இழந்ததும் ஈட்டியதும் – கவிதை

சுதந்திரக் காற்றை சுவாசிப்பதை இழந்தோம்
சுத்தத்தின் மகத்துவத்தை ஈட்டினோம்

ஆடம்பர வாழ்க்கையை இழந்தோம்
ஆரோக்கிய வாழ்க்கையை ஈட்டினோம்

கரும்பலகை வகுப்புகளை இழந்தோம்
காணொளி வகுப்புகளை ஈட்டினோம்

கையை இறக்கி குலுக்குவதை இழந்தோம்
கையை உயர்த்தி கும்பிடுவதை ஈட்டினோம்

உணவக உணவை ருசிப்பதை இழந்தோம்
ஊறில்லா வீட்டு உணவை ஈட்டினோம்

உறவுகள் ஒன்று கூடிக் களிப்பதை இழந்தோம்
உறவுகளின் முக்கியத்துவம் குறித்த உணர்வினை ஈட்டினோம்

மண்டபங்களில் மகிழும் திருமணங்களை இழந்தோம்
மணப்பெண் பெயரில் நல்லதொரு சேமிப்பை ஈட்டினோம்

பேரங்காடி சென்று வேடிக்கை நகரில் விளையாடுவதை இழந்தோம்
வீட்டிலேயே பல்லாங்குழி தாயம் விளையாடுவதை ஈட்டினோம்

வாரம் ஒருமுறை கடை சென்று பொருள் வாங்குவதை இழந்தோம்
இப்படியும் சிக்கனமாய் வாழ முடியும் என்ற அறிவை ஈட்டினோம்

தினம் தினம் அசைவம் உண்பதை இழந்தோம்
அனைவரும் சைவமாகக்கூட வாழலாம் என்ற ஞானத்தை ஈட்டினோம்

சங்கவை மணிசேகரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.