தொழுதிடத் துயரேது? – கவிஞர் கவியரசன்

அருள்வேண்டி உனைப்பாடி
அழுகின்ற தல்லாமல்
பொருள்வேண்டி மனம் நாடுமா – நிதம்
புழுவாகி தடுமாறுமா
இருள்தாண்டும் ஒளியேயென்
இடர்தாண்டும் வழியேஉன்
இயக்கத்தை வான்மீறுமா – நீ
இமைக்காமல் காற்றாடுமா!

அருளானை முகத்தானை
ஐந்தான கரத்தானை
தொழுவானை துயர்மேவுமா – நலம்
தொடராமல் வளம்சாயுமா
கருவுக்குள் உருவான
கணநாதன் உனையின்றி
காலங்கள் மகிழ்ந்தாடுமா – என்
கவிதைக்கு பொருள்சேருமா!

அயனாரும் திருமாலும்
அரனென்ற சிவனாரும்
அருள்வாறே திருக்கோலத்தில் – உன்
அருள்வேண்டி தவக்கோலத்தில்
உமையாளும் உரியாளும்
உயர்ஞானம் உடையாளும்
தன்சொந்தம் எனும்வேகத்தில் – அவர்
உறைகின்றார் உன்பாகத்தில்!

குமரேசன் உன்தம்பி
குன்றின்மேல் தமிழ்கொண்டு
கொடுத்தானே தன்பாட்டுக்கு – இனி
குறையேது என்பாட்டுக்கு
அமரர்க்கு மறையோதி
அயர்ந்தாலும் மாறாது
அருள்வானே நம்வீட்டுக்கு – அவன்
அன்பான தமிழ்நாட்டுக்கு!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250

கவிஞர் கவியரசன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.