வயதான தேகம் பலமின்றி நடுங்கியது. சற்று நிதானித்து நின்றுவிட்டு குனிந்து கூடையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டுக் கிளம்ப
யத்தனித்தாள்.
அவளை தடுக்கும் விதமாய் கூடையிலிருந்து பழத்தை எடுத்த அந்த ஆண் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கொஞ்சமாய் உடலை மேலே எழுப்பி கைகளைத் தூக்கி கிழவியின் பலமற்ற இடுப்பில் இருந்த கூடையை ‘வெடுக்’கெனப் பற்றி இழுத்தான்.
அடுத்த அடி எடுத்து வைக்க முடியாதவளாய் கூடையோடு ‘தொப்’பென்று தரையில் உட்கார்ந்தாள் கிழவி.
“அட நாசமத்துப் போறவனே! வந்துட்டியா உயிர எடுக்க!”
“பெத்தவள தேடி மவன் வர்ரதுல என்னா அதிசயம்! என்னமோ பேசுற! சொல்லிக் கொண்டே மீண்டும் கூடையிலிருந்து கொய்யாப் பழத்தை எடுத்தவனின் கையைப் ‘பட்’டெனத் தட்டிவிட்டாள் கிழவி.
“ச்சீ! இன்னொரு மொற பெத்தவ, பெத்தவன்னு சொல்லாத சோமாறி பயலே! த்தூத்தேறி!”
“அப்ப நீ என்னய பெக்கல?”
“ஏய்! திருட்டு நாயே! குடிகாரப் பயலே! ஒம் மூஞ்சிலயே முழிக்கக்கூடாதுன்னு இருந்தேன். மறுபடி ஏ வந்த!”
“ம்..எதுக்கு வருவேன்? பணத்துக்குதா!”
“ச்சீ! எந்திருச்சு ஓடிடு. குடுத்து வச்சவ மாரி பணங்கேட்டு வந்ருக்கேன்ற!”
“ஏ! யாரு பையையயும் அறுத்து பணமெடுக்கிலியா! எவ கழுத்துத் தாலியையும் பறிக்கிலியா! வூடுங்க பூந்து திருடலியா! திடீர்னு நல்லவனாயிட்டியா? திருட்டு நாயே”
“த, கெளவி! ரொம்பப் பேசுற. காலேலேந்து நாஷ்டா துண்ணல, பசி தாங்கல. ஒரு
குவார்ட்டருக்கு வழியில்ல, பெத்த புள்ள பசிக்குதுங்குறேன். பெத்தவ தவிச்சு போமாட்ட?
ஐயோ நம்ம புள்ள பசிக்குதுங்குதே! மொதல்ல போயி நாஷ்டா துண்ணுன்னு சட்டுனு பணத்த எடுத்துக் குடுக்க மாட்ட?
அத வுட்டுட்டு அறுக்குலியா? பறிக்கிலியா? திருடுலியான்னு கேட்டுக்கிட்ருக்க. பசீல வவுறு கிள்ளுது சரக்கு கேட்டு நாக்கு நமநமங்குது. நானே நேத்துதான் பொழல் ஜெயில்ல இருந்து வெளிய வந்தேன். கைல தம்பிடி இல்ல”
“ஏய்! நாதாரி நாயே! மறுபடியும் சொல்றேன் எளுந்து ஓடிப் போயிடு. ஒன்ன சொமந்த இந்த வயித்த நானே கத்தியால குத்தி கிளிச்சிருக்கணும்டா பாவி.
ஒன்னாட்டம் ஒரு கேடு கெட்டவன புள்ளையா பெத்ததுக்கு நா நாண்டுகிட்டு செத்துருக்கனும். இன்னும் மானங்கெட்டத் தனமா உசிரோட இருக்கேம் பாரு.
என்னிக்கு ஒம்போட்டோவ போலீசு ஸ்டேஷனுல ஒட்டீருக்குறத பாத்தேனோ அந்நிக்கே அப்பவே நா மனசால செத்துட்டேண்டா பாவி. பொது எடமுனு பாக்குறேன். இல்லாட்டி வாயில வண்ட வண்டயா வருவுது. கத்தாம அடக்கிக் கிட்ருக்கேன். ஓடிடு!”
“த, கெளவி! என்னா ஓடீடு, ஓடீடுன்ற. ரொம்பதா கூவுற. எளுந்து மிதிச்சேன்னா தெரியுமா? நாக்கு வெளிய வந்துடும். பணத்த குடுத்தீன்னா நானா எளுந்து
போயிடப் போறேன். அத வுட்டுப்பிட்டு ரொம்பதா பிலிமு காட்டுற”
“எங்கிட்ட காசு இல்ல”
“காசு இல்லியா? இடுப்புல தொங்குற ஊதாகலரு சுருக்குப்பை வயிறு உப்பிக் கெடக்கு. பழம் வித்த காசு அம்புட்டும் அதுலதானே இருக்கு”
“ஒங்கண்ணுல பாம்பு கொத்த, சுருக்குப்பையில இருக்குற பணம் எம்பணமா இல்ல கூடயில இருக்குற பழம்தான் எந்தோட்டத்துல, தோப்புல வெளஞ்சதா!
பழக்கட முதலாளிட்ட பழத்த வாங்கி கால் தேய, செருப்பு தேய அங்கிட்டும் இங்கிட்டும் மழையின்னும் பாக்காத, வெய்யிலுன்னும் பாக்காத இந்தத் தள்ளாத வயசுல அலஞ்சு திரிஞ்சி வித்து,
பழம் குடுத்த மொதலாளிட்ட வித்த பணத்தயும் மிச்ச பழத்தையும் குடுத்தா வித்த பணத்துக்கு ஏத்தபடி அவுரு கொடுக்குற கமிஷனு பத்தோ இருவதோ, அத வெச்சுக்கிட்டு அன்னாடம் உப்பு, புளி, மொளவா வாங்கி ரேஷனரிசியில சோத்தப் பொங்கி வவுத்த நெறப்பிக்கிட்ருக்கேன்.
வெவரம் கேக்க வந்துட்டியா?
வயசான காலத்துல நீ ஏம்மா ஓடி ஓடி ஒழைக்கிறன்னு சொல்லி ஒக்கார வெச்சு கஞ்சி ஊத்தத் துப்பில்ல. நாஷ்டா துண்ணல, சாராயங் குடிக்கலன்னு பணம் கேக்க வந்திட்டியே ஒனக்கு வெக்கமா இல்ல.
அது இருந்தா நீ ஏன் திருடிப் பொழைக்கிற?
ஒனக்கு பதில் சொல்லிக் கிட்டிருக்குற நேரத்துல அங்கயிங்க போனா பழமாவது விக்கலாம்” என்று சொல்லிக் கொண்டே எழுந்த கிழவியின் உடல் முடியாமையால் தள்ளாடியது.
குனிந்து கூடையைத் தூக்கி எடுத்து தலையில் வைத்துக் கொண்டு பத்தடிதான் நடந்திருப்பாள்.
‘விருக்’கென உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான் அவன்.
நாலே எட்டில் கிழவியின் அருகே சென்றான். கண்ணிமைக்கும் நேரத்தில் கிழவியின் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த சுருக்குப் பையைப் பற்றி இழுத்தான். சுருக்குப்பை அவன் கைகக்கு வந்தது.
இதைச் சற்றும் எதிர்பாக்காத கிழவி “அய்யோ! அய்யோ! பாவி! பாவி!” என்று கத்திக் கொண்டே சுருக்குப் பையைப் பிடுங்க அவன் கையைப் பற்றினாள்.
அடுத்த நொடி கிழவியின் பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு அவளின் தோளைப் பிடித்து ‘தன் தாய் அவள்’ என்பதைச் சிறிதும் எண்ணாமல் மூர்க்கத்தனமாய் வேகமாய்ப் பிடித்துத் தள்ளிவிட்டு காற்றைவிட வேகமாய் ஓடி மறைந்தான்.
பெற்ற மகனே பணத்துக்காக பிடித்துத் தள்ள, தள்ளப்பட்ட வேகத்தில் கிழவி வெகு வேகமாய் பின்னால் இழுத்துச் செல்லப்பட்டு அங்கு நின்றிருந்த இரும்புத்தூண் ஒன்றில் பின்னந்தலை ‘படீரெ’ன்ற சப்தத்துடன் மோத, மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் மல்லாந்து உயிரடங்கிப் போனாள்.
பழக்கூடை கீழே விழுந்து பழங்கள் வெளியே வந்து ரத்த வண்ணத்தைப் பூசிக் கொண்டன.
திரிசூலம் ரெயில்வே ஸ்டேஷன் அல்லோலகல்லோலப் பட்டது. போலீஸார் இங்குமங்கும் ஓடினார்கள்.
அதிர்ந்து போய் நின்றிருந்தார் வேணியம்மா. உடல் பயத்தில் ‘வெடவெட’த்தது. நாக்கு வறண்டு போனது. கண்ணுக்குநேரே நடந்த கோர நிகழ்வு.
தான் வந்து நிற்கப் போகும் ஸ்டேஷனில் நடந்த அசம்பாவிதம் பற்றி அறியாத செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார வண்டி சரியான நேரத்துக்கு வந்து நின்றது ஸ்டேஷனில்.
எந்திரம் போல் ரயிலில் ஏறி அமர்ந்தார் வேணியம்மா. பயணிகள் அனைவரும் கிழவியின் கொலை பற்றியே பேசித் தீர்த்தார்கள்.
“திரிசூலம் ரெயில் நிலையத்தில் நடந்த பயங்கரம். பழம் விற்கும் மூதாட்டி கொலை. கொலைகாரன் தப்பித்து ஓட்டம். சிசிடிவி கேமிராக்கள் வேலை செய்யாததால் கொலையாளியை அடையாளம் காண முடியாமல் காவல்துறை திணறல். குற்றவாளி வலை வீசி தேடல்” என்று சொல்லிச் சொல்லி டிவி சேனல்கள் சம்பவம் நடந்த இடத்தைக் காட்டிக்காட்டி நேரத்தைக் கடத்தின.
வாரம் ஒன்று கடந்து போய்விட்டாலும் வேணியம்மா நார்மலுக்கு வரவில்லை. கிழவியும் அவளின் மகனும் நினைவிலும் கனவிலும் வந்து வந்து போனார்கள்.
மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் சடலமாய்க் கிடந்த கிழவியின் அந்த காட்சி வந்து வந்து பயமுறுத்தியது.
“நாசமா போறவன். யாரையுமே கொல்லக் கூடாது. அதுவும் பெத்த தாய, இப்பிடியா புடிச்சு தள்ளுவான். அவ நன்னாவே இருக்கமாட்டான். அவன அடிச்சே கொல்லனும். ம்ஹும்! துடிக்கத் துடிக்க தூக்குல போடனும்” அவ்வப்போது பிடிப்பிடியாய்ச் சாபம் கொடுத்தார் கிழவியின் மகனுக்கு.
அன்று இரவு படுக்கையில் படுத்திருந்த வேணியம்மாவுக்கு கண்களை மூடவே பயமாயிருந்தது.
தெரு நாய்களின் சண்டையும் உறுமலும் கத்தலும் குரைப்பும் ஊளையும் வேணியம்மாவின் பீதியை அதிகப்படுத்தின.
தாகமாய் இருந்தது. ஆனாலும் எழுந்து தண்ணி குடிக்கப் பயமாக இருந்தது. சின்ன சப்தம்கூட அச்சத்தைக் கூட்டியது. புரண்டு படுக்கக்கூட பயமாய் இருந்தது.
‘ஒருவேள அந்தப்பாவி போலீஸ்ல மாட்டக்கூடாதுன்னு அங்க இங்கன்னு மாறிமாறி ஒளிஞ்சுப்பானோ! அப்பிடி ஒளியறவன் நம்ம வீட்டுல வந்து எங்கியாவது ஒளிஞ்சிக்கிட்டா?
ச்சீ! லூஸுமாரி யோசிக்காத! கொல நடந்தது திரிசூலம் ரெயில்வே ஸ்டேஷன். நீ இருக்குறதோ காஞ்சிபுரம். அங்கேந்து இங்க வரானாக்கோ ஒளிஞ்சிக்க, கற்பனைக்கு ஒரு அளவே இல்லியா!’ மனம் கேலி செய்தது.
உடலோடு ஒட்டியபடி பக்கத்தில் குப்புறக் கிடந்த செல்ஃபோனை முழுவதுமாய் தூக்காமல் வெளிச்சம் வெளியே தெரியாதபடி ஒரு இன்ச் அளவே தூக்கி சட்டென்று மணியைப் பார்த்துவிட்டு ‘சடாரெ’ன்று செல்லைப் படுக்கப் போட்டார். மணி ஒன்னு நாப்பது.
‘களுக். சலக்..க்ரீச்.. ‘ வாசல் இரும்பு கேட் அசைவதுபோல் சின்ன சன்னமாம சப்தம். தொடர்ந்து ‘தொப்’ என்று யாரோ குதித்தது போல் சிறு சப்தம்.
மூச்சைப் பிடித்துக் கொண்டார் வேணியம்மா. ’அதெல்லாம் ஒன்னுமிருக்காது பிரம்ம’ மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.
மிகமெதுவாக யாரோ நடப்பது போல் காலடியோசை. சில வினாடிகள் பத்து நாய்கள் ஒன்றாய்க்கூடி குரைத்துத் தள்ளின. சட்டென சப்தம் நின்று போனது.
ரூமில் ஏசி ஓடியும் வியர்த்துப் போனது வேணியம்மாவுக்கு.
‘ச்சீ! இப்பிடியா பயப்படுவ. ஒவ்வொரு பொம்பள எவ்வளவு துணிச்சலா இருக்காங்க. என்னவோ பயந்து சாவுற. அந்த காலத்துல புலியவே மொறத்தால அடிச்சி வெரட்டுன பொம்பளைங்க இருந்துருக்காங்க தெரியுமா?’ மனம் நேரம் காலமில்லாமல் சம்பந்தா சம்பந்தமில்லாமல் உதாரணம் சொன்னது.
ஆபத்து நேரத்தில் அசட்டுத் துணிச்சல் வரும் என்பதுபோல் ஏனோ திடீரென பயம் விட்டுப்போய் துணிச்சல் துளிர்விட்டு ‘கிடுகிடு’வென மரமாய் வளர்ந்தது வேணியம்மாவுக்கு.
‘ஜன்னல் கதவை லேசாய்த் திறந்து பார்க்கலாமா?’ என்று தோன்றியது.
‘ஒருவேள பூனகீன கேட்டு மேல ஏறி கீழ குதிச்சிருக்குமோ. நாமதான் தேவ இல்லாம பயப்படுறோமோ? சரி, கொஞ்சமா ஜன்னக் கதவ தொறந்து பாக்கலாம்’ என்ற முடிவுக்கு வந்தவராய் இஷ்ட தெய்வங்களையெல்லாம் மனதால் வேண்டி உதடுகளால் உச்சரித்தபடி ஜன்னலருகே போய் நின்றவருக்கு ஜன்னல் ஸ்கிரீனை நகர்த்தக்கூட பயமாயிருந்தது. கைகள் நடுங்கின.
வலுக்கட்டாயமாய் மனதில் தைரியத்தை நிரப்பிக் கொண்டு கொஞ்சமாய் ஸ்கிரீனை விலக்கியபோது ‘திகீரெ’ன்றது வேணியம்மாவுக்கு. ஏற்கனவே
ஜன்னல் கதவு கொஞ்சம்போல திறந்திருந்தது.
‘அய்யய்யோ! கேட்டேறிக் குதித்து வந்தவன் திறந்திருப்பானோ?’ நினைக்கும்போதே பயம் வயிற்றில் ‘சிலீரெ’ன திகிலைப் பரப்பியது.
‘அடச்சீ! நாமதானே காலேல ரூமுக்குள்ள காத்தும் சூரிய வெளிச்சமும் வரட்டமுன்னு லேசா தொறந்து வெச்சோம். எல்லாத்துக்கும் பயம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ பின்னந்தலையில் லேசாய்த் தட்டிக் கொண்டார்.
ஏற்கனவே கொஞ்சமாய்த் திறந்திருந்த ஜன்னல் கதவை இன்னும் கொஞ்சம் குறுக்கிச் சாத்தி மெல்லிய இடுக்கு வழியாக வெளியே பார்த்தவருக்கு ‘பகீர் திகீர்’ரென்றது.
தெரு விளக்கின் வாரி இறைக்கும் வெளிச்சத்தில் குரோட்டன்ஸ் செடியின் பக்கத்தில் இங்குமங்கும் திருட்டுப் பார்வை பார்த்தபடி நின்றிருந்தான் அரைடிராயரும் கைவைத்த பனியனும் அணிந்திருந்த அவன்.
‘அவன்.. அவன்.. அவன்.. அவனேதான் அவனேதான்! எனக்கு நன்னா அடையாளம் தெரியுது. அன்னிக்கு எவ்வளவு கிட்டத்துல பாத்ருக்கேன் அவன.
பாவி.. பாவி.. பெத்தவளயே புடிச்சித் தள்ளி கொன்னவனாச்சே! படுபாவி.
ஆயிரம் ஆம்பளயோட இவன நிக்க வெச்சாகூட இவன அடையாளம் கண்டுபுடுச்சுட மாட்டேனா! இந்த கொலகாரன் ஏன் இங்க வந்தான்? ஒருவேள
ஸ்டேஷன்ல என்ன பாத்ருப்பானோ?
நான் போலீஸ்ட்ட இவன அடையாளம் காமிச்சிடுவேனோன்னு என்னய பின் தொடர்ந்து வந்து வீட்ட தெரிஞ்சிக்கிட்டு இன்னிக்குப் போட்டுத் தள்ள வந்ருப்பானோ?’ பயத்தில் நடுங்கியது. வேணியம்மாவின் உடல். வியர்த்துக்கொட்டியது.
‘இல்ல.. இல்ல.. இவன விட்ரக்கூடாது. போலீஸ்ட்ட புடிச்சிக்குடுத்துடனும்’
செல்ஃபோனை எடுத்தவருக்கு போலீஸுக்கு ஃபோன் செய்ய பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது. விரல்கள் நடுங்கின.
ஆனாலும் துணிந்து 100 என்ற (46100100) இலக்கத்தை விரலால் தொட, “ஹலோ! இது அவசர போலீஸ் நீங்க?” என்று தூக்கக் கலக்கத்தோடு குரல் கேட்டது எதிர் முனையிலிருந்து.
மெதுவான குரலில் எல்லாவற்றையும் சொல்லி முடித்தார் வீட்டு விலாசத்தோடும் சிறு விண்ணப்பத்தோடும்.
அடுத்த பத்தாவது நிமிடம் தெருவே அல்லோலகல் லோலப்பட்டது. விசில் சப்தமும் ‘திமுதிமு’வென்று பலபேர் ஓடும் சப்தமும் கேட்டது.
காலை டிவியில் எந்த ந்யூஸ் சேனலைத் திருப்பினாலும் திரிசூலம் ரெயில்வே ஸ்டேஷலில் பழம் விற்கும் கிழவியைக் கொன்றவனை போலீஸ் காஞ்சிபுரத்தில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்ததாகவும் ‘கொலைகாரன் கிழவியின் மகனே’ என்றும் அவனைக் காட்டிக்காட்டி செய்தி சொன்னது.
டிவியில் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த வேணியம்மா நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார்.
‘நல்லவேள நாம கேட்டுக்கிட்டபடி போலீஸு நாந்தா துப்பு குடுத்ததா வெளியிடல. அப்டி மட்டும் குடுத்திருந்தா டிவி ந்யூஸ் சேனலும் ந்யூஸ் பேப்பர்காரவுங்களும் பேட்டி எடுக்கறோம் பேருன்னு நம்மள தொளச்சி எடுத்து ஒருவழி பண்ணிருப்பாங்க.
ஏன் ஊரும் ஒறவும் மட்டும் நேராவும் ஃபோனுலயும் நம்மள ஒருவழில்ல பண்ணிடுவாங்க. இதெல்லாம் கெடக்கட்டும்.
அந்த கொலகாரப் பாவிக்கு நாந்தா அவன புடிச்சுக் கொடுத்தேன்னு தெரிஞ்சிட்டா ஜெயில்லேந்து தப்பிவந்து என்னைய’ தலையை உலுப்பி நினைவை கலைத்துவிட்டு,
“என்னைக் காட்டிக் கொடுக்காத தாவல்துறைக்கு நன்றி. கிழவியின் ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று வாய்விட்டு சொன்னபடி டிவியில் எதிர்நீச்சல் தொடர் பார்க்க ஆயத்தமானார் வேணியம்மா.
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்