திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம் என்பது சைவத்தின் கடவுளான சிவபெருமான் பாண்டியர்களின் தலைநகரான மதுரை மாநகரில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் நூலாகும்.

இறைவனார் நிகழ்த்திய செயற்கரும் செயல்களே திருவிளையாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

புராணம் என்பது பழைய வரலாறு எனப்பொருள்படும்.

இறைவனான சிவபெருமானின் பழமையான தெய்வத் தன்மை வாய்ந்த அருள் விளையாட்டுகளை விளக்கும் நூல் ஆதலால் இது திருவிளையாடல் புராணம் என்றழைக்கப்படுகிறது.

இறைவனார் உலக உயிரிகளிடத்து அன்பு கொண்டு அவர்களுக்கு அருள் செய்த கருணையை இந்நூலில் வரும் கதைகள் அழகாக விவரிக்கின்றன.

இந்நூலை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர் ஆவார்.

திருவிளையாடல் புராணமானது திருஆலவாய் மான்மியம், மதுரைப்புராணம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

தமிழ் மொழியில் மூன்று புராண நூல்கள் சிவபெருமானின் மூன்று கண்களாகப் போற்றப்படுகின்றன.

சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் இறைவனாரின் வலது கண்ணாக போற்றப்படுகிறது.

பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் இடது கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் நெற்றிக்கண்ணாகவும் போற்றி சிறப்பிக்கப்படுகின்றன.

சிவபெருமான் தனது அடியவர்கள் மற்றும் தன்மீது பக்தி கொண்ட சிற்றுயிர்கள் மீது கருணை மிகுந்து தானே மண்ணுலகிற்கு வந்து அருள் செய்த வரலாறுகளை திருவிளையாடல் புராணம் அழகுற எடுத்து இயம்புகிறது.

தன்மீது பக்தி கொண்ட உயிரிகளிடத்தில் இறைவன் திருவிளையாடல்கள் நிகழ்த்தி தனது அன்பையும், கருணையும் அவர்களுக்கு அருளுவதை பற்றிக் கூறுவதே இந்நூலின் சிறப்பாகும்.

திருவிளையாடல் புராண‌மானது தமிழ்கடவுளான முருகப்பெருமானால் அகத்தியருக்கு அருளப் பெற்றது.

பின் அகத்தியரின் மூலம் இறைவனின் திருவிளையாடல்களை மற்ற முனிவர்கள் அறிந்து கொண்டனர். அவர்கள் சொக்கலிங்கரான சோமசுந்தரக் கடவுளை வழிபட்டனர் என்று இந்நூல் இறைவனின் திருவிளையாடல்கள் வெளிவந்த விதத்தை விளக்குகிறது.

 

பரஞ்சோதி முனிவர்

பரஞ்சோதி முனிவர் வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காட்டில் தோன்றியவர். இவருடைய தந்தையார் மீனாட்சி சுந்தரதேசிகர் ஆவார்.

பரஞ்சோதி முனிவர் தென்மொழி, வடமொழி, திருமுறைகள், சித்தார்ந்த சாஸ்திரங்கள் ஆகியவற்றை கற்றுணர்ந்தவர். தம் தந்தையிடம் சிவதீட்சை பெற்றவர்.

சிவபெருமானிடத்தும், சிவனடியார்களிடத்தும் மிகுந்த பக்தி கொண்டவர். இவர் சிவபெருமானின் பல திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

அவ்வாறு மதுரையில் மீனாட்சி சோமசுந்தரரை தரிசித்து மதுரையம்பதியில் தங்கியிருந்தார். அப்போது மீனாட்சியம்மை அவருடைய கனவில் தோன்றி இறைவனின் திருவிளையாடல்களைப் பாட கட்டளையிட்டார்.

அம்மையின் ஆணைக்கு இணங்க ‘சத்தியாய்’ எனத்தொடங்கும் திருவிளையாடல் புராணத்தை பரஞ்சோதி முனிவர் இயற்றினார். இவர் திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப் பத்தந்தாதி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.

63 நாயன்மார்களில் குறிப்பிடப்படும் சிறுதொண்டராகிய பரஞ்சோதியார் வேறு. இவர் வேறு.

வியாசர் இயற்றிய வடமொழி நூலான ஸ்கந்தபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்மியம் என்பதைப் பின்பற்றியே இந்நூல் எழுதப்பட்டது என்ற கருத்து உள்ளது.

 

 

திருவிளையாடல் புராணம் பிரிக்கப்பட்டுள்ள விதம்

திருவிளையாடல் புராணமானது மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நூலில் மதுரைக்காண்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே பல காப்பிய உறுப்புகள் இடம் பெற்றுள்ளன.
அவை

1.காப்பு

2.வாழ்த்து

3.நூற்பயன்

4.கடவுள் வாழ்த்து

5.பாயிரம்

6.அவையடக்கம்

7.திருநாட்டுச்சிறப்பு

8.திருநகரச்சிறப்பு

9.திருக்கையிலாயச்சிறப்பு

10.புராணவரலாறு

11.தலச் சிறப்பு

12.தீர்த்தச் சிறப்பு

13. மூர்த்திச் சிறப்பு

14.பதிகம் ஆகியவை ஆகும்.

இவை 343 பாடல்களால் பாடப்பட்டுள்ளன.

மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன. இந்நூலில் மொத்தம் 3363 பாடல்கள் உள்ளன.

இந்திரன் பழி தீர்த்த படலம் முதல் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் வரை மதுரைக்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.

நான்மாடக்கூடலான படலம் முதல் நாரைக்கு முக்தி அளித்த படலம் வரை கூடற்காண்டத்தில் உள்ளன.

திருஆலவாயான படலம் முதல் வன்னியும், கிணறும், லிங்கமும் அழைத்த படலம் வரை திருஆலவாய்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.

 

திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ள சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள்

1. இந்திரன் பழி தீர்த்த படலம்

2. வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்

3. திருநகரங்கண்ட படலம்

4. தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்

5. தடாதகை பிராட்டியாரின் திருமணப் படலம்

6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

8. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம்

9. ஏழுகடல் அழைத்த படலம்

10. மல‌யத்துவசனை அழைத்த படலம்

11. உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்

12. உக்கிரபாண்டியனுக்கு வேல், வளை, செண்டு கொடுத்த படலம்

13. கடல் சுவற வேல்விட்ட படலம்

14. இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்

15. மேருவைச் செண்டால் அடித்த படலம்

16. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்

17. மாணிக்கம் விற்ற படலம்

18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

 

19. நான்மாடக் கூடலான படலம்

20. எல்லாம் வல்ல சித்தரான படலம்

21. கல்யானைக்குக் கரும்பருத்திய படலம்

22. யானை எய்த படலம்

23. விருத்த குமார பாலரான படலம்

24. கால்மாறி ஆடின படலம்

25. பழி அஞ்சின படலம்

26. மாபாதகம் தீர்த்த படலம்

27. அங்கம் வெட்டின படலம்

28. நாகம் எய்த படலம்

29. மாயப் பசுவை வதைத்த படலம்

30. மெய் காட்டிட்ட படலம்

31. உலவாக்கிழி அருளிய படலம்

32. வளையல் விற்ற படலம்

33. அட்டாம சித்தி உபதேசித்த படலம்

34. விடை இலச்சினை இட்ட படலம்

35. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்

36. இரசவாதம் செய்த படலம்

37. சோழனை மடுவில் வீழ்த்திய படலம்

38. உலவாக் கோட்டை அருளிய படலம்

39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்

40. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்

41. விறகு விற்ற படலம்

42. திருமுகம் கொடுத்த படலம்

43. பலகை இட்ட படலம்

44. இசைவாது வென்ற படலம்

45. பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம்

46. பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்

47. கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம்

48. நாரைக்கு முக்தி கொடுத்த படலம்

 

49. திருஆலவாயான படலம்

50. சுந்தரப் பேரம்பு எய்த படலம்

51. சங்கப்பலகை கொடுத்த படலம்

52. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்

53. கீரனை கரையேற்றிய படலம்

54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்

55. சங்கத்தார் கலம்தீர்த்த படலம்

56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

57. வலை வீசின படலம்

58. வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்

59. நரியை பரியாக்கிய படலம்

60. பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்

61. மண் சுமந்த படலம்

62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

63. சமணரை கழுவேற்றிய படலம்

64. வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

இனி வரும் வாரங்களில் இறைவனின் ஒவ்வொரு திருவிளையாடல்கள் பற்றிப் பார்ப்போம்.

வ.முனீஸ்வரன்

2 Replies to “திருவிளையாடல் புராணம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.