எவற்றையெல்லாம் மாற்ற முடியாது?

உலகில் கோடான கோடி மனிதர்கள் உள்ளனர். அனைவரது வாழ்க்கையும் ஒன்று போல் இருப்பதில்லை.

ஏன்? உடன்பிறந்தவர்கள் வாழ்க்கைகூட ஒன்றுபோல் இருப்பதில்லை. அண்ணன் ஏழையாக இருந்தால் தம்பி செல்வந்தராக இருப்பார்.

ஒருவர் கல்விமானாக இருந்தால் இன்னொருவர் கையெழுத்துக்கூட போட தெரியாதவராக இருப்பார்.

ஒருவர் நூறாண்டு கடந்தும் வாழ்வார். மற்றொருவர் அல்ப ஆயுளில் சென்று நேர்ந்து விடுவார். ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான வாழ்க்கை. அதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது.

எனவே ஒருவர் எவ்வளவு தான் முயன்றாலும் தம் வாழ்க்கையில் நிகழும் கீழ்கண்ட ஐந்து விசயங்களை எள்ளளவும் மாற்றி அமைக்க முடியாது. அவை நாம் பிறக்கும் போதே நம்முடன் பிறந்தவை. அவை எப்படி விதிக்கப்பட்டுள்ளதோ அதுவே நடக்கும்.

ஆயுள்

ஒருவர் இவ்வளவு காலம் தான் வாழ்வார் என்றால் அந்த வயதுவரை மட்டுமே அவரால் பிழைத்திருக்க முடியும். அவரது ஆயுளை எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடிகூட நீடிக்க முடியாது. அதுபோல் குறைக்கவும் முடியாது.

செல்வம்

ஒருவருக்கு இவ்வளவு பொருள், செல்வம் தான் கிடைக்கும் என்ற பிராப்தமும் ஏற்கனவே விதிக்கப்பட்டதுதான். அதற்கு மேல் எகிறிகுதித்தாலும் ஒரு சல்லி காசுகூட சேமிக்க முடியாது, தங்காது. ஒருவர் உழைக்காமலே செல்வ செழிப்பில் வாழ்வதும், ஒருவர் உழைத்தும் வறுமையில் வாழ்வதைப் பார்க்கலாம்.

கல்வி

ஒருவருக்கு இவ்வளவு கல்விதான் வாய்க்கும் என்றால் அவ்வளவே அவரால் படிக்க முடியும். எவ்வளவு பணம் செலவு செய்தாலும் மணிக்கணக்காக இருந்து படித்தாலும் பயனளிக்காது.

கர்மா

ஒருவருக்கு தொழில், குணம், மனைவி அல்லது கணவன், மக்கள் அமைவது எல்லாம் கர்மாபடியே. இவன் இந்த தொழில் தான் செய்வான். இன்ன தொழில் செய்துதான் இந்த ஜீவன் ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது. வாழ்க்கையில் நாமே காண்கிறோம். பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் செய்யும் தொழிலுக்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது.

அதுபோல் ஒருவருடைய குணமும். நீங்கள் எவ்வளவு தான் புத்திமதி சொன்னாலும் ஒருவரது குணத்தை மாற்ற முடியாது. அவர் எப்படி நடப்பாரோ அவ்வாறே நடந்து கொள்வார்.

நாம் ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட பெண்ணைத்தான் இப்படிப்பட்டவரைத்தான் திருமணம் செய்வேன் என்று கற்பனைக் கோட்டை கட்டியிருப்போம். ஆனால் நாம் நினைத்தது போல் மனைவியோ கணவனோ நமக்கு அமைவதில்லை. அதுபோல் குழந்தைகளும்தான். என்ன விதிக்கப்பட்டுள்ளதோ அதுவே நமக்குக் கிடைக்கும்.

மரணம்

இன்றைய தினத்தில் இந்த நேரத்தில் இந்த நிலையில் இந்த உயிருக்கு மரணம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை யாரும் மாற்ற முடியாது. யாராலும் மாற்ற முடியாது.

ஒரு நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு பரிசோதித்துவிட்டு மருத்துவர் ‘அரை மணி நேரம் முன்பு வந்திருந்தால் பிழைத்திருப்பார்’ என்கிறார்.

‘அரைமணி நேரம் முன்பு ஏன் போக முடியவில்லை?’ என்பதுதான் கேள்வி. அரைமணி நேரம் முன்பு போயிருந்தாலும் மருத்துவர் இதே கேள்வியை தான் கேட்டிருப்பார். பிழைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தான் பிழைப்பார்.

ஆக இந்த ஐந்தும் கர்ப்பத்திலிருக்கும் போதே பூர்வ வினைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே இதை யாராலும் மாற்ற முடியாது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.