் எழுபிறப் பும்உனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறுஅணிந்துஉன்
அடைக்கலங் கண்டா அணிதில்லைச் சிற்றம் பலத்தரனே.
அழகிய தில்லை நகரின் சிற்றம்பலத்தில் உள்ள கூத்தபெருமானே உன் திருநாமமாகிய திருஐந்து எழுத்தினை (நமசிவாய) தீங்குகளிலிருந்து என்னை பாதுகாக்கும் படைக்கருவியாக கருதி எப்பொழுதும் என் நாவால் அதனைக் கூறிகொண்டுள்ளேன். ஏழேழு பிறவிகளிலும், இடையிலும் உன்னை நீங்காது உனக்கு தொண்டு செய்வதை தவிர்த்தேன் அல்லேன். அடியேனை நீ விலக்கினாலும் அடியேன் உன்னை விட்டுப் பிரியாது எப்பொழுதும் உன்னை மனத்தால் தொழுது உடலால் வணங்கி திருநீறு அணிந்து உன்னால் காக்கப்பட வேண்டிய பொருளாக உள்ளேன்.
பொன்னொத்த மேனிமேல் வெண்ணீறு அணிந்து புரிசடைகண்
மின்னொத்து இலங்கப் பலிதேர்ந் துழலும் விடங்கர்வேடச்
சின்னத்தி னான்மலி தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்னத்தன் ஆடல்கண்டு இன்புற்ற தால்இவ் இருநிலமே.
பொன்னை ஒத்த நிறத்தினை உடைய உடலில் வெண்மையான திருநீற்றினை அணிந்தவனும், மின்னலைப் போன்ற ஒளியுடைய சடைகளை உடையவனும் உளியால் செதுக்கப்படாது இயல்பான சிவவேட அடையாளத்தை உடையவனும், வளம்மிக்க தில்லை நகரின் சிற்றபலத்தில் திருநடனம் புரிபவனும் ஆகிய எம் தலைவனுடைய திருநடனத்தைக் கண்டு இவ்வுலகம் இன்புறுகிறது.
சாட எடுத்தது தக்கன்தன் வேள்வியிற் சந்திரனை
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனுந்
தேட எடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோநம்மை ஆட்கொண்டதே.
தக்கன் நிகழ்த்திய வேள்வியில் கலந்து கொண்ட சந்திரனைத் தேய்பதற்காகத் தூக்கப்பட்டதும், கூற்றுவனை அழிப்பதற்கு உயர்த்தப்பட்டதும், திருமாலும், பிரமனும் காணமுடியாது தேடியதும், தில்லை சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும் பொருட்டு உயர்த்தப்பட்டதும் ஆகிய சிவபெருமானின் இடது திருவடியே நம்மை ஆட்கொள்ள வல்லது.
– திருநாவுக்கரசர்