உன்னில் இருந்து உன்னைப் பார்!

அன்பு நிறைந்த மாணவக் கண்மணிகளுக்கு,

நலமும் வாழ்த்தும்!

என்ன சார்! தலைப்பு புரியாத மாதிரி இருக்குன்னு பதறாதீர்கள்.

உங்கள் உள்ளங்கையைத் திறந்து பாருங்கள்.

விரல்களிலும் உள்ளங்கைகளிலும் கிறுக்கியது போல் கோடு கோடா இருக்கும்.

உங்கள் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அம்மா மற்றும் அப்பா கையை திறந்து அந்த ரேகைகளை பாருங்கள்.

உங்கள் கைரேகையும் உங்கள் குடும்பத்தினர்களின் கைரேகைகளும் ஒரே மாதிரி இருக்குமா? வெவ்வேறாக இருக்குமா? என்றால் நிச்சயமாக ஒன்றாக இருக்காது என்ற பதில் தான் கிடைக்கும்.

சரி! உங்க தெரு, ஏரியா, மாவட்டம், மாநிலம், நாடு மற்றும் உலகம் எங்கும் இப்போது வாழ்கிறவர்களில் அல்லது இறந்தவர்களில் யாரேனும் ஒரு நபரின் கைரேகை இன்னொருவரின் கைரேகையோடு ஒன்றாக இருக்குமா என்றால் நிச்சயமாக இருக்காது.

அப்படி இருந்தால் கைரேகையை வைத்து கணக்கிடப்படும் ஆதார், ரேஷன் கடைகள் போன்ற பல விஷயங்கள் செயலிழந்து போயிருக்கும்.

உலகில் தோன்றிய, தற்போது இருக்கின்ற எந்த ஒரு மனிதரின் கைரேகைகளும் மற்ற மனிதர்களின் கைரேகை போல் இல்லாமல் இறைவன் படைத்திருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

இக்கட்டுரையை படிக்கின்ற நீங்கள் உட்பட ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் திறன் படைத்தவர்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் புதுமையானவர்கள் என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும்.

பொதுவாக நன்மையைவிட தீமைக்கு வசியம் அதிகம் என்பதாலே எப்போதுமே நம்மை நாம் தரம் தாழ்த்தி யோசிப்போம்.

அதுதான் இப்போதும் உங்களை நீங்கள் யார்?

உங்களுக்குள் உள்ள திறமை என்ன? என்பதை தெரிய விடாமல் தடுக்கிறது.

இன்னும் புரியும்படி உதாரணத்தோடு சொல்கிறேன்.

நான் உங்களை அழைத்து, “தம்பி இங்கிருந்து கால் கிலோ மீட்டர் ஓடி விட்டு வாருங்கள்” என்று சொல்கிறேன். நீங்களும் ஓடி விட்டு வந்தீர்கள்.

அதற்கடுத்து உங்களுடைய நண்பர் ஒருவர் வந்தார். உங்களையும் உங்கள் நண்பரையும் அழைத்து இப்போது உங்கள் இருவருக்கும் ஓட்டப் பந்தயம் வைக்கப் போகிறேன்.

இங்கிருந்து கால் கிலோ மீட்டர் தூரம் ஓடிவிட்டு வாருங்கள். முதலாவதாக யார் வருகிறீர்களோ அவர்களுக்கு மூன்று ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசாக உங்கள் கையில் தந்து விடுகிறேன் என்று சொல்கிறேன். அந்த 3000 ரூபாயை உங்கள் கண்களில் காட்டி எனது சட்டை பையில் வைத்து விட்டேன்.

போட்டியும் முடிந்தது.

நீங்கள்தான் ஜெயித்தீர்கள்.

3000 ரூபாயையும் பரிசாக பெற்றுக் கொண்டீர்கள்.

நீங்கள் சிறுவயதில் இரவு நேரங்களில் தெருவோரத்தில் செல்லும்போது நாய் துரத்தி ஓடிய அனுபவம் இருக்கிறதா?

விருதுநகரைச் சார்ந்த ஒரு குக்கிராமத்தில் பிறந்த எனக்கு அந்த அனுபவம் உண்டு.

உங்களுக்கு இருக்கிறதா? அப்படி இருந்தால் பழைய நினைவுகளை மீட்டெடுங்கள்.

இல்லையெனில் அது போன்ற ஒரு நிகழ்வை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நாய் துரத்துகிறது.

ஓடுவீர்கள்…

ஓடுவீர்கள் ஓடுவீர்கள்…

பல கிலோமீட்டர் தூரம் தாண்டி ஓடுவீர்கள்…

திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடுவீர்கள்…

ஒரு கட்டத்தில் ‘பொத்’தென்று கீழே விழுவீர்கள். திரும்பிப் பார்ப்பீர்கள்.

அங்கே உங்களை துரத்தி வந்த அந்த நாய் இருக்காது.

‘அப்பாடா!..’ என்று பெருமூச்சு வெளிவரும்.

உங்கள் காலைப் பார்ப்பீர்கள். நெருஞ்சி முற்கள் குத்தி இருக்கும்; ரத்தம் அங்கங்கே கசிந்து இருக்கும். அனைத்தையும் தட்டி விட்டு எழலாம் என்றால் உங்கள் உள்ளங்கைகளில், முழங்கைகளில் இரத்தம் கசிந்து மண் படர்ந்து இருக்கும். அதை தட்டி விட்டு எழ முயற்சிப்பீர்கள்.

உங்களால் இயலாது. கஷ்டமாக இருக்கும்.கஷ்டத்தோடு நொண்டி நொண்டி எழுந்து விடுவீர்கள். எதிரில் பார்ப்பீர்கள். ஏழு அடி அல்லது எட்டு அடியில் சுவர் ஒன்று இருக்கும். நீளவாக்கில் பார்ப்பீர்கள். அது பல கிலோ மீட்டர் தூரம் தாண்டி போகும்.

நடந்தது என்ன தெரியுமா?

அந்த எட்டு அடி சுவரை நீங்கள் தாண்டி இந்த பக்கம் வந்து விட்டீர்கள். உங்களை துரத்தி வந்த நாயால் அதைத் தாண்ட முடியாமல் அந்தப் பக்கம் இருந்ததால் நீங்கள் பிழைத்தீர்கள்.

சரி! விஷயத்திற்கு வருகிறேன்.

நீங்கள் சாதாரணமாக ஓடினீர்கள்.

போட்டியின்போது ஓடினீர்கள்.

உயிரைக் காக்க ஓடினீர்கள்.

மூன்று நிலைகளும் உங்களுக்குத் தெரியும். உங்களால் முடியும்.

நாய் துரத்தும் போது ஓடிய ஓட்டம் போல் எல்லா நிலைகளிலும் உங்களால் ஓட முடியுமா? என்று கேட்டால் நிச்சயமாக முடியாது என்று சொல்வீர்கள்.

ஆனால் நாய் துரத்தியபோது ஓடிய ஓட்டம் போல் ஓடுவதற்கான திறன் உங்களிடம் இருக்கிறதா என்றால் நிச்சயம் உண்டு என்று சொல்வீர்கள்.

இந்த மூன்றாம் நிலை எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது. ஆனால் எப்போதாவது வரும். அதை சரியாகக் கனகச்சிதமாக பயன்படுத்தினால் நீங்கள் தான் ராஜா. ஆனால் உங்கள் நிலை என்ன தெரியுமா!

மூன்றாம் நிலையை எதிர்கொள்வதற்கான, சாதிப்பதற்கான எல்லா அம்சங்களும் உங்களுக்குள் இருக்கும் போது முதல் நிலையிலேயே நீங்கள் செல்வதால், ‘நீங்கள் யார்?’ என்பதை உணராமலே வாழ்ந்து வருகிறீர்கள்.

எனவே நீங்கள் யார்? உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள் என்ன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை! நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

உங்கள் வார்த்தைகளால் அல்ல; செயல்களால்; சாதனைகளால்.

உங்கள் திறமையின் வெளிப்பாடாய் வ(ள)ரும் செயல்கள் உலகத்தை பிரமிக்க வைக்கட்டும்.

வாருங்கள்! வாழ்க்கையை வசப்படுத்தக் களம் காணுங்கள்.

உங்களை அள்ளி அணைக்க ஓராயிரம் கைகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றன!

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணைப் பேராசிரியர், பொருளாதார துறை,
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 96000 94408

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.