உங்கள் புழங்கடைத் தோட்டத்து வாவியுள் என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினான்காவது பாசுரம் ஆகும்.
முதல் நாள் இரவு ‘உங்களை எல்லாம் நாளை முதலில் நான் வந்து எழுப்புவேன்’ என்று கூறிய பெண் அதனை மறந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவ்வாறு சொன்னதை மறந்து தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை எழுப்புவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.
திருப்பாவை பாடல் 14
உங்கள் புழங்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினக்காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்
விளக்கம்
நீ முன்னதாக எழுந்து எங்களை எல்லாம் எழுப்புவதாக நேற்றே கூறிய பெண்ணே. நீ கூறியவற்றை எல்லாம் மறந்து இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்.
சொன்னைதை மறந்து விட்டாயே. அதற்காக நீ வெட்கபட வேண்டும். நங்கையே, உங்கள் வீட்டில் பின்புறத்தில் உள்ள சிறுகுளத்தில் விடியலின் பொருட்டு ஆம்பல் மலர்கள் சுருங்கி செங்கழுநீர் மலர்கள் பூக்கத் தொடங்கிவிட்டன.
அதனை வந்து நீ பார். பொழுது விடிந்ததால் காவிநிற உடை அணிந்த வெண்மையான பற்களைக் கொண்ட துறவிகள் யாவரும் திருக்கோவிலின் சங்கு ஒலிப்பதைக் கேட்டு வழிபாட்டிற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.
வெண்ணிற சங்கினையும், சக்கரத்தையும் ஏந்திய நீண்ட கரத்தினை உடையவன். தாமரை போன்ற அழகிய கண்களை உடையவன். இத்தன்மைகளை உடைய திருமாலாகிய கண்ணனை போற்றி எங்களுடன் இணைந்து பாட உறக்கத்திலிருந்து உடனே எழுந்து வா.
இப்பாடல் சொல்ல வருவது ஒரு அரிய உண்மையாகும். நம்மில் பலர் மிக உயர்ந்த இலக்குகளை வைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதை அடைவதற்கான உழைப்பைக் கொடுப்பதில்லை.
அந்த உண்மையை இந்தப் பாடல் தெளிவாக விளக்குகின்றது.
அதாவது மறுநாள் காலை தான் முதல் ஆளாக எழுந்து, மற்றவர்களை எழுப்ப வேண்டும் என்று ஒரு பெண் விரும்புகிறாள். ஆனால் அதை அவள் செயலில் காட்டவில்லை. மாறாக அவள் தன் இலக்கில் கவனம் வைக்காமல் சோம்பலாக இருக்கின்றாள்.
அதனால் அவளால் அவள் விருப்பப்படிச் செயல்பட முடியாமல் போய்விட்டது.
நாம் அப்படி இருக்கக் கூடாது. உயர்ந்த இலக்கை அடைய எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே இப்பாடலின் மறைபொருள்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!