திருத்தணிகை நொண்டிச் சிந்து

கந்தாவுன் பேர்சொல்லி யே-நாங்கள்
காவடி தூக்கினோம் பாவடித் தோம்
சிந்தாலே பாட்டிசைத் தே-உன்
சீர்பல போற்றவே ஓர்ந்துநின் றோம்

மாமலை மீதிருந் தே-இந்த
மாநிலம் நோக்குதல் தானறிந் தோம்
கோமலை உன்மலை யே-எந்தக்
குன்றமும் நின்னடிக் குன்றிடு மே

தென்றமிழ் நாட்டெல்லை யில்-நின்ற
தெய்வமே நின்னினும் தெய்வமுண் டோ
தென்றலின் தண்மைய னே-எம்
தேட்டமும் வாழ்வுமுன் காற்றட மே

நச்சினார் துன்பங்க ளை-ஒரு
நாழியில் மாய்த்திடும் ஊழிய னே
உச்சிவான் மீன்களுக் கும்-ஒளி
ஊக்கியே மாயிருள் நீக்கிய னே

பற்பல சான்றவர் கள் -உன்னைப்
பாடிம கிழ்ந்தனர் ஆடின ரே
அற்பனும் பாடவந் தேன் -என்னை
ஆட்கொளும் மன்றாடி கேட்கிற னே

பூம்பொழில் தண்தணி கை-மண்ணில்
பூங்கொடி வள்ளியைத் தாங்கிய னே
தீம்பலா மாங்கனி கள் -வாழை
தித்திப்பே உன்பெயர் எத்திக்கு மே

நின்னைநி னைத்தப டி-நெற்றி
நீறிட்டார் நெஞ்சினில் ஏறிய னே
முன்னைவி னைகளைந் தே-அன்பர்
மூச்சிக்கு கந்தநல் தாய்ச்சிய னே

வானவர் சித்தர்க ளும்-வேலை
வந்துவ ணங்கிய தெந்தம லை
கானவர் பெண்ணணங் கின்-திருக்
கையைப்பி டித்ததி ருத்தணி யே

தீப்பிணி பல்வகை யின்-கொடுந்
தீமையைச் செற்றவேல் மாமருந் தே
யாப்பிணி மேல்வரி னும்-தணிகை
யானுளான் தீவினைக் கூனிலை யே

தண்சுனை சூழ்தணி கை-வந்து
தங்கிய ருள்கிற செங்கதி ரே
நண்பனே நாயக னே-தமிழ்
நாவினைக் காத்தருள் காவிய னே

ஆதிகவி (எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.