காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு என்பது மனித செயல்களால் காற்றானது தனது இயற்கை தன்மையை இழந்து நச்சுப் பொருளாக மாறுவதைக் குறிக்கும்.

இன்றைக்கு உலகினை அச்சுறுத்தும் மிகப் பெரிய விசயமாக காற்று மாசுபாடு உள்ளது.

காற்றில் தூசி, புகை மற்றும் விஷவாயுக்கள் கலந்து அதன் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தன்மையை மாற்றி காற்றை நச்சாக்கி விடுகின்றன.

இந்த நச்சுக் காற்றானது இப்புவியில் வாழும் உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

காற்று மாசுபாட்டின் விளைவானது மிகவும் மோசமானது. ஏனெனில் காற்றானது மாசுபடும்போது அதிவிரைவாக விரைந்து பரவி எல்லா இடங்களிலும் உள்ள காற்றினை மாசடையச் செய்கிறது. எனவேதான் காற்று மாசுபாட்டின் விளைவுகள் அதிக வேகமாக பாதிக்கின்றன.

காற்றானது உயிரிகள் வாழ்வதற்கு மிகமுக்கியமானது. எனவே  காற்று மாசுபாடு பற்றி எல்லோரும் விழிப்புணர்வு பெற வேண்டும்.
காற்று மாசுபாடு இயற்கை மற்றும் மனித செயல்பாடுகளால் நடைபெறகிறது.

இயற்கை காற்று மாசடைதலுக்கு காட்டுத்தீ, எரிமலை வெடிப்புகள் மற்றும் பூமியின் உள்ளே கதிரியக்கச் சிதைவுகள் மூலம் பாறைகள் வெடித்து வாயுக்களை வெளியேற்றுதல் போன்றவை எடுத்துக்காட்டாகும்.

 

மாசுபடுத்திகள்

காற்று மாசடைக் காரணமான பொருட்கள் மாசுபடுத்திகள் என்றழைக்கப்படுகின்றன. கார்பன்-டை-ஆக்ஸைடு, கார்பன்மோனாக்ஸைடு, சல்பர்-டை-ஆக்ஸைடு, நைட்ரஸன் ஆக்ஸைடுகள், தூசி மற்றும் புகை போன்றவை மாசுபடுத்திகள் ஆகும்.

மாசுபடுத்திகளை முதல்நிலை மாசுபடுத்திகள் மற்றும் இரண்டாம்நிலை மாசுபடுத்திகள் என இருவகைப்படுத்தலாம்.

முதல்நிலை மாசுபடுத்திகள் நேரடியாக காற்றில் கலந்து காற்றினை மாசுபடுத்துகின்றன. எடுத்துக்காட்டாக கார்பன்மோனாக்ஸைடு, சல்பர்-டை-ஆக்ஸைடு ஆகியவற்றைக் கூறலாம்.

முதல்நிலை மாசுபடுத்திகள் ஒன்றோடொன்று கலந்து புகையை உண்டாக்கி காற்றினை மாசுபடுத்துகின்றன. இவை இரண்டாம்நிலை மாசுபடுத்திகள் என்றழைக்கப்படுகின்றன.

 

காற்று மாசடைக் காரணங்கள்

படிம எரிபொருட்களை எரித்தல்

படிம எரிபொருட்களான பெட்ரோல் மற்றும் நிலக்கரி போன்றவற்றை எரிப்பதால் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் சல்பர்-டை-ஆக்ஸைடு காற்று மாசடைய முக்கிய காரணமாகும்.

போக்குவரத்துச் சாதனங்களான கார், பேருந்து, தொடர்வண்டி, கப்பல், ஆகாயவிமானம் போன்றவற்றிலிருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்ஸைடு, கார்பன்மோனாக்ஸைடு, சல்பர்-டை-ஆக்ஸைடு மற்றும் நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள் போன்றவை காற்றினை மாசடையச் செய்யும் முக்கிய பொருட்களாகும்.

 

வேளாண் நடவடிக்கைகள்

நவீன வேளாண்மையில் பயன்படுத்தப்படும் அநேகப் பொருட்களின் தயாரிப்பில் அமோனியா என்ற வாயுப் பொருள் உருவாகிறது. இது வளிமண்டலத்தில் கலந்து காற்றினை நச்சாக்கிறது.

இன்றைய வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் செயற்கை பூச்சிகொல்லிகள், செயற்கை உரங்கள் போன்றவற்றிலிருந்து நச்சு வாயுக்கள் உருவாகி காற்றில் கலந்து காற்றை மாசடையச் செய்கின்றன.

 

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கள்

உற்பத்தித் தொழிற்சாலைகளிலிருந்து கார்பன்மோனாக்ஸைடு, ஹைட்ரோ கார்பன்கள், ஆர்கானிக் பொருட்கள் மற்றும் நச்சு வாயுக்கள் அதிகளவு வெளியிடப்படுகின்றன. இவை காற்றில் பரவி வளிமண்டலத்தை நச்சாக்குகின்றன.

பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்து வெளியிடப்படும் ஹைட்ரோ கார்பன்கள் மற்றும் வேதிப்பொருட்கள் காற்று மற்றும் நிலத்தை மாசடையச் செய்கின்றன.

 

சுரங்கச் செயல்பாடுகள்

புவியின் அடியில் உள்ள தனிமங்கள் சுரங்கள் மூலம் வெட்டி எடுக்கப்படுகின்றன. இவ்வாறு வெட்டி எடுக்கும்போது தூசி மற்றும் நச்சுவாயுக்கள் வெளிவருகின்றன. இவை காற்றில் கலந்து காற்றை நச்சாக்கின்றன. இவை சுரங்கத் தொழிலாளர்களை மட்டுமின்றி எல்லா உயிரினங்களையும் பாதிப்படையச் செய்கின்றன.

 

வீட்டினைச் சுத்தம் செய்யும் பொருட்கள்

வீட்டினைச் சுத்தம் செய்யும் பொருட்களான கழிவறையை சுத்தம் செய்யும் பொருட்கள், பினாயில், டெட்டால் மற்றும் வண்ணப்பூச்சுகள் ஆகியவற்றை பயன்படுத்தும்போது அவற்றில் இருந்து வெளியாகும் வேதிப்பொருட்கள் காற்றினை நச்சாக்குகின்றன.

 

காற்று மாசுபாட்டின் விளைவுகள்

சுவாச மற்றும் இதயக்கோளாறுகள்

காற்று மாசுபாடு நேரடியான மற்றும் மறைமுக விளைவுகளை உயிரினங்களில் ஏற்படுத்துகின்றன. இம்மாசுபாட்டினால் மிகவும் மோசமான விளைவுகள் நிகழுகின்றன.

இம்மாசுபாடு மனிதரில் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவதுடன் இதய நோயையும் தோற்றுவிக்கின்றது. இது மனிதரில் புற்றுநோய் மற்றும் தோல் நோய்களைத் தோற்றுவிக்கின்றன.

மாசடைந்த காற்றானது குழந்தைகளில் நிமோனியா மற்றும் ஆஸ்துமாவினைத் தோற்றுவிக்கின்றன.

 

உலக வெப்பமயமாதல்

உலக வெப்பமயமாதலின் விளைவுகள் இன்றைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. காற்று மாசுபாடே உலக வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாகும்.

மாசடைந்த காற்று சூரியனிடமிருந்து பூமி பெற்ற வெப்பத்தினை வெளியே அனுப்பவிடாமல் வளிமண்டலத்தில் வெப்பநிலையை உயர்த்துகிறது.

இதனால் பனிக்கட்டிகள் உருகுதல், கடல்நீர்மட்டம் உயருதல், திடீர் வெள்ளப்பெருக்குகள், வறட்சி போன்ற பேரிடர்களை உருவாக்குகின்றன.

 

அமில மழை

படிம எரிபொருட்களான பெட்ரோல் மற்றும் நிலக்கரி போன்றவற்றை எரிக்கும்போது வெளியிடப்படும் வாயுக்களான சல்பர் ஆக்ஸைடுகள் மற்றும் நைட்ரஸன் ஆக்ஸைடுகள் வளிமண்டலத்தில் உள்ள நீர்துளிகளுடன் கலந்து அமில மழையைத் தோற்றுவிக்கின்றன.

இந்த அமில மழையானது மனிதர், விலங்குகள் மற்றும் தாவரங்களை பெருமளவு பாதிக்கின்றன.

 

யூட்ரோபிகேசன்

மழையானது நைட்ரஜனை அடித்துச் சென்று நிலம், ஆறு மற்றும் கடல்களில் சேர்க்கின்றது. இது மண் மற்றும் நீரில் உள்ள நுண்ஊட்டச்சத்துக்களைப் பாதிக்கிறது.

இவை நீர்நிலைகளில் ஆல்கா என்ற தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதனால் நீரில் வாழும் மீன், தவளை மற்றும் ஆமை போன்றவற்றைப் பாதிக்கின்றன.

 

ஓசோன் படலப் பாதிப்பு

புவியின் வளிமண்டலத்தைச் சுற்றிலும் ஓசோன் படலம் சூழ்ந்தள்ளது. இப்படலமானது காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் பூமியை நேரடியாக வந்தடைகின்றன. இவை உயிரினங்களில் தோல் மற்றும் கண் போன்றவற்றைப் பாதிப்படையச் செய்கின்றன.

 

காற்று மாசுபாட்டினைத் குறைக்கும் வழிகள்

பொது போக்குவரத்துச் சாதனத்தைப் பயன்படுத்துதல்

தனிநபர் போக்குவரத்துச் சாதனங்களான கார், மோட்டார் பைக் போன்றவற்றைக் குறைத்து பொது போக்குவரத்துச் சாதனங்களான பேருந்து, தொடர்வண்டி ஆகியவற்றை பயன்படுத்தல் வேண்டும்.

இதனால் பணம் மற்றும் எரிபொருள் மிச்சமாவதோடு காற்று மாசுபாட்டினைக் குறைக்கலாம். அரசாங்கமும் பொது போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு ஊக்குவிக்க வேண்டும்.

 

மின்னாற்றலை சேமித்தல்

தேவையில்லாத இடங்களில் மின்விளக்குகளை எரித்தல், மின்விசிறிகளை சுழலவிடுதல் மற்றும் பிற வழிகளில் மின்சாரத்தை செலவிடுதல் போன்றவற்றை செய்ய கூடாது என்ற விழிப்புணர்வு எல்லோரிடமும் வேண்டும்.

ஏனெனில் மின்சாரம் தயார் செய்ய அதிகஅளவு படிம எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பொருட்களை எரிக்கும்போது காற்று மாசடைகிறது. எனவே மின்சிக்கனம் தேவை இக்கணம்.

 

பொருட்களின் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு பற்றிய விழிப்புணர்வு

நாம் அன்றாடம் பயன்படுத்தும் திடப்பொருட்களை நிலத்தில் போட்டு எரிப்பதால் நிலம் மற்றும் காற்று மாசடைகிறது. இதனால் பொருட்களின் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு பற்றிய விழிப்புணர்வு எல்லோரிடமும் வேண்டும். மேலும் அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

 

எரிசக்தி குறித்த விழிப்புணர்வு

இயற்கை எரிசக்தி வழங்கக்கூடிய வளங்களான சூரிய ஒளி மற்றும் காற்று போன்றவற்றைப் பயன்படுத்தி வெப்ப மற்றும் ஒளி ஆற்றலைப் பெறலாம்.

அரசாங்கமும் சூரிய ஒளி மின்சாரம் எல்லோர் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். நாமும் சூரியஒளி மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஆயத்தமான பணிகளைத் தொடங்க வேண்டும். இதனால் காற்று மாசுபாட்டினைத் தவிர்க்கலாம்.

 

ஆற்றல்திறன் சாதனங்களைப் பயன்படுத்துதல்

சிஎல்எஃப் விளக்குகள் போன்ற ஆற்றல்திறன் சாதனங்ளைப் பயன்படுத்த வேண்டும். இதனால் மின்சிக்கனத்தோடு பணமும் மிச்சமாகும். மேலும் காற்று மாசுபாட்டினையும் தவிர்க்கலாம்.

உலகமுழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காற்று மாசுபாட்டினைக் குறைக்க தனிநபர் நடவடிக்கை மற்றும் அரசாங்கம் மூலம் கூட்டு நடவடிக்கை அவசியம் என்பதனை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

காற்று மாசுபாட்டினை குறைக்கும் முயற்சியில் ஒவ்வொருக்கும் பங்கு உள்ளது என்பதனை உணர்ந்து செயல்படுவதோடு இன்றைய, நாளைய வாழ்வினை ஆரோக்கியமாக வாழ வழி செய்வது  ந‌ம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

– வ.முனீஸ்வரன்

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

“காற்று மாசுபாடு” அதற்கு 2 மறுமொழிகள்

  1. Paul DURAI

    My support

  2. Vasanthapriyan

    Semma