என் வாழ்க்கை என் பாடம் – காந்தி

எந்த எரிநட்சத்திரமும் வழிகாட்டவில்லை; எந்தத் தீர்க்கத்தரிசியும் முன்னறிவிப்பைச் செய்யவில்லை. கோடான கோடி குழந்தைகள் மண்ணில் பிறப்பெடுப்பதைப் போன்றே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் பிறந்தார்.

பின்னர், எல்லாரைப் போன்றில்லாமல் மகாத்மா காந்தியாக அவர் பரிணாமம் பெற்றதென்பது ‘உண்மை’ என்னும் ஒற்றைப் புள்ளியில் தன் வாழ்க்கைப் படகைச் செலுத்தியதால்தான்.

காந்தியம் என்ற நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் உண்மையாய் இருத்தல்; மறுபக்கம் அன்பாய் இருத்தல்.

உங்களிடம் நான் எந்த ‘இசங்’களையும் விட்டு விட்டுப் போகவில்லை.

“என் வாழ்க்கை என் பாடம்” என்று பறையறைந்தவர் காந்தி

கடவுள் என்பது உண்மை என்பதனை மாற்றி, உண்மை என்பதே கடவுள் என்று காட்டியவர் காந்தி.

ஐம்பதானாயிரம் பக்கங்கள் எழுதிக் குவித்த காந்தியை அரைப்பக்கத்தில் எழுதிச் சொல்லிவிட முடியாது.

காந்தியத்தைப் பற்றி சுருங்கச் சொல்லவதென்றால்,

இங்கிலாந்து பாராளுமன்றத்தை, விலையுயர்ந்த விளையாட்டு மன்றம் என்று விமர்சித்தார் காந்தி.

இந்த பாராளுமன்ற ஜனநாயக ஆட்சியைத்தான் இந்தியர்கள் விரும்புகிறார்கள் எனில், அது படுகுழியில் வீழ்வதைப் போன்றதுதான் என்று மிகச் சரியாக கணித்த காந்தி, மூன்று தீமைகளை முன்னிறுத்திக் காட்டுகிறார்.

1.சட்டம்

2.மருத்துவம்

3.கல்வி

இவையெல்லாம் காந்தி இறக்கும் தருவாயில் சொன்னவையல்ல. 1909 ஆம் ஆண்டே சொன்னவை. அவரின் தீர்க்கத் தரிசனத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.

தன் வாழ்க்கை முழுவதையும் உண்மை என்னும் உரைகல்லில் உரசிப் பார்த்து, சரியென்றால் உலகமே எதிர்த்தாலும் முனைப்போடு முன்னெடுப்பது; தவறென்றால் வருந்தித் திருத்திக் கொள்வது மற்றும் அந்தத் தவறை மீண்டும் செய்யாதிருப்பது என்ற நெஞ்சுறுதி கொண்டவர் காந்தி.

காந்தி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் இல்லை. அவர் விமர்சனங்களைத் திறந்த மனத்தோடு வரவேற்றார்.

காந்தியை விமர்சிக்கும் யாருக்கும் காந்தியிடம் இருந்த நேர்மையில் மருந்தளவேனும் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்.

மூன்றாந்தர இழி பேச்சாளர்களின் பேச்சையும், நான்காந்தர எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் துணையாகக் கொண்டு காந்தி என்னும் மாபெரும் சூரியனின் ஒளியை மறைக்க முயலும் அறிவிலிகளை என்னவென்று சொல்வது?

அரைகுறை ஆண்கள்தான் காந்தியை அநாகரிக சொற்கொண்டு விமர்சனம் செய்கிறார்கள்.பெண்கள் காந்தியை விமர்சனம் செய்வதில்லை.காந்தியைப் பெண்கள் அளவு புரிந்து கொண்டவர்கள் வேறு எவருமில்லை. அதனால்தான், கணவன் கேட்டுக் கழற்றிக் கொடுக்காத காதணிகளைக் காந்தி கேட்டதும் கழற்றிக் கொடுத்தார்கள்.

வரலாற்றின் வழிநெடுகிலும் விடுதலைக்குப் பின்னர், விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்களே ஆட்சி அதிகாரத்தில் வந்தமர்ந்தனர். தன் இறுதி மூச்சு வரையில் எந்தப் பதவியிலும் அமராதவர் காந்தி என்பதையும், எந்தப் போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறைக்குச் செல்லாதவர்கள் எல்லாம் விடுதலை இந்தியாவில் பதவி நாற்காலியில பரவி இருந்ததையும் இணைத்தே சிந்திக்க வேண்டும்.

ஆறுமுறை கொலை முயற்சியில் இருந்து தப்பிப் பிழைத்தவர் காந்தி. இறுதியில் காந்தியைச் சுட்டுக் கொன்ற அந்தப் பைத்தியக்காரன் கூட காந்தியை வணங்கிவிட்டுத்தான் கொன்றான் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

காந்தியின் மறைவிற்கு மறுநாள் வெளிவந்த ‘தி இந்து’ நாளிதழில், காந்தி சுடப்பட்டு வீழும்போது ‘ஹேராம்’ என்று சொல்லி வீழ்ந்தார் என்று எழுதவில்லை. பின்னர் வெளிவந்த வாழ்க்கை வரலாற்றுப் பதிப்பில் ‘ஹேராம்’ என்று சேர்க்கப்பட்டிருக்கிறது.

‘தொண்டுதான் என் மதம்’ என்று அறிவிப்புச் செய்த காந்தியின் ‘இராம இராஜ்யத்தில்’ எல்லா மதத்தினருக்கும் இடமுண்டு. அவரளவிற்குத் தாழ்த்தப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்கு உழைத்த தலைவர் வேறு எவரும் கிடையாது.

காந்தியின் அஸ்தி உலகெங்கும் உள்ள ஆறுகளில் கரைக்கப்பட்ட பின்னர்தான் அவைகள் புனிதமடைந்தன.

காந்தி(யம்)ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அற்புத நிகழ்வன்று. அன்பும் உண்மையும் வாழ்வியல் நெறிகளாக கொண்டவர் அனைவரும் காந்தியர்கள்தாம்.

நேர்மையாய் இருந்து பார்த்தால்தான் அதன் சுவை புரியும்.

காந்தி உலகின் ஒளியாய் மாறிவிட்டவர். அந்த ஒளியில் ஆப்பிரிக்க ஒளியென்றும் ஆசிய ஒளியென்றும் எந்தப் பேதமும் இல்லை.

அவர் வந்த இந்த நன்னாளில் அவரை நினைவு கூர்ந்து தத்தம் மன அழுக்குகளைக் கழுவிக் கொள்ளுங்கள்.

பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி:  8667043574

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.