ஏதோ ஒன்றின்
நிமித்தம்
காத்திருப்பது போல்
ஏதோ ஒன்று
அலைக்கழிக்கும்!
இலைகளை உதிர்த்த
மரமும் ஏனோ
வறண்டு
அலை பாய்கிறது!
பகல்களின்
சுட்டெரிப்பின் பின்னால்
புழுதியோடு பயணம்!
நெடிய இரவின்
தகித்தலும் தொடரும்!
சில
சோர்ந்த உணர்வுகளோடு
விழித்துக் கிடக்கிறது
ஆழ் மனம்!
மழைத்துளி காண
வெந்து காத்திருத்தலின்
பெருந்தவப்பலன்
ஏதுமில்லை!
தென்றலுடன் ஏதும்
சமரசமில்லை!
உதிர்தலும்
கிழிதலுமான
பல
அனல் தருணங்கள்
ஆணியடிக்கின்றன!
இயற்கைக்கு மாறான
தவறுகளைத் திருத்த
திரும்ப முடியா
இறந்தகாலம்!
ஒரு
பசுமைப்பொழுதுக்கான
பெரும் ஏக்கத்தில்
ஆச்சரியமாய்
பங்கு கொள்கிறது
பெரு வெப்பமும்!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!