வீதி முழுக்க மவுனம்
உச்சரிக்காமல் வர மறுக்கின்றன
வார்த்தைகள்
வீதி நுழைவதே
விலகிக் கிடக்கும் உள்ளங்களை
ஒருங்கிணைக்கத்தான்
எவர் மீதும்
காழ்ப்புணர்வோ
கசப்புணர்வோ இருந்ததில்லை
வார்த்தைகளுக்கு
மேலென்றும் கீழென்றென்றும் பார்த்து
பரவசப்படுவதில்லை
விகற்பங்களை நேசிப்பதுமில்லை
பூசிக்கும் வன்முறைகளை
விரட்டாமல் மவுனிப்பதுமில்லை
எவர் தலையிலும்
அடம்பிடித்தமர்ந்து கொண்டு
அடுத்தவரையும்
அலைக்கழிப்பதில்லை
அடிமைத்தனமும்
சுதந்திரத்தனமும் இல்லாத
விடுதலைத்தனமே பிடிக்கும் வார்த்தைகள்
வேடிக்கைப் பார்ப்பதில்லை
விரிசல் காண்போரையும் கூட
வல்லார் என்றாலும்
வணங்கி கிடப்பதில்லை
நல்லார் என்பதானாலேயே
நத்திக் கிடப்பதுமில்லை
நேர்வழி நடந்து
கூடிக்களித்திடவே விரும்பும்
இந்த வார்த்தைகள்
இது
வெறும் வார்த்தைகளில்லை
வாழ வைக்க வசந்தங்களை விதைத்து
பசுமைக் குலுங்க செய்யும்
இந்த வார்த்தைகள்

கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!