வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் மதுரையில் வெள்ளியம்பலம் அமைந்ததையும், வெள்ளியம்பலத்தில் மாணிக்க பீடம் ஏற்பட்டதையும், அதன்மீது இறைவனார் ஆடிய திருநடனம் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது.

சிவனின் ஐந்து சபைகளுள் ஒன்றான வெள்ளியம்பலம் மதுரையில் ஏற்பட்ட வரலாற்றினை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் ஆறாவது படலம் ஆகும்.

திருமண விருந்துண்ண அழைத்தல்

உலகத்தின் இறைவனான சுந்தர பாண்டியருக்கும், உமையம்மையாகிய தடாதகைக்கும் மதுரையம்பதியில் திருமணம் இனிது நிறைவேறியது.

திருமணம் முடிந்தவுடன் திருமணத்திற்கு வந்திருந்த மன்னர்கள், தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட எல்லோரையும் விருந்துண்ண சுந்தர பாண்டிய‌னார் அழைப்பு விடுத்தார்.

அவரின் அழைப்பினை ஏற்று எல்லோரும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி விருந்துண்ண வந்தனர்.

 

பதஞ்சலி, வியாக்கிரதபாதர் ஆகியோரின் வேண்டுதல்

திருமண விருந்தில் பங்கேற்க வந்தவர்களுள் பதஞ்சலியும், வியாக்கிரதபாதரும் அடங்குவர். இவ்விருவரும் தில்லை பொன்னம்பலத்தில் உள்ள தில்லை அம்பலவாணரின் திருநடனத்தினைக் வழிபட்ட பின்பு உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டவர்கள்.

அம்மை, அப்பனின் திருமணத்திற்காக மதுரை வந்திருந்தவர்கள், இறைவனான சுந்தர பாண்டியரிடம் “எங்களின் தந்தையே. நாங்கள் பொன்னம்பலத்தில் தாங்கள் ஆடியருளும் திருநடனத்தை தரிசித்த பின்புதான் தினமும் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டுளோம்.” என்று கூறினர்.

 

வெள்ளியம்பலத் தோற்றம்

முனிவர்கள் கூறியதைக் கேட்ட சுந்தர பாண்டியனார் “உலகம் என்ற மனிதனுக்கு அழகிய தில்லை இதயம் என்றால் மதுரை துவாத சாந்தத் தானம் ஆகும். ஆதலால் தில்லை பொன்னம்பலத்தில் நிகழ்த்திய திருநடனத்தை இம்மதுரைப்பதியில் யாம் செய்து காட்டுவோம்.” என்று கூறினார்.

அதனைக் கேட்ட முனிவர்கள் இருவரும் “கருணைக் கடலே உலகம் என்ற மனிதனுக்கான ஏனைய உறுப்புக்கள் யாவை?” என்று வினவினர்.

அதற்கு இறைவனாரும் “உலகனைத்தும் உருவமாகிய விராடபுருடன் என்னும் மனிதனுக்கு, செல்வம் நிறைந்த திருவாரூர் மூலஆதாரமாகும்.

திருவானைக்காவல் சுவாதிட்டானம் (மறைவிடம்) ஆகும். திருவண்ணாமலை மணிப்பூரகம் (நாபி) ஆகும். நீங்கள் வணங்கிவரும் தில்லை அநாகதம் (இதயம்) ஆகும்.

திருக்காளத்தி ஒப்பில்லாத கண்டம் (விசுத்தி) ஆகும். காசித்தலம் ஆஞ்ஞை (புருவ மத்தியம்) ஆகும். கயிலைமலை பிரமரந்திரம் (சுழிமுனையின் உச்சியாகிய இடம்) ஆகும்.

இம்மதுரையம்பதி துவாத சாந்தம் (உச்சிக்கு மேற் பன்னிரெண்டு அங்குல அளவில் உள்ள பாகம்) ஆகும்.” என்று கூறினார்.

பின் முனிவர்களோடு திருக்கோவிலினுள் சென்றார். அங்கே பொன்னாலாகிய விமானத்தின் கீழ்புறத்தில் வெள்ளியம்பலம் தோன்றியது.  அதன்மேல் மாணிக்க பீடம் ஒன்று தோன்றியது.

 

இறைவனாரின் திருநடனம்

ஒளிவீசிக் கொண்டிருந்த வெள்ளியம்பல மாணிக்க பீடத்தின் மேல் பாரின் இருளை அகற்றும் ஒளிக்கதிர் போல் அடியர்களின் அஞ்ஞானமாகிய இருளை விரட்டும் பொருட்டு ஞானஒளியின் வடிவாய் சிவபெருமான் தோன்றினார்.

திருநந்தீஸ்வரர் மத்தளம் கொட்ட, திருமால் இடக்கை என்னும் இசைக்கருவியை வாசிக்க, தும்புரு, நாரதர் இருவரும் இசைப்பாட்டு பாடினர்.

கலைமகள் சுருதி கூட்ட, பிரம்மதேவர் யாழினை மீட்டி கீதங்கள் பாடினார். சிவகணங்கள் மொந்தை, தண்ணுமை என்னும் கருவிகளை முழங்கினர்.

இறைவனார் பெரிய விழிகளைக் கொண்ட முயலகன் மேல் அவன் விழிகள் பிதுங்குமாறு முதுகின் மேல் வலது காலினை ஊன்றி காட்சியளித்தார்.

இறைவனாரின் வலது மேற்கையில் உடுக்கையும், இடதுமேற்கையில் தீச்சுவாலையும் காணப்பட்டது.

அவரின் வலகீழ்கை அடைக்கலம் தந்தவாறும், இடதுகீழ்க்கை குஞ்சித பாதத்தைக் காட்டியாவாறும் இருந்தன. அவரின் கூந்தல் மற்றும் ஆடைகள் காற்றில் அசைந்தவாறு இருந்தன.

அழகிய கண்களைக் கொண்ட உமையம்மை ஒருபுறம் ஒதுங்கி நிற்க, அவ்வம்மையைப் பார்த்த வண்ணம் இதழ்களில் புன்னகையை ஏந்தி இறைவனார் திருநடனம் புரிந்தார்.

 

இறைவனாரின் திருநடனத்தினை காணுதல்

சுந்தரபாண்டியனார் ஆடல்வல்லானாக வெள்ளியம்பலத்தில் ஆடிய நடனத்தைக் கண்ட முனிவர்களாகிய பதஞ்சலியும், வியாக்கிரதபாதரும் நெஞ்சுருகி நின்றனர். தங்களின் பிறவிப்பயனை அடைந்துவிட்டோம் என்று எண்ணினர்.

பதஞ்சலி, வியாக்கிரதபாதர் மட்டுமல்லாது திருமணத்திற்கு வருகை புரிந்த பிற முனிவர்கள், அரசர்கள், தேவர்கள், கந்தவர்கள், கிம்புருடர்கள், யோகிகள் உட்பட எல்லோரும் இறைவனாரின் திருக்கூத்தினை கண்டு களித்தனர்.

முனிவர்கள் ஆடல்வல்லானை நோக்கி “உலக இயக்கங்களுக்கு காரணமானவரே, தாங்களின் திருநடனத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து விட்டோம். அடியேன்களின் வேண்டுகோளினை ஏற்று வெள்ளியம்பலத்தில் தாங்கள் ஆடிய திருநடனத்திற்கு முதல் வணக்கம்” என்றனர்

“ஊழிமுதல்வனே, உயிர்களின் பிறவிக்கடலினை தீர்ப்பவனே, அடியார்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைக்கும் எங்கள் தந்தையே உங்களுக்கு வணக்கம். இறைவனாரின் இடதுபாகத்தில் உறைந்திருக்கும் உமையம்மைக்கு வணக்கம்” என்று பலவாறு போற்றி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர்.

 

இறைவனின் திருஉள்ளம்

இறைவனின் திருநடனத்தினைக் கண்டு மகிழ்ந்து போற்றிய பதஞ்சலி, வியாக்கிரதபாதர் ஆகியோர்களை நோக்கி இறைவனார் “நல்லது. நீங்கள் விரும்பியது யாது?” என்று வினவினார்.

அதனைக் கேட்ட இருவரும் “எங்களின் இறைவா. தாங்கள் இவ்வெள்ளியம்பலத்தினுள் எப்போதும் திருநடனத்தினை நிகழ்த்தி உயிர்களை மாயையிலிருந்து விடுபடச்செய்து அவைகளுக்கு நற்கதி அளிக்க வேண்டும்.” என்று வேண்டினர்.

அதற்கு இறைவனார் “செந்தமிழை வளர்த்து ஓங்கச் செய்யும் இப்பாண்டிய நாடு செய்த தவப்பயனின் காரணமாக நீங்கள் விரும்பிய வரத்தினை அளித்தோம்” என்று அருளினார்.

பதஞ்சலி முனிவர் இறைவனாரிடம் “முக்காலமும் ஆனவரே, ஆதியே, எம்பெருமான தங்களின் திருநடனத்தைக் நேரே கண்டு களித்த அனைவருக்கும் இப்பூமியில் மீண்டும் பிறவாத ஒப்பற்ற சிவகதியை அடைய அருள்புரிய வேண்டும்” என்று வேண்டினார்.

சிவபெருமானும் அதற்கு இசைந்து அருள்புரிந்தார். இதனைக் கேட்ட சிவகணத்தவர் சிவபெருமானை கொண்டாடி மகிழ்ந்தனர். முனிவர்கள் ஆனந்தம் அடைந்தனர்.

 

வெள்ளியம்பலத்தில் இறைவனின் திருநடனத்தை தரிச்சிப்பதன் பலன்

மார்கழிமாத திருவாதிரை முதல் அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பொற்றாமரையில் நீராடி, வெள்ளியம்பலத் திருநடனத்தை தரிசனம்செய்து அங்கேயேதங்கி திருவைந்தெழுத்தை நூற்றுஎட்டுமுறை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் எண்ணிய வரங்களை எல்லாம் பெறலாம்.

 

இப்படலம் கூறும் கருத்து

வாழ்க்கை வாழ்வதற்கே‘ என்பதே இப்படலத்தின் மறைமுகக் கருத்து.

ஆடலும் பாடலுமாக நாம் வாழ்வை ஆனந்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இப்படலம் உணர்த்துகின்றது.

உற்றார் உறவினருடன் கூடி நல்ல முறையில் வாழ்வை அனுபவிக்கத் தெரிய வேண்டும் என்பதை வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் சொல்கிறது.

முந்தைய படலம் தடாதகையாரின் திருமணப் படலம்

அடுத்த படலம் குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

– வ.முனீஸ்வரன்

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

“வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்” மீது ஒரு மறுமொழி