இந்தியாவின் பீடபூமிகள்

இந்தியாவின் பீடபூமிகள் அதன் மொத்த பரப்பளவான 32 லட்சம் சதுர கிமீ-ல் 16 லட்சம் சதுர கிமீ பரப்பளவினை கொண்டுள்ளன. இங்குள்ள பீடபூமிகளின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 600-900 மீட்டர் ஆகும்.

இந்தியாவில் பொதுவாக ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்றன. இது பொதுவான சாய்வைக் குறிக்கிறது.

நர்மதை, தபதி, மாஹி ஆகியவை கிழக்கிலிருந்து மேற்காக ஓடுகின்றன.

இந்தியாவின் பீடபூமிகள் பூமியில் உள்ள பழமையான நிலவமைப்பு ஆகும். இது பெரும்பாலும் ஆர்க்கியன் கெய்னிஸ் மற்றும் ஸ்கிஸடுகளால் ஆன மிகவும் நிலையான தொகுதி ஆகும்.

இது உருவான நாட்களிலிருந்து சிறிய கட்டமைப்பு மாற்றங்களை மட்டுமே சந்தித்துள்ளது. இங்கு காணப்படும் பீடபூமிகளில் சில பல சிறிய பீடபூமிகளின் தொகுப்புகளாக உள்ளன.

மலைத்தொடர்கள், நதிப்படுகைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் பீடபூமிகளில் குறுக்கிடுகின்றன.

மார்வார் பீடபூமி

மார்வார்பீடபூமிமார்வார்பீடபூமி

இப்பீடபூமியானது கிழக்கு ராஜஸ்தானில் ஆரவல்லி மலைத்தொடருக்கு கிழக்கே காணப்படுகிறது. இதனுடைய சராசரி உயரமானது கடல்மட்டத்திலிருந்து 250-500மீ-ராகவும், கிழக்குப் பகுதியில் சரிவினையும் கொண்டுள்ளது.

இது மணற்கற்கள், சுண்ணாம்புப்பாறைகள் மற்றும் ஷேஸ்ஸ் ஆகியவற்றால் ஆனது. பனாஸ் ஆறானது அதன் துணை ஆறுகளான பெராக் மற்றும் காரி ஆகியவற்றுடன் ஆரவல்லியில் உருவாகி சுமார் 400 கிமீ ஓடி வடமேற்கில் உள்ள சம்பல் நதியில் கலக்கிறது.

இந்த ஆறுகளின் செயல்பாட்டால் இப்பீடபூமியின் மேற்பரப்பானது மேடுபள்ளங்களுடன் காணப்படுகிறது.

மத்திய உயர்நிலம்

மத்திய உயர்நிலம்மத்திய உயர்நிலம்

இது மத்திய பாரத் பதார் அல்லது மத்திய பாரத் பீடபூமி என்று அழைக்கப்படுகிறது. இது மேர்வார் பீடபூமியின் கிழக்கே அமைந்துள்ளது.

இப்பீடபூமியின் பெரும்பகுதி சம்பல் ஆற்றின் படுகையை உள்ளடக்கியது. இது ஒரு பிளவு பள்ளத்தாக்கில் பாய்கிறது.

ராணா பிரதாப் சாகரில் இருந்து பாயும் காளிசிந்து, மேவார் பீடபூமியில் இருந்து வரும் பனாஸ் மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து பாயும் பர்பதி ஆகியவை சம்பல் ஆற்றின் முக்கிய துணை ஆறுகளாகும்.

இது மணற்கற்ளாலான மலைகளால் சூழப்பட்ட உருளும் பீடபூமியாகும். அடர்த்தியான காடுகள் இங்கு வளர்கின்றன.

இப்பீடபூமியின் வடக்குப்பகுதி சம்பல் நதியின் வறண்ட பள்ளாத்தாக்காகக் காணப்படுகிறது.

புந்தேல்கண்ட் உயர்நிலம்

புந்தேல்கண்ட் உயர்நிலம்புந்தேல்கண்ட் உயர்நிலம்

இப்பீடபூமியின் எல்லையாக வடக்கில் யமுனை நதி, மேற்கில் மத்திய பாரத் பதர், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் செங்குத்தான விந்தியன் மலைகள் மற்றும் தெற்கே மாளவ பீடபூமி ஆகியவை இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது கிரானைட் மற்றும் கெய்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய புந்தேல்கண்ட் கெய்னிஸின் பழைய சிதைந்த உயர்நிலமாகும். இது உத்திரபிரதேசத்தின் ஐந்து மாவட்டங்களிலும், மத்திய பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களிலும் பரவிக் காணப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து 300-600மீ உயரத்துடன் தெற்கே உள்ள விந்தியன் மலையிலிருந்து வடக்கே உள்ள யமுனையை நோக்கி சரிந்தும் காணப்படுகிறது.

இப்பகுதியானது கிரானைட் மற்றும் மணற்கற்களால் ஆனது. இங்கு பாயும் ஆறுகளின் அரிப்பால் மேற்பரப்பானது சமதளமற்று வேளாண்மைக்கு தகுதியற்றதாக உள்ளது.

இது மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது. பெட்வா, தாசன், கென் போன்ற நீரோடைகள் இப்பீடபூமியின் வழியே பாய்கின்றன.

மாளவ பீடபூமி

மாளவ பீடபூமிமாளவ பீடபூமி

மாளவ பீடபூமி தோராயமாக விந்தியன் மலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முக்கோணத்தை உருவாக்குகிறது.

இது மேற்கில் ஆரவல்லி மலைத்தொடர், வடக்கே மத்திய பாரத் பதார் கிழக்கில் புந்தேல்கண்ட் ஆகியவற்றை எல்லைகளாக் கொண்டுள்ளது.

இப்பீடமியானது இரண்டு வடிகால் அமைப்புகளைக் கொண்டுள்ளது. நர்மதை, தபதி, மாஹி போன்றவை அரபிக்கடலிலும், சம்பல், பெட்வா போன்றவை யமுனையில் சேர்ந்து பின் வங்காள விரிகுடாவிலும் கலக்கின்றன.

இது எரிமலை செயல்பாடுகளினால் உண்டான கரிசல் மண்ணால் ஆனது. இப்பீடபூமி வடக்கு நோக்கிச் சரிந்து காணப்படுகிறது. இது ஆறுகளால் பிரிக்கப்பட்ட உருளும் பீடபூமியாகும்.

பாகேல்கண்ட் பீடபூமி

பாகல்கண்ட் பீடபூமிபாகேல்கண்ட் பீடபூமி

இப்பீடபூமி மைக்கால் மலைத்தொடரின் வடக்கே அமைந்துள்ளது. இப்பீடபூமியின் மேற்கு பகுதி மணற்கற்கள் மற்றும் சுண்ணாம்பு கற்களால் ஆனது.

இப்பீடபூமியின் வடக்குப்பகுதியானது சோன் நதியால் சூழப்பட்டுள்ளது. இப்பீடபூமியானது வடக்கில் சோன் நதியையும், தெற்கில் மகாநதியையும் பிரிக்கிறது.

இது 1.4 லட்சம் சதுரகிமீ பரப்பளவினையும், 150மீ முதல் 1200மீ வரை சராசரி உயரத்தினையும் கொண்டுள்ளது.

சோட்டாநாகபுரி பீடபூமி

சோட்டா நாகபுரி பீடபூமிசோட்டா நாகபுரி பீடபூமி

இப்பீடபூமியானது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும்பகுதியையும், மேற்கு வங்காளம், பீகார், ஒரிஸா, சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் சிலபகுதிகளையும் கொண்டுள்ளது.

இதனுடைய வடமேற்குப்பகுதியின் வழியே சோன் நதி பாய்ந்து கங்கையில் கலக்கிறது. இதனுடைய சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 700மீ ஆகும்.

இது கோண்ட்வானா பாறைகளால் ஆனது. இப்பீடபூமியில் தாமோதர், சுபர்ன்ரேகா, வடக்கு மற்றும் தெற்கு கோயல், பர்கார் போன்ற ஆறுகள் விரிவான வடிகால் படுகைகளை உருவாக்கியுள்ளன.

தாமோதர் நதி இதனுடைய நடுப்பகுதியில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கிறது. இந்தியாவின் வளமான நிலக்கரியை வழங்கும் கோண்ட்வானா நிலக்கரி வயல்கள் இங்கு காணப்படுகின்றன.

இப்பீடபூமியானது ராஞ்சி, ஹாசரிபாக், கோடர்மா என்ற மூன்று மேட்டுநிலங்களால் ஆனது. 700மீ உயரத்திலுள்ள ராஞ்சி மேட்டுநிலமே இவற்றுள் பெரியது.

இதனுடைய மொத்த பரப்பளவு 65,000 சதுரகிமீ ஆகும். இப்பீடபூமியின் பெரும்பகுதி அடர்ந்த காடாக உள்ளது.

மேகாலயா பீடபூமி

மேகாலயா பீடபூமிமேகாலயா பீடபூமி

இப்பீடபூமி ஆர்க்கியன் குவார்ட்சைடுகள், ஷேல்ஸ் மற்றும் ஸ்கிஸ்டுகளால் ஆனது.

இப்பீடபூமி வடக்கே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கே சுர்மா மற்றும் மேக்னா பள்ளத்தாக்குகள் வரை சாய்ந்து செல்கிறது.

இதனுடைய மேற்கு எல்லை வங்காளதேசத்தை ஒட்டி அமைந்துள்ளது.

இப்பீடபூமியின் மேற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கரோ மலை (900மீ), காசி-ஜெயந்தியா மலை (1500மீ) மற்றும் மிகிர் மலை (700மீ) ஆகியவை அமைந்துள்ளன. இப்பீடபூமியின் உயரமான பகுதி ஷில்லாங் (1961மீ) ஆகும்.

தக்காண பீடபூமி

தக்காண பீடபூமிதக்காண பீடபூமி

இப்பீடபூமியானது ஐந்து இலட்சம் சதுரகிமீ பரப்பினைக் கொண்டுள்ளது. முக்கோண வடிவமுடைய இது வடமேற்கில் வித்திய-சாத்பூராவையும், மகாதேவ், மெய்காலை வடக்கிலும், மேற்கில் மேற்குத்தொடர்ச்சியையும், கிழக்கில் கிழக்குத்தொடர்ச்சியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

இதனுடைய சராசரி உயரம் 600மீ. இப்பீடபூமியின் தெற்குப்பகுதி உயரம் 1000மீ-ராகவும், வடக்குப்பகுதி உயரம் 500மீ-ராகவும் உள்ளது.

இப்பீடபூமி மேற்கிலிருந்து கிழக்காக சரிந்து காணப்படுகிறது. இதன் வழியே பாயும் ஆறுகள் இதனை சில சிறுபீடபூமிகளாக மாற்றியுள்ளன.

அவை மகாராஷ்டிரா பீடபூமி, கர்நாடகா பீடபூமி, தெலுங்கானா பீடபூமி, சத்தீஸ்கர் சமவெளி ஆகியவை ஆகும்.

மகாராஷ்டிரா பீடபூமி

மகாராஷ்டிரா பீடபூமிமகாராஷ்டிரா பீடபூமி

இது தக்காண பீடபூமியின் வடக்குப் பகுதி ஆகும். பசால்ட் பாறைகளால் இப்பகுதி ஆனது. இதனுடைய பக்கவாட்டில் கோதாவரி, பீமா மற்றும் கிருஷ்ணாவின் பரந்த மற்றும் ஆழமற்ற பள்ளத்தாக்குகள் பக்கவாட்டில் உள்ளன. இப்பகுதி முழுவதும் கரிசல் மண்ணால் ஆனது.

கர்நாடகா பீடபூமி

கர்நாடக பீடபூமிகர்நாடக பீடபூமி

இது மைசூர் பீடபூமி என்றும் அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிரா பீடபூமியின் தெற்கே இது அமைந்துள்ளது. இதனுடைய சராசரி உயரம் 600-900மீ.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் ஆறுகளால் இப்பீடபூமியானது பலபகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. இதனுடைய உயர்ந்த பகுதியானது (1913மீ) சிக்மங்களுர் மாவட்டத்தில் பாபா புடன் மலையில் முலங்கிரி என்ற இடத்தில் உள்ளது.

இது மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்குத்தொடர்ச்சி மலையை நோக்கி சரிந்து நீலகிரியில் சந்திக்கிறது.

தெலுங்கானா பீடபூமி

தெலுங்கானா பீடபூமிதெலுங்கானா பீடபூமி

இதனுடைய தெற்குப்பகுதி உயரமாகவும், வடக்குப்பகுதி தாழ்வாகவும் உள்ளது. இப்பகுதியில்தான் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு ஆகியவற்றின் வடிநிலங்கள் உள்ளன. இதனுடைய சராசரி உயரம் 500-600மீ ஆகும்.

சத்தீஸ்கர் சமவெளி

Chhattisgarh Plainsசத்தீஸ்கர் சமவெளி

இது கிழக்கில் 250மீ உயரத்தினையம், மேற்கில் 330மீ உயரத்தினையும் கொண்டுள்ளது. இது மகாநதியால் உருவாக்கப்பட்ட தட்டு வடிவ பள்ளச் சமவெளி ஆகும்.

இப்பகுதியானது மைக்காலா மற்றும் ஒடிசா மலைப்பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. இச்சமவெளியின் அடிப்பரப்பு சுண்ணாம்பு பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சமவெளியானது கிழக்கில் 250மீ உயரத்திலும், மேற்கில் 330மீ உயரத்திலும் காணப்படுகிறது.

இந்தியாவின் பீடபூமிகள் பற்றித் தெரிந்து கொண்டீர்கள்தானே! அதன் அழகை சுற்றிப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

வ.முனீஸ்வரன்