கரம் மசாலா பொடி இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் பராம்பரியமான பொடி ஆகும். இதனை வீட்டிலும் தயார் செய்யலாம்.
இப்பொடி தயார் செய்ய தேவையான மசாலாப் பொருட்களை சரியான விகிதத்தில் சேர்ப்பது மிகவும் அவசியம். சரியான அளவில் மசாலாப் பொருட்களைச் சேர்த்தால் இதனுடைய சுவையும் மணமும் அட்டகாசமாக இருக்கும்.
இப்பொடியை தயார் செய்யும்போது ப்ரெஷாக உள்ள மூலப்பொருட்களைப் பயன்படுத்துவது அவசியம். மசாலாப் பொருட்கள் குப்பை மற்றும் தூசு இல்லாமல் சுத்தமானதாக இருக்க வேண்டும்.
இதனை எளிதில் தயார் செய்ய முடியும். ஆதலால் தேவைப்படும் போது இதனை தயார் செய்து பயன்படுத்தினால் இதனுடைய சுவையையும் மணத்தினையும் இழக்காமல் இருக்கலாம்.
இனி எளிதான வகையில் சுவையான கரம் மசாலா பொடி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சோம்பு அல்லது பெருஞ்சீரகம் – 3 டேபிள் ஸ்பூன்
கொத்த மல்லி விதை – 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை – 3 எண்ணம் (2 இன்ச் அளவுடையது)
கிராம்பு – 15 எண்ணம்
ஏலக்காய் – 10 எண்ணம்
ஸ்டார் அன்னாசிப்பூ – 2 எண்ணம்
ஜாதி பத்ரி – 2 எண்ணம்
பிரிஞ்சி இலை – 2 எண்ணம் (சிறியது)
கல்பாசி – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பொடி செய்முறை
தேவையான பொருட்களில் குப்பை, தூசி, கல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும்; தூசி மற்றும் கல் இருப்பின் அவற்றினை நீக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களையும் சேர்க்கவும்.
அடுப்பினை சிம்மில் வைத்து வறுக்கவும்.
வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தட்டில் கொட்டி ஆற விடவும். வறுக்கும் போது மசாலாப் பொருட்கள் நிறம் மாறக் கூடாது.
சுத்தமான மிக்ஸி ஜாரில் வறுத்து ஆறிய மசாலாப் பொருட்களைச் சேர்த்து பொடியாகத் திரிக்கவும்.
திரித்த பொடியை தட்டில் கொட்டி ஆற விடவும்.
பொடி நன்கு ஆறியதும் சுத்தமான கண்ணாடி பாட்லில் போட்டு காற்று புகாதவாறு அடைத்துப் பயன்படுத்தவும்.
குழம்பு, பொரியல், கலவை சாதம் என தேவைப்படும் உணவுகளில் கரம் மசாலா பொடி சேர்த்து ருசிக்கலாம்.
குறிப்பு
பிரின்சு இலையை காம்பு நீக்கி உபயோகிக்கவும்.
அவ்வப்போது இதனை செய்து பயன்படுத்துவதால் இதனுடைய மணமும் சுவையும் நிலைத்திருக்கும்.
மறுமொழி இடவும்