கத்தரிக்காய் குழம்பு

கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?

கத்தரிக்காய் குழம்பு நாவிற்கு ருசியாகவும், மணமாகவும் உள்ள குழம்பு வகையாகும்.

கத்தரிக்காய் காய்களின் ராஜா என்ற பெருமையினை உடையது. இக்காயில் உள்ள சத்துக்கள் மற்றும் அதிக அளவு பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக சூப்பர் காய் என்ற புகழினையும் கொண்டுள்ளது.

கத்தரிக்காய் பற்றி மேலும் அறிய இதை சொடுக்கவும்.

இதனை எல்லோரும் விரும்பி உண்பர். இனி எளிய வகையில் கத்தரிக்காய் குழம்பு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பிஞ்சு கத்தரிக்காய் – 100 கிராம்

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)

தக்காளி – 2 எண்ணம் (நடுத்தர அளவு)

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)

புளி – நெல்லிக்காய் அளவு

பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)

மசாலா பொடி – 2½ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

கடுகு – ½ ஸ்பூன்

வெந்தயம் – ½ ஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

நல்ல எண்ணெய் – 1½ குழிக்கரண்டி

கத்தரிக்காய் குழம்பு செய்முறை

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத்துண்டுகாளாக வெட்டவும்.

தக்காளியை அலசி சிறுதுண்டுகளாக வெட்டவும்.

வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி நசுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசி நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.

கத்தரிக்காயின் காம்பினை மட்டும் நீக்கி படத்தில் காட்டியபடி நான்காக கீறி அரிசி களைந்த தண்ணீரில் பத்து நிமிடங்கள் போட்டு வெளியே எடுத்து வைக்கவும்.

 

நீளவாக்கில் கீறிய கத்தரிக்காய்
நீளவாக்கில் கீறிய கத்தரிக்காய்

 

தயார் நிலையில் காய்கறிகள்
தயார் நிலையில் காய்கறிகள்

 

தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்

 

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

புளியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஊற விடவும்.

மிக்ஸியில் மசாலா பொடி, ஊற வைத்த புளி மற்றும் தண்ணீர் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து ½ குழிக்கரண்டி நல்ல எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

 

எண்ணெயில் வதக்கிய‌ கத்தரிக்காய்
எண்ணெயில் வதக்கிய‌ கத்தரிக்காய்

 

வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின்னர் அதனுடன் சதுரங்களாக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கால் பாகம் வதங்கியதும் நசுக்கிய வெள்ளைப் பூண்டினைச் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயம், வெள்ளைப்பூண்டினை வதக்கும் போது
வெங்காயம், வெள்ளைப்பூண்டினை வதக்கும் போது

 

வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

 

தக்காளி, மிளகாய் சேர்த்ததும்
தக்காளி, மிளகாய் சேர்த்ததும்

 

கலவை வதங்கியதும் அதனுடன் மசாலா புளி கலவையைச் சேர்த்து கிளறி அதனுடன் தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலவையை கொதிக்க விடவும்.

குழம்பு ஒரு கொதி வந்ததும் அடுப்பினை சிம்மில் வைக்கவும்.

 

கலவையுடன் மசாலா சேர்த்ததும்
கலவையுடன் மசாலா சேர்த்ததும்

 

குழம்பு பாதியாக வற்றியதும் அதனுடன் வதக்கிய கத்தரிக்காயைச் சேர்த்து லேசாகக் கிளறி இரண்டு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.

 

கத்தரிக்காயை சேர்க்கும் பதத்தில் குழம்பு
கத்தரிக்காயை சேர்க்கும் பதத்தில் குழம்பு

 

கத்தரிக்காயை குழம்பில் சேர்த்ததும்
கத்தரிக்காயை குழம்பில் சேர்த்ததும்

 

 

சுவையான‌ கத்தரிக்காய் குழம்பு
சுவையான‌ கத்தரிக்காய் குழம்பு

 

சுவையான கத்தரிக்காய் குழம்பு தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மசாலா பொடிக்குப் பதில் மல்லிப்பொடி, சீரகப்பொடி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து குழம்பு தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் மல்லி இலையை பொடியாக நறுக்கி குழம்பினை இறக்கிய பின்பு சேர்க்கலாம்.

மசாலா பொடி செய்வது எப்படி என்று அறிய இதை சொடுக்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்