எத்தனை விறகுகள் எரிந்தனவோ
விடுதலைப் பருக்கைகள் வேகுதற்கே
எத்தனைக் கனவுகள் கலைந்தனவோ
இத்தரை விடியலில் எழுவதற்கே
எத்தனை விளக்குகள் அணைந்தனவோ
இத்தரை ஒளியினில் சுடர்வதற்கே
எத்தனை உயிர் மாய்ந்தனவோ
இத்தரை உணர்வினைக் காப்பதற்கே
அரசியல் விடுதலை யடைந்ததுமே
அதுமிகப் பெரிதென அயர்ந்து விட்டோம்
உரசியல் தொடர்கிற படிநிலையை
உளிகொடு தகர்த்திடத் தவறி விட்டோம்
கரவியல் குணப்பொருள் பொதுமை செய்யக்
கனவிலும் நினைக்கிலேம் உறங்கி விட்டோம்
முரசுகள் முழங்கினும் அவை நடுவில்
முயலவே தயங்கினோம் இறந்து விட்டோம்
மனிதரே மனிதரே நமக்குள்ளே
மாபெரும் பிளவுகள் வேண்டாதீர்
புனிதராய் வாழ்வினில் இலையெனினும்
புதுயுகக் கருவினைக் கொல்லாதீர்
கனிதரும் சோலையின் வேர்களிலே
காய்ச்சிய ‘தாரினை’ ஊற்றாதீர்
இனிவரும் தலைமுறை வாழட்டும்
இடையினில் தூணென நில்லாதீர்
இனமதப் பிரிவதன் இழிவுணர்ந்தே
இயற்கையோ டியைந்திட வழியமைப்போம்
மனக்குகை அழுக்குகள் நீங்குமட்டும்
மானிடத் துறைக்கென அமைச்சமைப்போம்
புனக்குயில் கூவிட பரணமைப்போம்
புல்லிதழ் உணர்வுக்கு விடை கொடுப்போம்
மெனக்கெடுத் தாருயிர் அரவணைப்போம்
மேன்மையுள் மாந்தராய் வாழுதற்கே!
ஆதிகவி (எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!