இந்தியாவே உன்பெயர் மாசோ

இந்தியாவே உன்பெயர் மாசோ என்று எண்ணும் அளவுக்கு அண்மையில் வெளியிட்ட உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை உள்ளது.

உலகில் அதிக காற்று மாசுபாடு அடைந்துள்ள நகரங்கள் பற்றிய பட்டியலை உலக சுகாதார நிறுவனம் 02.05.2018 அன்று வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலானது 2016-ஆம் ஆண்டு சுமார் 108 நாடுகளில் 4300 நகரங்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் முதல் 14 இடங்களில் இந்தியாவில் உள்ள நகரங்கள் இருக்கின்றன என்பது அதிர்ச்சி கலந்த வேதனையான விசயமாகும். காற்று மாசுபாட்டினை உலக சுகாதார நிறுவனம் அமைதியான கொலைகாரன் என்று குறிப்பிடுகிறது.

இப்பட்டியலில் காற்றில் உள்ள துகள்களின் அளவுகளைக் கொண்டு மாசுபாடு வரையறை செய்யப்பட்டுள்ளது.

பிஎம் 10, பிஎம் 2.5 என்றால் என்ன?

காற்று மாசுபாடு அடைந்தள்ளது என்பதை காற்றில் உள்ள துகள்களின் அளவுகளால் அதாவது பிஎம்10, பிஎம்2.5 என்ற அளவுகளை வைத்து நிர்ணயம் செய்கின்றனர்.

பிஎம்10 என்பது காற்றில் உள்ள கரடுமுரடான துகள்களின் விட்டமானது 2.5 முதல் 10 மைக்ரோ மீட்டர் வரை இருக்கும்.

பிஎம் 10-யானது மனிதனின் முடியை விட 25 முதல் 100 மடங்கு வரை சிறியது. பிஎம் 10 துகளானது  சில நிமிடங்களிலிருந்து சில மணி நேரம் வரை காற்றில் இருக்கும். மேலும் இது 30 மைல் தூரம் வரை செல்லும் ஆற்றல் உடையது.

பிஎம்2.5 என்பது காற்றில் உள்ள கரடுமுரடான துகள்களின் விட்டமானது 2.5 மைக்ரோ மீட்டரைவிட குறைவாக இருக்கும்.

பிஎம் 2.5-யானது மனிதனின் முடியை விட 100 மடங்குக்கு மேல் சிறியது. பிஎம் 2.5 துகளானது காற்றில் சில நாட்களிலிருந்து சில வாரம் வரை காற்றில் இருக்கும். இத்துகளானது பல மைல் தூரம் வரை செல்லும் ஆற்றல் உடையது.

ஓர் இடத்தில் காற்றில் உள்ள துகள்களின் ஆண்டின் சராசரி அளவாக‌ பிஎம்10 துகள் 20 மைக்ரோகிராம் / கனமீட்டர் என்ற அளவிலும், பிஎம்2.5 துகள் 10மைக்ரோகிராம் / கனமீட்டர் என்ற அளவிலும் இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ளது. இதுவே பாதுகாப்பான வரம்பாகும்.

இவ்வரம்பினைத் தாண்டும்போது காற்றானது உயிர்களுக்கு பெரும் தீங்கினை விளைவிக்கிறது.

உலகின் பல இடங்களில் காற்றின் மாசுபாடானது உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள அளவினைவிட மிக அதிகமாக உள்ளது.

பிஎம்2.5-ல் மிகவும் நுண்ணிய துகள்களான நைட்ரேட், சல்பேட், கார்பன் ஆகிய உடலுக்கு பெரும் ஊறுவிளைவிக்கக்கூடிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இனி உலக அளவில் காற்று மாசுபாட்டில் முதல் பதினைந்து இடங்களைப் பெற்றுள்ள நகரங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

 

வ. எண் நகரம் (மாநிலம்) பிஎம் 2.5ன் அளவு தரவரிசை
1 கான்பூர் (உத்திரப்பிரதேசம்) 173 1
2 பரீதாபாத் (அரியானா) 172 2
3 வாரணாசி (உத்திரப்பிரதேசம்) 151 3
4 கயா (பீகார்) 149 4
5 பாட்னா (பீகார்) 144  5
6 டெல்லி (டெல்லி) 143 6
7 லக்னோ (உத்திரப்பிரதேசம்) 138 7
8 ஆக்ரா (உத்திரப்பிரதேசம்) 131 8
9 முசப்பார்பூர் (பீகார்) 120 9
10 ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்) 113 10
11 குர்கான் (அரியானா) 113 11
12 ஜெய்ப்பூர் (இராஜஸ்தான்) 105  12
13 பாட்டியாலா (பஞ்சாப்) 101 13
14 ஜோத்பூர் (இராஜஸ்தான்) 98 14
15 அலி சபா அல் சலாம்  (குவைத் நாடு) 94 15

இந்தியா என்றாலே அது மாசடைந்த நாடு என்று பொருள் ஏற்படுவதாகத்தான் உள்ளது.

 

 உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவிப்பின்படி பார்த்தால் பெரும்பாலான இந்திய நகரங்கள் நச்சுக் காற்றினையே கொண்டிருக்கின்றன.

உலகில் உள்ள 10-ல் 9 பேர் நச்சுக் காற்றினை சுவாசிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் 3.8 மில்லியன் மக்கள் வீட்டு காற்று மாசுபாட்டினாலும், 4.2 மில்லியன் மக்கள் சுற்றுப்புற காற்று மாசுபாட்டினாலும் இறக்கின்றனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

உலகில் 7 மில்லியன் மக்கள் சிறுதுகள்களைக் கொண்ட நச்சுக் காற்றினால் இறக்கின்றனர் என்று கணக்கிட்டுள்ளது.

இந்த சிறுதுகள்கள் கொண்ட காற்றினை சுவாசிக்கும் போது இந்த துகள்கள் இதயம் மற்றும் சுவாச மண்டலத்தில் ஆழமாக ஊடுருவிச் செல்கின்றன.

இதனால் பக்கவாதம், இதயநோய், நுரையீரல் புற்றுநோய், நிமோனியா உள்ளிட்ட சுவாச நோய்கள் ஏற்படுகின்றன.

7 மில்லியன் மக்களில் 34 சதவீதம் பேர் குருதியோட்ட குறை இதய நோயாலும், 21 சதவீத மக்கள் நிமோனியாவாலும் இறக்கின்றனர். 20 சதவீத மக்கள் பக்கவாதத்தாலும் 19 சதவீதம் பேர் நுரையீல் நோயாலும், 7 சதவீதம் பேர் நுரையீரல் புற்றுநோயலும் இறக்கின்றனர்.

உலகில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் இறப்புகள் ஆசியா, ஆப்பிரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல்பிரதேசம், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகில் 3 பில்லியன் மக்கள் (40 சதவீதம்) சமையல் எரிபொருளால் வீட்டு காற்று மாசுபாட்டால் அவதியுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுண்துகள்களைக் கொண்ட காற்றுமாசுபாடானது வீடுகள், தொழிற்சாலைகள், போக்குவரத்து சாதனங்கள், வேளாண்மை, நிலக்கரியைக்கொண்டு மின்சாரம் தயார்செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவைகளில் பயன்படுத்தப்படும் முறையற்ற எரிபொருள் பயன்பாடினால் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மணல் மற்றும் பாலைவன தூசு, கழிவுகளை எரித்தல், காடுகளை அழித்தல் ஆகியவையும் காற்று மாசுபாட்டிற்கு காரணங்களாகின்றன என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் கூறப்பட்டுள்ளது.

“காற்று மாசு எல்லைகளை அடையாளம் காணவில்லை. காற்றின் தரத்தை மேம்படுத்துதல் அனைத்து மட்டங்களிலும் தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைக் கோருகிறது” என்று காற்று மாசுபாட்டில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னேற்றம் என்ற பெயரில் நாம் தொடர்ந்து காற்று மாசுபாட்டினை ஏற்படுத்தினால் இந்திய மக்களின் வாழ்க்கை என்பது நரக வாழ்க்கையாகத்தான் அமையும்.

வ.முனீஸ்வரன்