ஒத்திகை – சிறுகதை

சாம்பு சாஸ்திரிகள் சந்தியாவந்தனத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு ‘சிவ சம்போ, மகாதேவா’ என முனங்கியபடியே பஞ்ச பாத்திரத்தை உத்தரணியுடன் சேர்த்துப் பிடித்தவாறே அதிலிருந்து ஜலத்தைத் துளசி மாடத்தில் விட்டார்.

அவரது வாய் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தது. வலது கை விரல்கள் எண்ணியபடியும், எண்ணி முடித்ததற்கு அடையாளமாக இடது கை விரல்கள் மடங்கிக் கொண்டும் இருந்தன.

மங்களம் சமையலறையில் தயார் செய்து கொண்டிருந்த வத்தல் குழம்பு சாம்பு சாஸ்திரிகளை சீக்கிரமாக ஜபத்தை முடிக்கச் சொல்வது போல் ‘கம கம’ வாசனை அவரது மூக்கை துளைத்துக் கொண்டிருந்தது.

ஜபத்தை முடித்துக் கொண்டு திரும்பிய சாம்பு சாஸ்திரிகள் சமையலறையை எட்டிப் பார்த்தார்.

“உட்காருங்கோ, சாதமும், குழம்பும் ஆறிடப் போறது”

சாம்பு சாஸ்திரிகள் இலை முன் அமர்ந்தார்.

பரிமாறிக் கொண்டிருந்த மங்களம் பேச ஆரம்பித்தாள்.

“வைதீகத் தொழில் கையை விட்டுப் போயாச்சு. உபாத்தியாயத்தை எல்லாம் அவாவா மாத்திண்டு வர்றா.

அப்பு சாஸ்திரிகள் கொடி கட்டிப் பறக்கிறார். அம்புஜத்துக்கு பெருமை பிடிபடலே. ஸ்கூட்டர்ல வந்து சீக்கிரமா காரியத்தை முடிச்சிட்டுப் போயிடறாராம்.

மற்ற வேலைகளைக் கவனிக்க ரொம்பவும் சௌகரியமாயிருக்குங்கறா. ஒவ்வொருத்தரும் செல்போன் வேறு வச்சிண்டிருக்கா.

ஏதாவது நல்ல காரியம், கெட்ட காரியம்னா உட்கார்ந்த இடத்திலிருந்தே பேசிடறா.

நீங்க இன்னும் அந்தக் காலத்துப் பத்தாம் பசலியாகவே இருக்கேள். சைக்கிள்கூட ஓட்டத் தெரியாது உங்களுக்கு? அப்படி ஓர் ஜன்மம். இப்படியே காலம் ஓடிடும் போலிருக்கு.”

சாம்பு சாஸ்திரியை மங்களம் நிம்மதியாக சாப்பிட விடவில்லை. ஒரே புலம்பல் மயம்தான்.

அப்பு சாஸ்திரிகள்தான் தற்போது உள்ளுரிலும் சரி, சுற்று வட்டாரத்திலும் சரி ரொம்ப ஃபேமஸ்.

அம்புஜம் ஆத்துக்காரரின் பெருமையை மங்களத்திடம் தினம் விலாவாரியாக எடுத்துச்சொல்வது யாவும் பிரதிபலிப்பாகப் புலம்பல் வடிவத்தில் சாம்பு சாஸ்திரிகளிடம் வார்த்தை அம்புகளாகப் பாயும்.

“என்னை என்னச் செய்யச் சொல்றே மங்களம்? எல்லாம் பகவான் செயல்!”

“பகவான் பெயரையே சொல்லிண்டு இருங்கோ. காலத்திற்கேற்ற மாதிரி கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது உங்களை மாத்திக்குங்கோன்னா”

சாம்பு சாஸ்திரிகள் சாப்பிட்டதாகப் பெயர் பண்ணிவிட்டு திண்ணைக்குப் படுக்கச் சென்று விட்டார்.

மறுநாள் காலை. சாம்பு சாஸ்திரிகள் சிவன் கோயில் பூஜையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, மங்களம் கையில் ஒரு கடிதத்துடன், இவரது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

“கணேசு கடுதாசு போட்டிருக்கான்னா”

“என்னவாம்?”

“கடுதாசைப் பிரிக்காமலேயே என்னவாம்னு கேட்டா என்னத்தைச் சொல்றது. பிரிச்சுப் பாருங்கோ” என மங்களம் கடிதத்தைக் கொடுத்தாள்.

“வேத பாடசாலையிலிருந்து உன் பிள்ளையாண்டான் வர்றான். கத்துக்க வேண்டியதெல்லாம் கத்துண்டுட்டானாம்!”

“வரட்டும்; வரட்டும். அவனாவது வைதீகக் காரியங்களுக்குப் போய் நன்னா சம்பாதிக்கட்டும். உங்களை மாதிரி அச்சுப் பிச்சுவா இல்லாம, கையை விட்டுப் போன உபாத்தியாயம் எல்லாம் திரும்ப நமக்கே கிடைக்க கணேசு தான் பிரயத்தனம் செய்யணும்!”

வழக்கமான முணு முணுப்புடன் சுருள் சுருளாக வட்டவடிவமாக நறுக்கி ஜாடியில் போடப்பட்டிருந்த நார்த்தங்காயைக் குலுக்கி, ஒவ்வொன்றாக எடுத்து சூரிய வெளிச்சமுள்ள இடத்தில் ஓலைக் கீற்றில் காயப் போட ஆரம்பித்தாள் மங்களம்.

வேத பாடசாலையிலிருந்து கணேஷ் திரும்பி வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.

வேத சாஸ்திரங்கள் பற்றிய ஐயங்களைத் தகப்பனாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தவனிடம்,

“அடே அம்பி, நீயாவது வரப்போற அமாவாசையிலிருந்து பக்கத்துக் கிராமங்களுக்குப் போய் தர்ப்பணம் செய்து வைக்கப் பாரேன். இப்பவே சம்பாதிச்சா தான் உண்டு!” என்றாள் மங்களம்.

“நீங்க என்ன சொல்றேள் அப்பா?” என்ற கணேஷ் நிமிர்ந்து பார்க்க,

சாம்பு சாஸ்திரிகள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தார்.

கணேஷ் ஒன்றும் புரியாமல் “அம்மா அப்பாவைப் பாரேன்!” என்றபடி உள்ளே ஓடினான்.

மங்களமும், கணேசும் திரும்ப வந்து பார்த்தபோது சாம்பு சாஸ்திரியின் கண்கள் நிலைகுத்திப் போயிருந்தன.

அன்று அமாவாசை!

கணேஷ் அவிழ்ந்த குடுமியை அள்ளி முடித்துக் கொண்டு தர்ப்பை, பவுத்திரம், பூணூல் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்க, மங்களம் வந்து “எங்கே கிளம்பிண்டிருக்கே கணேசு?” என்றாள்.

“நாலு இடங்களுக்கப் போய் அமாவாசைத் தர்ப்பணம் பண்ணி வைக்கலாம்னு போறேன்மா!”

“நீ தர்ப்பணம் பண்ணியாச்சா கணேசு?”

“என்னம்மா அப்படிக் கேட்டுட்டே. தர்ப்பணம் மத்தவாளுக்குப் பண்ணி வைக்கிறதுக்கு முன்னால், நானே பண்ணின்டு ஒத்திகைப் பார்த்துக்கணும்ங்கிறதுக்காகத்தான் அப்பா நம்மை விட்டுப் போயிட்டாரம்மா. நான் அதிகாலையிலேயே தர்ப்பணம் பண்ணியாச்சு. மத்தவங்களுக்கும் இனிமேல் பிரமாதமா பண்ணி வைப்பேன். நான் வர்ரேம்மா!”

கணேச சாஸ்திரிகள் கிளம்பி சென்று கொண்டிருந்தார்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.