கொடுக்காய்ப்புளி – மன அழுத்தம் போக்கும் மருந்து

கொடுக்காய்ப்புளி என்றவுடன் பள்ளிப்பருவத்தில் விடுமுறை நாட்களில் கொடிக்காய் மரத்தில் ஏறி கொடிக்காயைப் பறித்து உண்டதே என் நினைவிற்கு வருகிறது.

இது கொடிக்காய், கொடுக்காய்ப்புளி, சுரட்டிக்காய், கோணக்காய் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

அன்றைக்கு எளிதாக விலையில்லாமல் கிடைத்த இக்காய் இன்றைக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இதற்கு காரணம் இதனுடைய உடல்நல மேம்பாட்டு நன்மைகள் மற்றும் இக்காயைச் சந்தைப்படுத்துதல் ஆகியவை ஆகும்.

கொடி போன்று சுருண்டு காணப்படுவதால் கொடிக்காய் என்றும், புளியைப் போன்று விதையைச் சுற்றிலும் சதைப்பகுதியைக் கொண்டிருப்பதால் கொடுக்காய்ப்புளி என்றும் அழைக்கப்படுகிறது.

சுரட்டியைக் கொண்டு பறிக்கப்படுவதால் இது சுரட்டிக்காய் என்றும், கோணலாக வளைந்து நெளிந்து காணப்படுவதால் கோணக்காய் என்றும் வழங்கப்படுகிறது.

 

கொடிக்காய்புளியின் அமைப்பு மற்றும் வளரியல்பு

இது நடுத்தர உயரத்தினை உடைய மித பசுமை மாறா மரத் தாவர வகையைச் சார்ந்தது. இது 5-20 மீ உயரம் வரை வளரும் இயல்புடையது.

 

கொடிக்காய்ப்புளி மரம்
கொடிக்காய்ப்புளி மரம்

 

இது வேகமாக வளரும் இயல்புடையது. சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்போது 5-6 வருடங்களில் 10மீ உயரம் வரை வளரும்.

இம்மரமானது உப்பான மண், மலை மண் உட்பட எல்லாவகை மண்ணிலும் செழித்து வளரும் இயல்பினைக் கொண்டுள்ளது.

இது வறட்சியைத் தாங்கி வளரும் இயல்புடையது. இது 5 டிகிரி செல்சியஸ் முதல் 40டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கி வளரும். குளிர்ச்சியான, தொடர்ந்த ஈரப்பதமான மண்ணில் இதனால் வாழ இயலாது.

இம்மரமானது 30-100 செமீ விட்டமுடைய சாம்பல் வடிவ தண்டினைக் கொண்டுள்ளது.

 

கொடிக்காய்ப்புளி மரத்தண்டு
கொடிக்காய்ப்புளி மரத்தண்டு

 

இதனுடைய கிளைகள் ஒழுங்கற்று பரந்து விரிந்து காணப்படுகிறது.

இலைகள் 2-3.5 செமீ நீளத்திலும், 1-1.5 செமீ அகலத்திலும் காணப்படுகின்றன.

 

கொடிக்காய்ப்புளி இலைகள்
கொடிக்காய்ப்புளியின் இலைகள்

 

இம்மரத்தின் சிலவகைகளில் 2-15 மிமீ நீளத்தில் இலைகளின் ஒவ்வொரு பக்கத்திலும் காணப்படுகின்றன.

இத்தாவரத்தின் பூக்கள் சிறிதாக கோளவடிவில் வெள்ளை-பச்சை கலந்த நிறத்தில் காணப்படுகின்றன.

 

கொடிக்காய்ப்புளியின் பூக்கள்
கொடிக்காய்ப்புளியின் பூக்கள்

 

இப்பூக்களிலிருந்து பச்சை நிறத்தில் காய்கள் தோன்றுகின்றன.

 

கொடிக்காய்ப்புளியின் காய்கள்
கொடிக்காய்ப்புளியின் காய்கள்

 

இக்காயினுள் பச்சைநிற விதைகளும், விதையினைச் சுற்றிலும் வெள்ளைநிற சதைப்பகுதியும் காணப்படுகின்றன.

இக்காயானது பழுக்கும்போது விதைகள் கருப்பு நிறத்திற்கு மாறி சதைப்பகுதி பருத்து வெளியே தெரியும்படி காணப்படுகிறது.

 

கொடிக்காய்ப்புளிப் பழம்
கொடிக்காய்ப்புளிப் பழம்

 

பழுத்த சதைப்பகுதியானது சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தினைக் கொண்டிருக்கும்.

 

இளஞ்சிவப்புநிற பழம்
இளஞ்சிவப்புநிற பழம்

 

காய்கள் பழுத்ததும் தோலானது பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறத்திற்கு மாற்றம் அடைகிறது.

 

காய்ந்த தோல்
காய்ந்த தோல்

 

கொடுக்காய்ப்புளி என்பது 10-15செமீ நீளத்தில், 1-2 செமீ அகலத்தில் சுமார் 10 கருப்புநிற தட்டையான பளபளப்பான 1 செமீ அகலமுடைய விதைகளைக் கொண்டுள்ளது.

கொடிக்காயானது 1 முதல் 3 வரை உள்ள வட்டங்களாக சுருள் வடிவில் காணப்படும். நாம் குறிப்பிடும் கொடிக்காய் என்பது பழுத்த சதைப்பகுதி ஆகும். இப்பழமானது பிப்ரவரி முதல் மே மாதம் வரை கிடைக்கிறது.

கொடுக்காய்ப்புளியானது ஃபேபேசி குடும்பத்தைச் சார்ந்த மரவகைத் தாவரம் ஆகும். இதனுடைய அறிவியல் பெயர் பித்திசெல்லோபியம் டுல்சி என்பதாகும்.

கொடுக்காய்ப்புளியானது இனிப்பு அல்லது துவர்ப்பு சுவையினையோ அல்லது இரண்டும் கலந்த சுவையினையோ கொண்டிருக்கும்.

இம்மரமானது கட்டுமானத் தொழிலில் முட்டுக்கொடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. செங்கல் சூளைகளில் எரிப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதனுடைய இலைகள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதனுடைய பழத்தின் சதைப்பகுதி அப்படியேவோ, பானமாக மாற்றியோ பயன்படுத்தப்படுகிறது.

இதனுடைய விதைகளிலிருந்து எண்ணை எடுக்கப்படுகிறது. இவ்வெண்ணை சோப்பு தயாரிப்பிலும், சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

கொடுக்காய்ப்புளியின் பட்டையிலிருந்து மஞ்சள் நிறச்சாயம் தயார் செய்யப்படுகிறது.

இத்தாவரமானது மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தி மண்ணினை வளப்படுத்துகிறது.

 

கொடுக்காய்ப்புளியின் வரலாறு

கொடுக்காய்ப்புளியின் தாயகம் தெற்கு மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா ஆகும்.

1705-ல் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கான வழியைக் கண்டுபிடித்தபோது இந்திய கடற்கரையில் இம்மரத்தினைக் கண்டு இக்காயானது இந்தியாவைத் தாயகமாகக் கொண்டதாகக் கருதினர். அதனால் இதனை சென்னை முள் என்று அழைத்தனர்.

1650களில் இப்பழத்தினை ஸ்பானியர்கள் பிலிபைன்ஸ்க்கு அறிமுகப்படுத்தினர். பிலிபைன்சிலிருந்து இது ஏனைய ஆசியநாடுகளுக்குப் பரவியது.

இம்மரமானது வெனிசுலா, பிரேசில், பெரு, கயானா, கொலம்பியா, மெக்ஸிகோ, ஜமைக்கா, டொமினிகன் குடியரசு, கியூபா, ப்ளோரிடா, ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட அமெரிக்க நாடுகளில் காணப்படுகிறது.

ஆசியாவில் தாய்லாந்து, மியான்மார், மலேசியா, சீனா, பிலிபைன்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது.

ஆப்பிரிக்காவில் கென்யா, தான்சானியா, ஜான்சிபார் உள்ளிட்ட இடங்களிலும், மத்திய கிழக்கு நாடான கத்தாரிலும் இது காணப்படுகிறது.

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திரப்பிரதேசம், டெல்லி ஆகிய இடங்களில் காணப்படுகிறது.

 

கொடுக்காய்ப்புளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கொடுக்காய்ப்புளியில் விட்டமின் ஏ,சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி6 (நியாசின்) ஆகியவை உள்ளன.

மேலும் இதில் தாதுஉப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.

இக்காயில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவையும் காணப்படுகின்றன.

 

கொடுக்காய்ப்புளி – மருத்துவப் பண்புகள்

கொடுக்காய்ப்புளியின் சதைப்பகுதி, இலை, பட்டை, பூ ஆகியவை மருந்துப் பொருளாக உயோகிக்கப்படுகின்றன.

மனஅழுத்தத்திலிருந்து விடுதலை பெற

இக்காயில் உள்ள விட்டமின் பி1(தயாமின்)-னானது மூளை மற்றும் நரம்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்து அவை நன்கு செயல்பட உதவுகின்றன.

மேலும் விட்டமின் பி1-னானது மனஅழுத்தம் ஏற்படாமலும் நம்மைப் பாதுகாக்கிறது. எனவே இதனை உண்டு மூளை மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்தைப் பெறலாம்.

சரும, கேசப் பராமரிப்பிற்கு

இதில் உள்ள விட்டமின் பி2(ரிபோஃப்ளோவின்) சருமம், கேசம், நகங்கள் நன்கு வளரவும், அவற்றை ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

மேலும் இதில் உள்ள விட்டமின் சி-யானது சருமத்தை விரைவில் முதுமை அடையாமல் பாதுகாக்கிறது. எனவே இக்காயினை உண்டு சருமம், கேசம், நகங்களின் அழகினைப் பாதுகாக்கலாம்.

 

நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற

இதில் உள்ள விட்டமின் சி-யானது ஆன்டிஆக்ஸிஜென்டாகச் செயல்படுவதுடன் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலையும் வழங்குகிறது. எனவே இப்பழத்தினை உண்டு நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெறலாம்.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு

இப்பழத்தில் காணப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்கள் மற்றும் எலும்புகளை சேதமுறாமல் பாதுகாத்து அவற்றை வலுவாக்குகின்றன. மேலும் இம்மரத்தின் பூவானது பல்வலி, ஈறுகளின் பிரச்சினைக்கும் இது தீர்வளிக்கிறது.

கல்லீரல் பாதுகாப்பிற்கு

இப்பழத்தினை உண்ணும்போது இதில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆக்ஸிஜனேற்றத்தால் கல்லீரல் பாதிப்படையாமல் பாதுகாப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு கல்லீரல் பாதுகாப்பைப் பெறலாம்.

 

செரிமானத்திற்கு

இப்பழத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்தானது செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சவும் இவை உதவுகின்றன.

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்ப்புண், அல்சர் போன்ற செரிமானம் சம்பந்தமான நோய்களையும் நார்ச்சத்து ஏற்படாமல் தடுக்கிறது.

கொடுக்காய்ப்புளியினை மூன்று நாட்கள் அறையின் வெப்பநிலையில் வைத்திருந்து பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தி சட்னி, சூப்புகள், சாலட் உள்ளிட்டவை தயார் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

சத்துக்கள் நிறைந்த மன அழுத்தம் போக்கும் கொடுக்காய்ப்புளியினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

-வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.