அட்சய திருதியை

அட்சய திருதியை சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்து மற்றும் சமணர் மதச் சேர்ந்தவர்கள் இந்நாளைப் புனிதநாளாகக் கருதுகின்றனர்.

அட்சயம் என்ற சொல்லுக்கு என்றும் குறைவில்லாது வளர்தல் என்பது பொருளாகும்.

அன்றைய தினத்தில் தொடங்கும் செயல்கள் எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் நாள் ஆதலால் இந்நாள் இந்துக்களால் அட்சய திருதியை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

சமண சமயத்தில் தீர்த்தங்காரர்களில் ஒருவரான ரிஷப தேவர் என்பவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்நாளானது புதிய நல்ல செயல்களைத் தொடங்குதல், தான தருமங்கள் செய்தல், விலையுயர்ந்த பொருட்களை வாங்குதல் ஆகியவற்றிற்கான சிறந்த நாளாக  இந்துக்களால் கருதப்படுகிறது.

இந்நாளில் மூதாதையருக்கு நீத்தார் கடன் செய்தல் சிறப்பாகும். இதனால் வறுமையான வாழ்வு நீங்கி சிறப்பான வாழ்வு அமையும். வீடுகள் மற்றும் ஆலயங்களில் இந்நாளில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

 

அட்சய திருதியையின் சிறப்புக்கள்

அட்சய திருதியை அன்றுதான் பகீரதனின் தவத்தின் காரணமாக கங்கை பூமியைத் தொட்டது.

அன்றுதான் பாண்டவர்கள் சூரியனிடமிருந்து வற்றாத உணவைத் தரும் அட்சய பாத்திரத்தையும், மணிமேகலை அட்சயப் பாத்திரத்தையும் பெற்றனர்.

 பிரம்மஹத்தி தோசம் காரணமாக சிவபெருமானின் கையில் ஒட்டியிருந்த பிரம்ம‌ கபாலத்தில் அன்னபூரணி உணவினை நிரப்பி பிரம்ம‌ கபாலத்தை விழச் செய்து சிவனின் தோசம் நீக்கியதும் அன்றைய நாளில்தான்.

கவுரவர் சபையில் பாஞ்சாலியின் மானத்தைக் காக்க கிருஷ்ண பரமாத்மா அட்சய என்று கூறி ஆடை கொடுத்ததும் அட்சய திருதியை அன்றுதான்.

வியாசர் மகாபாரதத்தை விநாயகரிடம் எழுதுமாறு வேண்டியதும் அட்சய திருதியை தினத்தில்தான்.

திருமாலின் தசாவதாரங்களில் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதாரமும், எட்டாவது அவதாரமுமான பலராமர் அவதாரமும் நிகழ்ந்தது இத்தினத்தில்தான்.

அன்பினால் ஒரு பிடி அவலை கிருஷ்ணனுக்கு தானமாகக் கொடுத்து குசேலர் எல்லாச் செல்வங்களைப் பெற்றதும் இத்தினத்தில்தான்.

சாபத்தினால் தேய்ந்து கொண்டிருந்த சந்திரன் மீண்டும் வளரத் துவங்கியதும் இத்தினத்தில்தான்.

திருமாலின் மார்பில் திருமகள் நீங்கா இடம் பெற்றதும் அட்சய திருதியை தினத்தில்தான்.

அஷ்டலட்சுமிகளில் இருலட்சுமிகளான தானிய லட்சுமியும், ஐஸ்வரிய லட்சுமியும் இத்தினத்தில்தான் தோன்றினர்.

செல்வத்துக்கு அதிபதியான குபேரன் மகாலட்சுமியிடம் இருந்து அஷ்ட ஐஸ்வரியங்களைப் பெற்றதும் இத்தினத்தில்தான்.

 

அட்சய திருதியையில் செய்யப்படும் தானத்தின் சிறப்பு

அட்சய திருதியை அன்று செய்யப்படும் தானமானது புண்ணியங்களைக் கொடுக்கும். நம்மால் முடிந்த அளவு இந்நாளில் செய்யப்படும் தானமானது பல்கிப் பெருகி மிக நல்ல பலன்களை அளிக்கும்.

மகிழ்ச்சி, நோயற்ற வாழ்வு, செல்வச் செழிப்பு ஆகியவற்றைப் பெற அட்சய திருதியை நாளில் தான தருமங்கள் செய்ய வேண்டும். இந்நாளில் செய்யப்படும் தானதருமானது எமபயத்தை நீக்கும்.

அன்னம், தண்ணீர், அரிசி, பருப்பு, குடை, விசிறி, போர்வை, தானியங்கள், பழங்கள், ஆடைகள், தயிர் சாதம், இனிப்புகள், கால்நடைகள் போன்றவற்றை தானமாக இத்தினத்தில் கொடுக்கலாம்.

 

அட்சய திருதியையில் செய்யப்படும் தானப்பொருட்களின் பலன்

ஆடை, போர்வை – நோய்கள் நீங்கி சுகபோக வாழ்வு கிடைக்கும்

தயிர் சாதம் – ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளைக் கொடுக்கும். பாவங்களைப் போக்கும்

இனிப்புகள் – திருமணத்தடையை நீக்கும்.

அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் தானியங்கள் – பாதுகாப்பான பயணம்

பசு, நாய்க்கு உணவு – மன அமைதி, செல்வ வளம்

பழங்கள் – சிறப்பான வாழ்க்கை, உயர் பதவி கிடைத்தல்

அன்ன தானம் – உணவுப் பஞ்சம் நீங்கும், விபத்துக்கள் நிகழாது

நீர்மோர், பானகம் – குழந்தைகளின் கல்வி மேம்படும்.

தண்ணீர் – ராஜ வாழ்வு

கால்நடைகள் – வளமான வாழ்வு

 

அட்சய திருதியையில் வழிபாடு செய்யும் முறை

அட்சய திருதியை அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வழிபாட்டிடத்தில் நீரினால் அல்லது தானியத்தால் நிரப்பட்ட கலசம் வைத்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

அல்லது சிவன்பார்வதி, நாராணயன்லட்சுமி, இஷ்டதெய்வங்கள், குலதெய்வங்கள் ஆகியவற்றின் உருவப்படங்கள் வைத்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

வழிபாட்டின்போது அருகம்புல், மரிக்கொழுந்து, வில்வம், துளசி, மல்லிகை, செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது. பின் சிவாலயங்கள், பெருமாள் கோவில்களில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

 

அட்சய திருதியையில் செய்யக் கூடியவை

கோவில்களில் அன்னதானம் செய்யலாம். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்ளலாம்.

குழந்தைகளின் கல்விக்குத் தேவையான நோட்டு புத்தகங்கள், பேனா, கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கலாம்.

சுபகாரியங்களைத் தொடங்கலாம்.

கோவில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்ளலாம்.

அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம்.

ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர், முதியோர்கள் ஆகியோருக்கு நம்மால் இயன்ற உதவிகளையும், தானங்களையும் வழங்கலாம்.

நல்ல செயல்களை இன்று முதல் தொடங்கலாம்.

தருமம் தலை காக்கும் என்பதினை விளக்கும் விழாவான அட்சய திருதியை அன்று தான தருமங்கள் செய்து, நல்ல செயல்களைத் தொடங்கி வாழ்வில் முன்னேறி சுக வாழ்வு வாழ இறைவனை வழிபடுவோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.