நேருவைத் தெரிந்து கொள்வோம்

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியால் எனது அரசியல் வாரிசு, தியாக சீலர், நாட்டுப்பற்றும் சர்வதேசப்பற்றும் உடையவர்,இந்தியாவை நிர்வகிக்கத் தகுதியானவர், அவரது பொறுப்பில் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்றெல்லாம் புகழப்பட்டவர் நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.

நேரு 1889ம் ஆண்டு நவம்பர்த்திங்கள் 14ம் நாள் அலாகாபாத்தில் மோதிலால் நேரு – சொரூப ராணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் செல்வச்செழிப்பில் சீராட்டி, பாராட்டி வளர்க்கப்பட்டாலும் ஏழைகளிடம் அன்பு கொண்டவராய் இருந்தார். நேரு இங்கிலாந்தில் பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் சட்டப்படிப்பு பயின்று முடித்தார்.

நேரு தேசப்பணியிலேயே தன் வாழ்நாளைக் கழித்தார். காந்தியடிகளுடன் இணைந்து பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார். இந்தியா விடுதலை பெற்ற பின் முதல் பிரதமராக பொறுப்பேற்று சுமார் 17ஆண்டுகள் நிர்வகித்து பல நல்ல திட்டங்களை நாட்டுக்காக செய்தார்.

நேரு நேர்மையானவர், அன்பு உள்ளம் கொண்டவர், சீரிய சிந்தனையாளர், மன உறுதிமிக்கவர். இவருடைய பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. நேரு ஆசியஜோதி, சமாதானப்புறா, மனிதருள் மாணிக்கம், ரோஜாவின் ராஜா என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார்.

நேருவின் துடிப்பும், எண்ணமும், இலட்சிய நோக்கும் குழந்தைகளாகிய நாம் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை ஆகும். குழந்தைகளே இந்தியாவின் வருங்காலத் தூண்கள், சிற்பிகள் என்று கூறிய வார்த்தைகளை மெய்யாக்குவோம்!

Leave a Reply

Your email address will not be published.