மதுரகவி ஸ்ரீசுப்பிரமணிய முனிவர் சைவத்தமிழ் தழைக்கவும், தொட்டிக்கலை எனும் திருத்தலம் பெருமைப்படவும் வாழ்ந்தவர்.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு அருகாமையிலுள்ள ஊர்தான் தொட்டிக்கலை. தொன்மைச் சிறப்புகளும், ஆன்மீக வரலாறுகளும் மிகுதியாக உள்ள ஊராக இவ்வூர் திகழ்கின்றது.
திருவாவடுதுறை ஆதீனப் புலவர்கள் இவ்வூரிலுள்ள திருக்கோயில்கள் குறித்துப் பல நூல்கள் எழுதியுள்ளனர். கொடை வள்ளல்கள் இவ்வூரில் பலர் இருந்தமையால் அவர்களின் ஆதரவால் நிறையப் புலவர்கள் தமிழ் ஆராய்ந்து பல நூல்களை இவ்வூரிலிருந்து இயற்றியுள்ளனர்.
பழந்தமிழ் இலக்கியங்கள் இவ்வூரைக் கலசை, கோவிந்தபுரம், தொட்டிக்கலை, எனும் பெயரால் அழைக்கின்றன.
சிற்றிலக்கிய வகையிலான பக்தி நூல்களில் தொட்டிக்கலை இயற்கை வளமும், செல்வ செழிப்பும், பக்தி மணமும் நிறைந்த ஊராகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகு சிறப்புடைய ஊரில் வாழ்ந்தவர் தான், மதுரகவி ஸ்ரீசுப்பிரமணிய முனிவர்.
வாழ்க்கை வரலாறு
கி.பி 1781 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் எனும் ஊரில் பிறந்தவர் சுப்பிரமணியர்.
தாம் படிக்கும் காலத்திலேயே, மிகச் சிறந்த நுண்ணறிவுடன் கல்வி கற்று அக்காலகட்டத்திலேயே பாடல் புனையும் திறனோடு இருந்தார்.
சித்தாந்த சைவராகத் தன்னை உருவாக்கிக் கொண்ட சுப்பிரமணியர், இளம் வயதிலேயே துறவு பூண்டு வாழ்ந்தார்.
திருவாவடுதுறை ஆதீனப் புலவர் ஸ்ரீ சிவஞான முனிவரிடம் மிகுந்த பற்றுக் கொண்டு சீடராகித் தமிழ் நூல்களும் இலக்கணங்களும் கற்றுத் தேர்ந்தார். சைவ சித்தாந்த நூல்கள் பலவற்றைப் படித்துத் தெளிந்தார்.
திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்த இளைய பட்டமான அம்பலவாண தேசிகரிடம் ஞானஉபதேசம் பெற்றுச் சன்னியாசம் அடைந்தார்.
இவர் தமிழகத்திலுள்ள பல ஊர்களுக்குச் சென்று, அங்குள்ள திருக்கோயில் அனைத்திலும் வழிபட்டு வந்தார். அந்தந்த திருக்கோயில்கள் குறித்து இலக்கியங்களையும் தனிப்பாடல்களாக எழுதி உள்ளார்.
இவரின் தவ வலிமையால் முருகப் பெருமானைப் பாடி வணங்கி, பல மந்திர தந்திர சக்திகளை எல்லாம் பெற்றார் எனும் செய்தி செவிவழிச் செய்தியாகத் தொடர்ந்து நிலவி வருகிறது. இதையே இன்றளவும் சமூகத்தில் காணலாம்.
இவர் குறித்த இரண்டு அற்புதக் கதைகளை உ.வே.சா அவர்கள் தாம் பதிப்பித்த கலசைக் கோவை எனும் நூலில் சொல்கின்றார்.
அதாவது சுப்ரமணியர் திருவிருத்தங்கள் பாடிக் கண் பார்வையற்ற ஒருவருக்குக் கண் பார்வையையும் குஷ்டமுடைய ஒருவருக்குக் குஷ்டநோயைப் போக்கியும் அருள் பாலித்தார் என்பதாகும்.
தமிழகத் திருத்தலங்களைத் தரிசித்து வரும்பொழுது, தொட்டிக்கலை எனும் ஊரிலுள்ள சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் அவருக்கு இறைவனோடு ஒன்றிப் பேசுகிற மனநிலை ஏற்பட்டது. எனவே அவர் இத்திருத்தலத்திலேயே தங்கி விட்டார்.
ஸ்ரீசுப்பிரமணிய முனிவருக்கு அனைத்து வகைகளிலும் வசதிகள் செய்து கொடுத்து இவரைப் பல நூல்கள் எழுத செய்த வள்ளல் இவ்வூரைச் சேர்ந்த வேதாசலம் முதலியார் என்பவராவார். இவருடைய வழியில் தோன்றிய கேசவ முதலியாரும் உதவினார்.
ஸ்ரீசுப்பிரமணியரையும் மற்ற புலவர்களையும் ஆதரித்துக் கோயிலுக்கு முன்பாக மடம் அமைத்து கொடுத்து ஆதரித்துள்ளனர்.
சிவஞான முனிவர், கச்சியப்ப முனிவர், ரங்காபுரம் ஷண்முகக் கவிராயர், குமாரசுவாமி கவிராயர், ராமானுஜ கவிராயர் ஆகியோர்களையும் இவ்வள்ளல்கள் இவ்வூரில் உள்ள மடத்தில் தங்க வைத்து ஆதரித்து வந்தனர்.
திருவாவடுதுறை சிவஞான முனிவர், ஸ்ரீசுப்பிரமணிய முனிவரின் அன்பினால் தொட்டிக்கலை ஊரிலேயே பலகாலம் தங்கி இவ்வூர் தலச்சிறப்புக்கள் குறித்துச் சில நூல்கள் எழுதினார்.
ஞானகுருவையே கடவுளாகக் காணுதல்
சிவஞான முனிவர் மேல் அளவு கடந்த பாசமும், அன்பும் கொண்டிருந்தவர் ஸ்ரீசுப்பிரமணியர். அவருக்காகவே வாழ்ந்து, அவரையே நினைத்து, இன்புற்று, அவர் சொல்லே வேதம் என வாழ்ந்து இறைவனைக் குருவின் வடிவில் கண்டவர். எனவேதான் சிவஞான முனிவர் மேல் கீர்த்தனைகள் மற்றும் துதிவிருத்தங்கள் எனப் பல நூல்கள் எழுதினார்.
சிவஞானமுனிவர் இறந்த செய்தி கேட்டு ஆற்ற முடியாமல் பல பாடல்கள் இயற்றியும், சிவஞான முனிவரின் திருஉருவத்தைச் சிலையாகச் செய்து கோயில் முன்பாக அதை வைத்து தினந்தோறும் வழிபட்டும் வந்தார்.
தனிப்பாடல்களாகப் பல திருத்தலங்களில் உள்ள இறைவனைக் குறித்து நிறையப் பாடல்கள் பாடியுள்ளார். இவற்றில் குறைந்த அளவுப் பாடல்களே இதுவரை தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்ப்பா மஞ்சரி தொகுப்புகளை எழுதி வெளியிட்ட உ.வே.சா அவர்களின் தொகுப்பில் ஸ்ரீசுப்பிரமணியரின் தனிப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நூல் தொகுப்புக் களஞ்சியம் எனும் நூலிலும் ஸ்ரீசுப்பிரமணியரின் ஒன்பது பிரபந்தங்கள் தொகுக்கப்பட்டுள்ளன எனும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நூலை அரசஞ் சண்முகனார் அரும்பாடுபட்டு உருவாக்கித் தந்துள்ளார்.
மதுரகவி ஸ்ரீசுப்பிரமணிய முனிவரின் வேறு பெயர்கள்
ஸ்ரீசுப்பிரமணியரை அவர் தம் நூல்களில் பெயரிடும் பொழுது, அவரின் மேன்மை கருதிப் பதிப்பித்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடைமொழியால் சுப்பிரமணியரை உயர்த்திப் பெயரைப் பதிவு செய்துள்ளனர்.
அவ்வகையில், ஸ்ரீசுப்பிரமணியரை மாதவச் சுப்பிரமணியர், மதுரகவி ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சுப்பிரமணிய முனிவர், ஸ்ரீ சுப்பிரமணியத் தம்பிரான் என்று நூல்களில் பதிவு செய்துள்ளனர்.
எழுதிய நூல்கள்
தொட்டிகலை ஊரில் உள்ள விநாயகர் கோயில், பெருமாள் கோயில், சிவன்கோயில் ஆகியவற்றை, உலகம் முழுவதும் அறியும் வண்ணம் பாடல்களால் பாடியுள்ளார் மதுரகவி ஸ்ரீசுப்பிரமணிய முனிவர்.
மடத்திலிருந்த இவரும், சிவஞான முனிவரும் இவ்வூரிலுள்ள சான்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தினமும் சைவசித்தாந்த பாடங்களைப் பாடம் எடுத்துள்ளனர். குறையாத கருத்துப் புதையல்களைத் தமது நூல்களில் கூறிச் சுப்பிரமணியர் மாணவர்களை ஆற்றுப்படுத்தவும் செய்தார்.
இவர் இயற்றிய பிரபந்தங்கள் எனும் தொகுப்பு தமிழ் நூல் தொகுப்புக் கலைக்களஞ்சியம் எனும் நூலில் காணப்படுகின்றது.
அதில் கூறப்பட்டுள்ள நூல்களின் விவரம்
தொட்டிக்கலை மதுரகவி சுப்பிரமணிய முனிவர் பிரபந்தங்கள் – (முதல் பகுதி) திருவாவடுதுறை ஆதீன வெளியீடு.
விசய ஆவணி-விநா யக சதுர்த்தி-1953.
ஆய்வு: த.ச. மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
பாரதி அச்சுக் கூடம்,
குடந்தை.
நூல்கள்:
• திருக்குற்றாலச் சித்திரை சபைத் திருவிருத்தம்,
• திருத்தணிகைத் திருவிருத்தம்,
• சுப்பிரமணியர் திரு விருத்தம்,
• மாதவச் சிவஞான யோகிகள்மீது கீர்த்தனையும் பாடல்களும்,
• திருச்சிற்றம்பலத் தேசிகர் சிந்து,
• அம்பலவாண தேசிகர் பஞ்ச ரத்னமாலை,
• அம்பல வாண தேசிகர் ஆனந்தக் களிப்பு,
• திரு மாளிகைத் தேவர் திருவிருத்தங்கள்,
• ஞான மா நடராசர் கட்டியம் –
என்னும் ஒன்பது நூல்களின் திரட்டு இதுவாகும்.
கலசைக் கோவை எனும் ஸ்ரீசுப்பிரமணியரின் நூலைப் பதிப்பித்த உ.வே.சா. அவர்கள் இவர் எழுதியதாகக் கூறும் நூல்களின் பட்டியல்:
1. கலைசைக்கோவை
2. கலைசை சிலேடை வெண்பா
3. கலசைச் சிதம்பரேசர் சந்நிதிமுறை
4. கலசைச் சிதம்பரேசர் வண்ணம்
5. கலசைச் சிதம்பரேசர் பஞ்சரத்தினம்
6. கலசைச் சிவகாமியம்மை பஞ்சரத்தினம்
7. கலசைச் சிதம்பரேசர் பரணி
8. கலசைச் சிதம்பரேசர் கட்டியம்
9. திருவாவடுதுறை கோவை
10. திருக்குற்றாலச் சித்திரசபை திருவிருத்தம்
11. பழநிக் குழந்தை வேலர் பஞ்சரத்தின மாலை
12. ஸ்ரீ சுப்பிரமணியர் திருவிருத்தம்
13. திருத்தணிகைத் திருவிருத்தம்
14. வடதிருமுல்லைவாயில் கொடியிடை அம்மை பிள்ளைத்தமிழ்
15. ஆயலூர் முருகர் பிள்ளைத்தமிழ்
16. திருச்செந்தில் சந்த விருத்தம்
17. ஆவினன்குடிக் கைலாயநாதர் பதிற்றுப்பத்தந்தாதி
18. திருமாளிகைத்தேவர் திருவிருத்தங்கள்
19. திருச்சிற்றம்பல தேசிகர் சிந்து
20. திருச்சிற்றம்பல தேசிகர் சந்த விருத்தம்
21. அம்பலவாண தேசிகர் பஞ்சரத்தின மாலை
22. அம்பலவாண தேசிகர் ஆனந்தக் களிப்பு
23. அம்பலவாண தேசிகர் வண்ணம்
24. சிவஞான முனிவர் துதிவிருத்தங்கள்
25. சிவஞான முனிவர் கீர்த்தனை
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, கவிராட்சதர் கச்சியப்ப முனிவர், உ.வே.சா, ஆறுமுகநாவலர், புலவர் ச.தண்டபாணி தேசிகர், த.ச. மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆகியோர் திருவாவடுதுறை ஆதீனப் புலவர்களாய் இருந்தமையால், தம் மடத்தைச் சார்ந்த ஸ்ரீசுப்ரமணியர் எழுதிய நூல்களை பிற்காலத்தில் வெளிக்கொண்டு வருவதற்கும், உலகம் போற்றும் வகையிலும் வழிவகைச் செய்துள்ளனர்.
ஸ்ரீசுப்பிரமணியரைப் போற்றும் விதமாக இன்றளவும் தொட்டிக்கலை சிதம்பரேஸ்வரர் கோயிலில் இவரின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுத் தினந்தோறும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
இவரின் ஞானகுருவான சிவஞான முனிவரின் திருவுருவமும் சிலையாக வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
சைவத்தமிழ் தழைக்கவும், தொட்டிக்கலை எனும் திருத்தலம் பெருமைப்படவும், தம்மை ஆதரித்த கொடைவள்ளல்கள் பெயரும் புகழும் நிலைத்து நிற்கவும், ஞானகுருவையே கடவுளாகப் பாவித்து வணங்கிய ஸ்ரீசுப்பிரமணியரை நாமும் போற்றி வணங்குவோம்.
சிதைந்து போயிருந்த தொட்டிக்கலை எனும் இத்திருத்தலத்தைத் தற்காலத்தில் பெரும் பொருள்செலவில் செப்பனிட்டு அழகாகத் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்த பாடி எனும் ஊரைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியன் அவர்கள் புலவரின் நூல்களை மறுபதிப்புச் செய்திட முனைந்துள்ளார். அவரைப் போல் தமிழ்க் கொடைவள்ளலாக அனைவரும் மாறுவோம்.
ஸ்ரீசுப்பிரமணியரின் தமிழ்ப்பணியைச் சமூகம் மறந்திடாமல் நினைவு கொண்டு அடுத்த தலைமுறைக்கு அவரைக் கொண்டு சென்று சேர்ப்போம்.
மதுரகவியின் பாடல்வரிகளில் சில:
சிவபெருமான் பெருமை
சீர்பூத்த தாமரை போற் செங்க ணெடுமாலுந்
தார்பூத்த மார்பிற் சதுர் முகனும் – ஏர்பூத்த
பூப்பொலிந்த சேவடியும் பொன்முடியுங் காண்பரிய
தீப்பிழம்பாய் நின்ற திருவுருவன் – கூப்புமிரு
கையுடையா ருள்ளக் கமலா லயமுடையான்
பொய்யுடையா ருள்ளம் புகுதாதான் – மெய்யுடைய
ஏகன் அநேக ன்இரண்டற் றகலாத
போக மளிக்கும் பொருளானோன் – போகமுறும்
எல்லா வுயிர்க்கு முயிராக யவரவர்கள்
செல்லுங் கருத்தில் செறிவானோன் – வல்லார் சொல்
வாக்குமனா தீதன் மறைகளுக்கு ம் எட்டாதான்
போக்குவர வில்லாத பூரணத்தன் – நோக்கரிய
முக்குணத்தின் மூவரையுந் தோற்றிமுறை யேயவர்க்குத்
தக்கவகை முத்தொழிலுந் தானளிப்போன் – மிக்க
உருவ ன்அருவ ன்உருவருவ மில்லான்
இருள னொளிய னிவையில்லான் – பொருவில்லா
ஐந்தொழிலுஞ் செய்தே யழகியசிற் றம்பலத்து
நந்தலிலா ஞான நடம்புரிவோன் – அந்தமிலா
நித்த ன்அநாதி நிமலன் பிறவாத
சுத்த னறிவன் சுகாதீதன் – அத்துவிதன் (குலசை உலா)
முருகன் பெருமை
கண்ணேறு வாராது பிணியொன்று சேராது
கவலைப்படாது நெஞ்சம்
கலியாது சலியாது நலியாது மெலியாது
கலியென்ற பேயடாது
விண்ணேறு மணுகாது கன்மவினை தொடராது
விஷமச்சுரம் வராது
வெய்யபூ தம்பில்லி வஞ்சனைக டொடரா
விஷம்பரவு செந்துமடரா
எண்ணேறு செனனங்கள் கிடையாது காலபய
மெள்ளளவுமே யிராதிவ்
வேழைக் கிரங்கியரு டெய்வமுனை யல்லாம
லின்னமொரு தெய்வமுண்டோ
தண்ணேறு கங்கைமலை மங்கையரு டங்கமே
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே ( சுப்பிரமணியர் திருவிருத்தம்)
அடுத்த வாரம் இவரைப்போன்ற ஒரு தமிழ்ப்புலவரின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்வோம்.
புதையல் தேடுவோம்…

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
போனவாரம் பூவிருந்தவல்லி பூவை கல்யாணசுந்தரம், இந்த வாரம் திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு மதுரகவி ஸ்ரீசுப்பிரமணிய முனிவர்.
எல்லோரும் இங்கேதான் இருந்து தெளிந்து வாழ்ந்து, வேண்டி, வாழ்த்தி உருவத்தால் மறைந்து உணர்வால் தெரிந்து மிளிரும் கதா நாயகர்கள் ..
நெஞ்சம் கலியாது சலியாது நலியாது மெலியாது…
கலியென்ற பேயடாது…
விண்ணேறு மணுகாது கன்மவினை தொடராது…
விஷமச்சுரம் வராது…
வராமலே போகட்டும்! வறுமையும் ஒழியட்டும்!
மதுரகவி ஸ்ரீசுப்பிரமணிய முனிவர்… தமிழனுடைய சிறப்பையும் பெருமையையும் உலகறியச் செய்த மாமனிதர்கள் வெளிக்கொண்டுவரும் எண்ணம் போற்றுதற்குரியது. அவர்கள் செய்த அளப்பரிய தியாகத்தால், இன்று தமிழ் ஒரு அங்குலம் உயர்ந்து நிற்கிறது.
மகாகவி ஸ்ரீ சுப்பிரமணிய முனிவர் சிந்தனையை இரண்டு வகையில் உணர முடிகிறது. ஒன்று தமிழ் மீது கொண்ட ஈடுபாடு மற்றொன்று தவக்கோலம்.
இரண்டையும் மிகச்சரியாக, ஒரு தேரில் பூட்டப்பட்ட இரு குதிரைகளைப் போல லாவகமாக பயணித்திருக்கிறார்.
அந்தப் பயணத்தின் உச்சம் தான் உங்களுடைய இந்த ஆய்வுப்பணி. சுப்ரமணிய முனிவரை குறித்தான வரலாற்றை அறியாதவர்களுக்கு அறிவிக்கவும், தெரியாதவர்களுக்கு தெரிவிக்கவும் அதற்காக எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கது.
ஒரு நீண்ட பட்டியலையே தேடி தேடித் தொகுத்து அளித்து அவரின் உழைப்பையும் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தையும் உலகறிய செய்வது மெச்சத் தகுந்தவை
அதிலும் குறிப்பாக மிகச்சிறந்த வரிகளை மேற்கோள் காட்டி இன்னும் எளிமையாக முனிவரின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கும் துணை நிற்கிறது.
மனமார பாராட்டுகிறேன்.
மகிழ்கிறேன்.
வாழ்த்துக்கள் அய்யா