காளான் பக்கோடா மாலை நேரத்தில் டீ மற்றும் காப்பியுடன் சேர்த்து உண்ணக் கூடிய சிற்றுண்டி ஆகும்.
காளானைக் கொண்டு காளான் குருமா, காளான் 65, காளான் பொரியல், காளான் பிரியாணி போன்ற உணவுகளை எப்படி செய்வது என நமது இனிது இணைய இதழில் முன்பே பார்த்தோம்.
இனி சுவையான காளான் பக்கோடா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காளான் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – ஒரு எண்ணம் (நடுத்தர அளவு)
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
இஞ்சி – முக்கால் சுண்டுவிரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)
காஷ்மீரி மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்
மசாலா பொடி – 1 ஸ்பூன்
மிளகு பொடி – ¾ ஸ்பூன்
சீரகப் பொடி – ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
சமையல் எண்ணெய் – பொரித்தெடுப்பதற்கு ஏற்ப
காளான் பக்கோடா செய்முறை
காளானை சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை சுத்தம் செய்து விழுதாக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை கழுவி உருவிக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் நீளவாக்கில் நறுக்கிய காளான் போட்டு, அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை, கடலை மாவு, அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய் பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பின்னர் அதனுடன் கரம் மசாலா பொடி, மசாலா பொடி, மஞ்சள் பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி, உப்பு, நல்ல எண்ணெய் சேர்த்து மெதுவாக ஒருசேர பிசுபிசுப்புப் பதத்திற்குப் பிசையவும்.
வெங்காயம் மற்றும் காளானில் உள்ள தண்ணீரால், கலவை எண்ணெயில் பொரித்தெடுக்க தேவையான பதத்திற்கு வந்துவிடும். ஆகவே தண்ணீர் ஏதும் சேர்க்க தேவையில்லை.
வாணலியை அடுப்பில் வைத்து பொரித்தெடுக்கத் தேவையான அளவு சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவினை எடுத்து சிறிது சிறிதாகக் கிள்ளிப் போடவும்.
வெந்ததும் எடுத்து விடவும்.
சுவையான காளான் பக்கோடா தயார்.
இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய் சேர்த்து பக்கோடா தயார் செய்யலாம்.
மாவினை தயார் செய்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். நேரங்கடந்தால் கலவை தண்ணீர்விட ஆரம்பிக்கும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!