ஒரு தேனான விஷயம்! – ஜானகி எஸ்.ராஜ்

தேனீக்களால் பல்வேறு மலர்களிலிருந்து தேன் சேகரிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷயமே.

‘தேன் உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தி நீண்ட ஆயுளுடன் நாம் வாழ பயன்படுகிறது’ என்கிறார் இயற்கை விஞ்ஞான தந்தை அரிஸ்டாடில்.

எகிப்திலும், கிரீஸ் நாட்டிலும் தேன் பல்வேறு மருத்துவத்தில் உபயோகப்பட்டு வருகிறது.

தேனில் ஈரப்பதம் 20 சதவிகிதம், புரதச்சத்து 0.3 சதவிகிதம், உலோகச்சத்து 0.2 சதவிகிதம் மற்றும் கார்போஹைட்ரேட் 79.5 சதவிகிதம் அடங்கியுள்ளன.

தேன் 319 கலோரிகளைக் கொண்டது. தேனிலுள்ள இனிப்பானது குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ் ஆகியவைகளைக் கொண்டதாகும். பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் இவைகள் அடங்கியுள்ளன.

தேனில் உள்ள ‘டெக்ஸ்டிரின்’ ஜீரண விஷயத்தில் நன்கு துணை புரிகிறது.

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் ஒரு ஸ்பூன்+அரை ஸ்பூன் எலுமிச்சைசாறு கலவையை ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து தினம் காலையில் அருந்தினால் மலச்சிக்கல் ஏற்படாது. வயிற்றில் உருவாகும் அமிலத் தன்மையையும் கட்டுப்படுத்தும்.

இதயநோய் உள்ளவர்கள் தேனும் எலுமிச்சை சாறும் கலந்து ஒரு டம்ளர் இரவு படுக்கச் செல்லும் முன் அருந்தினால் இதயப் படபடப்பு ஏற்படாது.

தேனில் கால்சியம் – 5 மில்லி கிராம், பாஸ்பரஸ் 16 மில்லி கிராம், இரும்புச்சத்து – 0.9 மில்லி கிராம், வைட்டமின் சி – 4 மில்லி கிராம் மற்றும் பி-காம்ப்ளக்ஸ் சத்தும் அடங்கியுள்ளன. எனவே ரத்த சோகை நோயுற்றவர்களுக்குத் தேன் ஓர் அருமருந்து.

ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் தேவையைத் தேன் பூர்த்தி செய்கிறது. தேனும் பாலும் கலந்து அருந்தினால் நுரையீரல் தொல்லைகள் ஏற்படாது. மூச்சுத்திணறல் ஏற்படாது.

மேலும் உடலில் ஏற்படும் புண்கள் சீழ் பிடிக்காத வண்ணம் தேன் கிருமிநாசினியாகவும் செயல்புரிகிறது. உடலில் ஏற்படும் காயம், புண் மீது தேனைத் தடவினால் விரைவில் குணம் தெரியும்.

தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு கலவையைக் காலையிலும், இரவிலும் தொடர்ந்து அருந்த இருமல், ஜலதோஷம் கட்டுப்படும்.

படுக்கும்முன் ஒரு கப் நீரில் தேன் கலந்து பருகினால் சுகமான தூக்கம் கண்களைத் தழுவும்.

பற்களில் ஏற்படும் சொத்தை, பல் விழுதல் போன்றவைகளுக்கம் தேன் நல்ல மருந்து.

வாய்ப்புண்களுக்கு தேனைக் கொண்டு வாய் கொப்பளிக்க நல்ல பலன் கிடைக்கும்.

பற்களிலும், ஈறிலும் தினம் தேனைத் தடவி வந்தால் பற்கள் சுத்தமாக இருப்பது மட்டுமின்றி வெண்மையுடனும் காணப்படும்.

தேன் அருந்தினால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராது. நெஞ்சு எரிச்சல், வாந்தி போன்றவைகள் ஏற்படாது.

தினம் ஒரு கப் சுடுநீரில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தேன் கலந்து அருந்தினால் உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன், நல்ல வலிமையுடனும், பொலிவுடனும், ஆரோக்கியத்துடனும் திகழலாம்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.