நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம்15 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

படுக்கையில் எழுந்து அமர்ந்து கொண்ட ராகவுக்கு மிகவும் சோர்வாய் இருந்தது. கண்கள் இரண்டும் எரிச்சலாய் இருந்தன.

இரவு முழுதும் தூக்கமில்லை. மாமா வந்து விட்டுப்போன பிறகு ஏதோ ஒரு
நிர்பந்தத்திற்கு ஆளானவன் போல் உணர்ந்தான்.

அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது ரேடியோவில் பக்திப் பாடல் மெதுவான சப்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.

சமையலறையில் அம்மா லலிதா சகஸ்ரநாமம் சொல்லியபடி காபி தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது காபி வாசனை கூடத்தில் வளைய வருவதிலிருந்து தெரிந்தது.

கிணற்றடிக்குச் சென்று பிரஷ்ஷைக் கையில் வைத்துக் கொண்டு பேஸ்ட்டைத் தேடியபோது பேஸ்ட் தீர்ந்து போனது ஞாபகம் வந்தது.

அம்மா உபயோகிக்கும் ‘பிங்க்’ கலர் ‘கோபால் பல்பொடி’யை எடுத்து இடது கை உள்ளங்கையில் கொஞ்சமாய்க் கொட்டி பிரஷ்ஷை பல்பொடியில் தொட்டுப் பற்களில் வைத்தபோது பல்பொடி அசட்டுத் தித்திப்புத் தித்தித்தது.

வாயை பலமுறை கொப்பளித்து விட்டு முகத்தில் ‘பளீர்பளீர்’ ரென்று குளிர்ந்த நீரை கைகளால் மொண்டு மொண்டு அடித்துக் கொண்டபோது கண் எரிச்சல் தேவலாம்போல் இருந்தது.

முகத்தைத் துண்டால் துடைத்துக் கொண்டே கூடத்துக்கு வந்தான் ராகவ்.

“ராகவ் என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துண்ட்ட? ராத்திரி தூங்கினியா இல்லியா?” அக்கறையோடு விசாரித்த அம்மாவிடம் “ம்..ம்.. தூங்கினேன்” என்றான் ஒற்றை வார்த்தையில்.

“நீ தூங்கினியா இல்லையான்னு மூஞ்சியப் பாத்தாலே தெரியறுதே! ராப்பட்டினி ராமய்யராட்டம் வெறும் வயத்தோடு படுத்தா தூக்கம் எப்பிடி வரும்? என்னவோ போ! இந்த காலத்து பசங்க..” முழுவதுமாய் முடிக்காமல் “இரு காபி கொண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்றார் அம்மா.

ரேடியோவில் விவசாய நிகழ்ச்சி முடிந்து, “செய்திகள் வாசிப்பது..” என்று ஆரம்பித்தார் செய்தி வாசிப்பாளர். மணி ஏழேகால்.

மணி பதினொன்று. அலுவலகம்.

மும்முரமாய் ஃபைல் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஏனோ இந்துவின் நினைப்பு இடைஇடையே வந்து எட்டிப் பார்த்தது.

‘இன்னிக்கு சாயந்திரம் இந்துவ பாக்கும்போது மாமா வந்தது பற்றியும் அவரால தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை பற்றியும் சொல்லனும். ஆனா சொல்றதா? வேண்டாமா? என்னை மாமாவும் அம்மாவும் சம்மதிக்க வெச்சுட்டா என்ன பண்றதுன்னு இந்து பயந்துட்டா? ம்கூம்..ம்கூம்.. இந்துட்ட சொல்லக் கூடாது. பாவம் அவ.’ கண்கள் ஃபைலைப் பார்த்துக் கொண்டிருக்க சிந்தனை இந்துவிடம் இருந்தது ராகவுக்கு.

“சார்!” ப்யூன் அழைத்தது காதில் விழாமல் சிந்தனையில் இருந்தான் ராகவ்.

“சார் ஒங்களத்தான்” மேஜையை லேசாகத் தட்டினார் ப்யூன் ரெங்கசாமி.

சட்டென நிகழ்வுக்குத் திரும்பி “கூப்டீங்களா? ஸாரி ஏதோ சிந்தனைல இருந்துட்டேன்” என்றான்.

“ஐயா ஒங்கள வரச் சொன்னாரு”

எழுந்து அதிகாரியின் அறைக்குச் சென்றவனை, “ஹலோ ராகவ் வாழ்த்துக்கள்!” என்று முகம் மலரக் கூறி கவர் ஒன்றினைக் நீட்டினார் அதிகாரி. குழப்பமாய் இருந்தது ராகவுக்கு.

இருந்தாலும் குழப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கவரை வாங்கிக் கொண்டு நன்றி சொல்லிவிட்டு தன் இருக்கைக்கு வந்தான்.

ஏற்கனவே பிரிக்கப்பட்டிருந்த கவரிலிருந்த அரசாங்க முத்திரையோடு கூடிய கடிதத்தைப் படித்தபோது ராகவ் தனது மனப்போராட்டங்களை நிமிட நேரம் மறந்துதான் போனான்.

அவன் கோயமுத்தூர் அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் பதினைந்துநாள் பயிற்சி பெற அரசாணை அது.

நாளை மறுநாள் பயிற்சியில் இணைய வேண்டும். அதனை முடித்து வந்தால் ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்புண்டு.

மனம் சந்தோஷத்தில் துள்ளியது.

‘இந்துட்ட இத காமிச்சா எவ்வளவு சந்தோஷப்படுவா ராகவ். வர வர என்னடா இப்டியாயிட்ட? இப்பெல்லாம் அம்மா ரெண்டாம் பட்சம் ஆயிட்டாளா? இந்துட்ட காமிக்கறது பத்தி மொதல்ல யோசிக்கிற. ஆமா! தப்புதா தப்புதா’ மனதிடம் மன்னிப்புக் கேட்டான்.

இந்துவை வழக்கமாய் சந்திக்கும் காந்தி பார்க். நெடுநேரம் காத்திருந்தும் இந்து வராதது கவலையாய் இருந்தது.

‘ஒடம்பு கிடம்பு சரியில்லயோ? எப்டி தெரிஞ்சுக்கறது?’ லேசாய் இருட்ட ஆரம்பித்தது. ‘இதற்கு மேலும் இந்து வரமாட்டா’ என்று நினைத்தவனாய் ஏமாற்றத்தோடு கிளம்பினான் ராகவ்.

வீட்டுவாசலில் வண்டியை நிறுத்தியபோது வாசலிலேயே அம்மா நின்றிருந்தாள்.

“வா ராகவ்! ஏன் லேட்டு?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே போனாள் அம்மா.

“கொஞ்சம் வேல இருந்தது அதா” என்று சொல்லிக் கொண்டே அம்மாவைப் பின் தொடர்ந்தான்.

“அம்மா!” அழைத்தான்.

“என்னடா அம்பி?”

சமயத்தில் ராகவை அம்பி என மாமி அழைப்பதுண்டு.

அந்தப் பழக்கத்தில் அம்பி என அழைத்த அம்மாவிடம் “இந்தா!” என்று சொல்லி பயிற்சிக்கு வந்திருந்த அழைப்பை நீட்ட, “என்னதிது?” கேட்டவாறே பெற்றுக் கொண்டாள்.

கிணற்றடிக்குச் சென்று முகம் கைகால் அலம்பி ‘ஃப்ரஷ்’ஷப் ஆகிவந்த ராகவை அம்மா முதுகில் தட்டி லேசாய் அணைத்துக்கொண்டார்.

“ரொம்ப சந்தோஷம்டா செல்லம்! ட்ரெயினிங் போய்ட்டு வந்தா ப்ரமோஷன் கெடைக்குமோனோ?”

“கெடைக்கலாம்”

“பாரேன்! கல்யாணப் பேச்சை எடுத்ததுமே நல்ல சேதி கெடச்சிருக்கு. நீ மீனாட்சியையோ, அலமேலுவையோ யாரத் தேர்ந்தெடுப்பியோ தெரியாது. ஆனா நீ தேர்ந்தெடுக்கப் போற இந்த ரெண்டு பேர்ல ஒம் பொண்டாட்டியா வரப் போறவ அதிஷ்டசாலிதான். இந்தாத்து நாட்டுப் பொண்ணா வரப்போறான்னு முடிவெடுக்கப் போற அதுக்குள்ளயே நல்ல சேதி வருது பாரு”

அம்மாவிடமிருந்து அந்த ஆர்டரை ‘வெடுக்’கெனப் பிடுங்கி கிழித்தெறிய வேண்டும்போல் இருந்தது ராகவுக்கு.

பதில் சொல்லாமல் தன் அறைநோக்கி நடந்தான் ராகவ்.

பதிலேதும் சொல்லாமல் தனது அறை நோக்கிச் செல்லும் மகனைப் பார்த்து கொஞ்சமாய் கலவரமானார் மாமி.

‘இவன் ஏன் கல்யாணப் பேச்ச எடுத்தாலே உம்முனு ஆயிடறான்?’ குழப்பமாயிருந்தது மாமிக்கு.

எதுவும் பிடிக்கவில்லை இந்துவுக்கு. எல்லார் மீதும் எரிச்சலாய் வந்தது.

கையில் பாடப் புத்தகம். கண்கள் பாட வரிகளில்.

ஆனால் மனமோ ‘ராகவ் பார்க்குக்கு வந்து காத்துக் கொண்டு இருந்துருப்பாரு. நா வரல்லேன்னு காரணம் தெரியாம தவிச்சிருப்பாரு. ஏமாத்தத்தோட வீட்டுக்குப் போயிருப்பாரு. பாவம்ல ராகவ்!’ என்று ராகவையே நினைத்து நினைத்துப் பார்த்தது.

‘எல்லாம் இந்த அப்பாவாலதான்’ முதன் முறையாக அப்பாவின் மீது கோபம் வந்தது இந்துவுக்கு.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.