நகரில் புதிதாக துவங்கிய ஹோட்டலில், மதியம் சாப்பிடச் செல்லலாம் என்று முடிவு செய்தார்கள் போலீஸ்காரர்களான வாசுதேவனும் மாரிச்செல்வமும்.
“என்கிட்ட காசு இல்ல, நீ காசு குடு! அடுத்த வாட்டி நான் குடுக்கிறேன்” சொன்னார் மாரிச்செல்வம்.
“காசப்பத்தி நீ எதுக்கு கவலைப்படுற? நாம யாரு? போலீஸ்காரங்க, ஹோட்டலுக்கு போறோம், சாப்பிடுகிறோம்; வர்றோம். நம்மகிட்ட காசு கேட்டுடு வாங்களா? கேட்டா அவன் ஹோட்டல நடத்திட முடியுமா? நீ தைரியமா வா” வாசுதேவன் மீசையை முறுக்கியபடியே செல்ல, இருவரும் அந்த புது ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டு முடித்தார்கள்.
பின் இருவரும் கேஷியர் டேபிளுக்கு வந்தார்கள். வாசுதேவன் பில்லுக்கான பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தார். மாரிசெல்வத்திற்கு அது ஆச்சரியமாக இருந்தது.
“காசு கொடுக்க மாட்டேன்னு வீராப்பா சொன்ன. அப்புறம் கொடுத்துட்டே. என்ன ஆச்சு?”
“அது ஒன்னும் இல்ல. காசு கொடுக்க வேண்டாம்ன்னு தான் நினைச்சேன். கேஷியர் பக்கத்துல, சிசிடிவி கேமரா இருந்துச்சு. நாம எதாச்சும் தகராறு பண்ணா, அந்த காட்சியை வாட்ஸ் அப்ல போட்டு, பேஸ்புக், ட்விட்டர் மாதிரி சமூக வலைத்தளங்களில் போட்டு, நம்மள கிழிகிழின்னு கிழிப்பாங்க. அதனால, தான் காசு கொடுக்க வேண்டியதாப் போச்சு” அசடு வழியச் சொன்னார் வாசுதேவன்.
எம்.மனோஜ் குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!