சிவனின் சப்தவிடங்கத் தலங்கள்

சப்தவிடங்கத் தலங்கள் என்பவை சிவபெருமான் சுயம்பு விடங்க மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஏழு சிவாலயங்கள் ஆகும்.

சப்தம் என்றால் ‘ஏழு’; விடங்கம் என்றால் ‘உளியால் செதுக்கப்படாத’  என்று பொருள்; தலங்கள் என்றால் ‘கோவில்கள்’ ஆகும்.

அதாவது உளியால் செதுக்கப்படாமல் சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் விடங்க மூர்த்தியாக அருள் புரியும் கோவில்கள் என்பதாகும்.

இவ்விடங்களில் மூலவரோடு சிறிய லிங்க வடிவ விடங்க மூர்த்தியும் சிறப்பித்து வழிபடப்படுகின்றனர்.

திருவாரூர், திருகாரவாசல், நாகபட்டிணம், திருநள்ளாறு, திருகோளிலி, திருமறைக்காடு, திருவாய்மூர் ஆகியவையே சப்தவிடங்க தலங்களாகும்.

இவ்வேழு தலங்களிலும் இறைவன் முறையே வீதிவிடங்கர், ஆதிவிடங்கர், சுந்தரவிடங்கர், நகவிடங்கர், அவனிவிடங்கர், புவனிவிடங்கர், நீலவிடங்கர் என்ற நாமங்களில் அழைக்கப்படுகின்றனர்.

இவ்விடங்க மூர்த்திகள் தியாகராஜன் என்றே பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றனர். தியாகராஜன் என்பதற்கு ‘கடவுள்களுக்கு எல்லாம் அரசன்’ என்பது பொருளாகும்.

ஏழு தலங்களிலும் உள்ள விடங்க மூர்த்திகள் தங்களுக்கென்ற தனிசிறப்பினையும், நடன அசைவுகளையும், சிறப்பு பெயர்களையும் கொண்டிருக்கின்றனர்.

சப்தவிடங்கத் தலங்களில் விடங்க மூர்த்தியானவர் பொதுவாக கருவறைக்கு தென்கிழக்கில் தனிச்சந்நிதி கொண்டு சிம்மாசன மேடையில் வீரகட்கங்களுடன் அமர்ந்திருப்பார்.

விடங்கருக்கு எதிரில் உலோகத்தாலான நந்தியெம்பெருமானும், பரவை நாச்சியாருடன் வணங்கிய நிலையில் சுந்தர மூர்த்தி நாயனாரும் காணப்படுகின்றனர். இத்தலங்களில் நவக்கிரகங்கள் ஒரே திசையில் நேர்கோட்டில் காணப்படுகின்றன. இனி சப்தவிடங்கத் தலங்களைப் பற்றிப் பார்ப்போம்.

சப்தவிடங்கத் தலங்களில் உள்ள விடங்கர்களின் வரலாறு

முன்னொரு சமயத்தில் சிவபெருமான் கயிலாயத்தில் வீற்றிருக்கும் வடிவமான விடங்க லிங்கத்தினை இந்திரன் சிவனிடமிருந்து யாசித்தான்.

போகத்திற்கு இடமளிக்கும் இந்திர லோகத்தில் விடங்க லிங்கத்தை வழிபாடு செய்வது கடினம் என்று இறைவன் கூறினார். அதற்கு தான் சிவபெருமான் கயிலாயத்தில் வீற்றிருக்கும் வடிவத்தை தினமும் வழிபாடு செய்ய விரும்புவதாகக்கூறி இறைவனிடமிருந்து விடங்க லிங்கத்தைப் பெற்று முறையாக வழிபாடு செய்து வந்தான்.

விடங்க லிங்கத்தினை பூமிக்கு கொண்டு செல்ல இறைவன் திருவுள்ளம் கொண்டார். வலன் என்னும் அசுரன் இந்திர லோகத்தின் மீது படையெடுத்து வந்தான். அவனை இந்திரன் பூலோக அரசனான முசுகுந்தச் சக்கவர்த்தியின் உதவியால் வென்றான்.

வெற்றிக்கு உதவிய முசுகுந்த சர்க்கரவர்த்தியிடம் இந்திரன் “உனக்கு என்ன வேண்டும்?” என இந்திரன் வினவினான். அதற்கு முசுகுந்த சர்க்கரவர்த்தி இறைவனின் எண்ணப்படி விடங்க லிங்கத்தைக் கேட்டான். அதற்கு இந்திரன் மறுநாள் காலையில் விடங்க லிங்கத்தைத் தருவதாகக் கூறினான்.

இந்திரன் தேவதச்சனான மயனிடம் கூறி விடங்க லிங்கத்தைப் போன்று ஆறு லிங்கங்களை உருவாக்கினான். முசுகுந்த சர்க்கரவர்த்தியிடம் ஏதேனும் ஒரு விடங்க லிங்கத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறினான்.

முசுகுந்த சர்க்கரவர்த்தியும் இறைவனின் அருளால் செங்கழுநீர் (செவ்வல்லி) பூவின் வாசனையை உடைய உண்மையான விடங்க லிங்கத்தைத் தேர்வு செய்தான். இதனை அறிந்து கொண்ட இந்திரன் ஏழு விடங்க லிங்கங்களையும் முசுகுந்த சர்க்கரவர்த்தியிடம் தந்தருளினான்.

முசுகுந்த சர்க்கரவர்த்தியும் அதனைக் கொண்டு வந்து திருவாரூரில் உண்மையான விடங்கரையும், அதன் அருகில் ஆறு தலங்களில் ஏனைய விடங்கர்களையும் நிறுவி வழிபாடு செய்து வந்தான்.

 

திருவாரூர் – வீதிவிடங்கர்

திருவாரூர் - வீதிவிடங்கர்
திருவாரூர் – வீதிவிடங்கர்

இவ்விடம் திருவாரூரில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் வான்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜன் ஆகிய திருப்பெயர்களைக் கொண்டுள்ளார். அம்மை கலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள் என்ற பெயர்களில் அருளுகிறாள்.

இவ்விடம் சப்தவிடங்கத் தலங்களில் முதன்மையானது. மேலும் பஞ்சபூதத் தலங்களில் (மண்) பிருத்திவித் தலமாகும். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தினை சைவ சமயக்குரவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் நால்வரும் தம் பாக்களால் போற்றியுள்ளனர். 353 பாடல்கள் பாடப்பட்டு இத்தலம் அதிக பாடல்கள் பெற்ற தலம் என்ற சிறப்பினைப் பெறுகிறது.

தேவாரம் பாடப்பட்ட காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 87-வது தலமாகும். இத்தலத்தில் நவகிரகங்கள் நேர்கோட்டில் சிவதரிசனம் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு மூலவருக்கு இணையாக வீதிவிடங்கர் வழிபடப்படுகிறார். இவர் கையடக்க லிங்கத் திருமேனியாவார். இவர், வழிபாடு செய்தபின் பெட்டிக்குள் மலர்களுக்கு இடையில் வைக்கப்படுகிறார்.

மார்கழி திருவாதிரையின் போது இவரின் பாத தரிசனம் சிறப்பு வாய்ந்தது. இவர் மாணிக்கத் தியாகர் என்று அழைக்கப்படுகிறார். இவர் நீலோத்பவ மலர்களால் வழிபடப்படுகிறார். இவரின் நடனம் அஜபா நடனமாகும்.

அஜபா என்பதற்கு ‘வாய்வழியில் உச்சரிக்கப்படாத’ என்பது பொருளாகும். அஜபா நடனம் என்பது உயிர் இயக்கத்தினைக் குறிக்கும் நடனமாகும்.திருவாரூர் தலமானது உடலில் குண்டலி சக்தி இருக்கும் மூலாதாரத்தைக் குறிக்கிறது.

வீதிவிடங்கரை வழிபட திருமணவரம், குழந்தைவரம், கல்விமேன்மை, வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, பாவங்கள் நீங்குதல், ஆணவம் மறைவு ஆகியவை கிட்டும்.

 

திருக்காரவாசல் – ஆதிவிடங்கர்

திருக்காரவாசல் - ஆதிவிடங்கர்

இத்தலம் திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் திருவாரூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் கண்ணாயிர நாதர் என்ற பெயரிலும், அம்மை கைலாச நாயகி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.

ஆதியில் இவ்விடத்தில் கருமை நிறமான அகில் மரங்களைக் கொண்டிருந்ததால் திருகராகில் என்று அழைக்கப்பட்டது. பின் மருவி திருகாறாயில் என்றானது. தற்போது திருக்காரவாசல் என்றழைக்கப்படுகிறது.

அப்பர், சுந்தரர் இத்தலத்தினைப் போற்றி பாடியுள்ளனர். தேவாரம் பாடப்பட்ட காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 119-வது தலமாகும்.

இங்கு ஆதிவிடங்கர் மூலவருக்கு இணையாக தென்கிழக்கில் விதானத்துடன் கூடிய மேடைமீது சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். சிவபெருமான் உலகத் தோற்றத்தின் ஆதியாக இருப்பதைக் குறிக்கும் விதமாக இவர் ஆதிவிடங்கர் என்ற பெயரில் அருள்புரிகிறார்.

இவருடைய நடனம் குக்குட நடனம் ஆகும். குக்குட நடனம் என்பது போருக்குச் செல்லும் கோழியானது உடலினை இடமும் வலமும் சாய்த்து, பார்த்து பார்த்து முன்னேறி சற்று நிதானித்து சுழன்று தாக்குவது போல் ஆடுவது ஆகும்.

ஆதிவிடங்கருக்கு வெள்ளைச் செவ்வந்தி மலர்களை சூட்டுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இவரை வழிபட பாவங்களும், சாபங்களும் நீங்கும். மேலும் கண் மற்றும் தோல் வியாதிகள் நீங்கும்.

 

நாகபட்டிணம் – சுந்தர விடங்கர்

நாகபட்டிணம் - சுந்தர விடங்கர்

இத்தலம் நாகபட்டிணத்தில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் இத்தலம் ‘நாகை காரோணம்’ என்றழைக்கப்பட்டது. இங்கு இறைவன் காயாரோகணேஸ்வரர் என்ற பெயரிலும், அம்மை நீலதாயாட்சி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.

புண்டரீக மகரிஷிக்கு இத்தல இறைவன் கட்டித் தழுவி முக்தி கொடுத்தால் காயாரோகணேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். (காயம் – உடல், ஆரோகணம் – கட்டி தழுவுதல்). அம்மை தன்னுடைய நீலநிற விழிகளால் அருளை வழங்குவதால் நீலதாயாட்சி என்றும், கருந்தடங்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார்.

நீலதாட்சியின் சன்னதியில் உள்ள நந்தியெம்பெருமான் கழுத்தைத் திருப்பி வலக்கண்ணால் அம்மையும், இடக்கண்ணால் அப்பனையும் பார்ப்பதால் இரட்டைப்பார்வை நந்தி என்று அழைக்கப்படுகிறார். இவரை வழிபட கண்நோய் நீங்கும்.

இறந்தவர்களுக்கு இத்தல இறைவனின் ஆடை மற்றும் மாலைகள் தானம் வழங்குவது இங்குள்ள சிறப்பாகும். இத்தலத்தில் நவகிரகங்கள் மேற்கு நோக்கி ஒரே வரிசையில் காணப்படுகின்றன. தேவாரம் பாடப்பட்ட காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 82-வது தலமாகும்.

இத்தலத்தில் சுந்தர விடங்கர் மூலவருக்கு தெற்கில் முத்து விதானத்தின் கீழ் சிம்மாசனத்தில் அருள்புரிகிறார். இவருக்கு எதிரில் மகாமண்டபத்தில் உலோக நந்தியும், சுந்தரமூர்த்தி நாயனாரும் காணப்படுகின்றனர்.

இவரின் சந்நதியே விடங்கர்களின் சந்நதிகளில் பெரியது. சுந்தர விடங்கர் அழகிய விடங்கர் என்றும், கரோக சிந்தாமணி என்றும் அழைக்கப்படுகிறார். இவரின் நடனம் வீசி அல்லது பாராவார தரங்க நடனம் ஆகும்.

பாராவாரம் என்பது கடலையும், தரங்கம் என்பது அலைகளையும் குறிக்கும். சுந்தர விடங்கர் கடல் அலைகள் தரைமீது சுழன்று வீழ்ந்து தணிந்து அடிப்பது போன்று உயர்ந்தும் தாழ்ந்தும் நடனம் புரிகின்றார். இவரை வழிபட பிள்ளைப்பேறு, செய்த பாவத்திற்கு மன்னிப்பு, முக்தி ஆகியவை கிடைக்கும்.

 

திருநள்ளாறு – நகவிடங்கர்

திருநள்ளாறு – நகவிடங்கர்

இத்தலம் பாண்டிச்சேரியில் காரைக்காலுக்கு மேற்மே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர், அம்மை போகமார்த்த பூண்முலையாள் என்ற பெயரில் அருள்புரிகின்றனர்.

இத்தலத்தில் நளன் சனிதோசம் நீங்க‌ப் பெற்று தான் இழந்த செல்வம், மனைவி, மக்கள், நாடு என‌ எல்லாவற்றையும் திரும்பப் பெற்றான். இத்தல இறைவனை தேவாரம் பாடிய அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர்.

இத்தலத்தில் உள்ள நளதீர்த்தத்தில் நீராடினால் சனி தோசம் நீங்கும், பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் முன்னர் செய்த பாவங்கள் நீங்கும். வாணி தீர்த்தத்தில் நீராடினால் கவி பாடும் திறனைப் பெறலாம். தேவாரம் பாடப்பட்ட காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 52-வது தலமாகும்.

இங்கு நக விடங்கர் திருவோலக்க மண்டபத்தில் பெரிய வெள்ளி விதானத்தில் வெள்ளி மஞ்சத்தில் அருள்புரிகிறார். இவர் நாக விடங்கர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் மலைபோல கம்பீரமாகக் காணப்படுவதால் நகவிடங்கர் என்றழைக்கப்படுகிறார். இவர் புத்திரத் தியாகர், செண்பத் தியாகர் என்று சிறப்பிக்கப்படுகிறார்.

இவரின் நடனம் உன்மத்த நடனம் ஆகும். அதாவது பித்து பிடித்தவர் போல் நடனம் புரிகிறார். இவர் செங்கழுநீர் பூக்களால் அர்ச்சித்து வழிபடப்படுகிறார். இவரே இந்திரனுக்கு புத்திரப் பேற்றினை அருளியவர். இவரை வழிபட்டு குழந்தை வரத்தினைப் பெறலாம்.

 

திருக்கோளிலி (திருக்குவளை) – அவனி விடங்கர்

திருக்கோளிலி – அவனி விடங்கர்

இத்தலம் திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் கச்சனத்திலிருந்து 3 மைல் தொலைவில் உள்ளது. இங்கு இறைவன் பிரம்மபுரீஸ்வரர், அம்மை வண்டமர் பூங்குழலாள் என்ற பெயர்களில் அருள்புரிகின்றனர்.

பிரம்மன் இறைவனின் திருமுடியைக் கண்டதாக பொய் சொன்ன பாவம் நீங்க இத்தலத்தில் வெண்மணலால் லிங்கம் செய்து வழிபாடு செய்தான். அதனால் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.

நவக்கிரகங்களின் பாவங்களை போக்கும் தலமாதலால் இது திருக்கோளிலி ஆனது. இத்தல இறைவனுக்கு குவளை சாற்றப்பெறுவதால் திருக்குவளை என்றழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் நவகிரகங்கள் ஒரே வரிசையில் காணப்படுகின்றன. தேவாரம் பாடப்பட்ட காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 123-வது தலமாகும்.

இங்கு அவனிவிடங்கர் மூலவருக்கு தெற்கில் திருவோலக்க மண்டபத்தில் பெரிய விதானத்தின் கீழ் சிம்மாசனத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார். மகாமண்டபத்தில் உலோக நந்தியும், சுந்தரமூர்த்தி நாயனாரும் காணப்படுகின்றனர்.

திருமால் தியாகரை வழிபாடு செய்வது சுதை வடிவில் காணப்படுகிறது. அவனியைத் தான் இருந்த இடத்தில் இருந்து ஆட்டுவிப்பதால் அவனிவிடங்கர் என்றழைக்கப்படுகிறார். இவர் ஊழிப்பரன், செல்வத்தியாகர் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்.

இவரின் நடனம் பிருங்கி நடனம் ஆகும். வண்டு பூவிலிருந்து தேனெடுக்கும்போது உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்து பூவில் அமர்ந்து பூவினைக் குடைந்து தேன் எடுப்பது போல் ஆடுவது பிருங்கி எனப்படும் வண்டின் நடனமாகும். இவரை வழிபட நவகிரக பாதிப்புகள் நீங்கும்.

 

திருமறைக்காடு (வேதாரண்யம்) – புவனி விடங்கர்

திருமறைக்காடு (வேதாரண்யம்) – புவனி விடங்கர்

இவ்விடம் நாகை மாவட்டத்தில் வேதாரண்யத்தில் அமைந்துள்ளது. வேத நூல்கள் வழிபட்ட தலமாதலால் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டு வேதாரண்யம் என்றாயிற்று.

இங்கு இறைவன் திருமறைக்காடர் என்றும் அம்மை யாழைப்பழித்த மென்மொழியாள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தில் வீணை இல்லாத கலைமகள் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் காணப்படுகிறாள்.

தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பாடப்பெற்ற தலம். கோளறு பதிகம் பாடப்பெற்ற தலம். 63 நாயன்மார்களுள் ஒருவரான பரஞ்சோதி இவ்வூரைச் சார்ந்தவர்.

இத்தலத்தில் நவகிரகங்கள் ஒரே திசையில் ஒரே வரிசையில் காணப்படுகின்றன. தேவாரம் பாடப்பட்ட காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 125-வது தலமாகும்.

இத்தலத்தில் புவனி விடங்கர் மூலவருக்கு கிழக்கில் உள்மண்டபத்தில் அருள்புரிகிறார். இவருக்கு எதிரில் நின்ற நிலையில் உலோக நந்தியும், விமானத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் காணப்படுகின்றனர்.

இவரின் நடனம் ஹம்ச பாத நடனம் ஆகும். அன்னப்பறவையானது முன்னும் பின்னும் அசைந்து ஆடுவது போல் ஆடும் நடனம் ஹம்ச பாத நடனம் ஆகும்.

இவரை வழிபட பாவங்கள் நீங்கும். மனஅமைதி, செல்வச் செழிப்பு, கல்வி கேள்வி, சிறந்த ஞானம், பிணியற்ற வாழ்வு, திருமண வாழ்வு, பிள்ளைப்பேறு ஆகியன கிட்டும்.

 

திருவாய்மூர் – நீலவிடங்கர்

திருவாய்மூர் - நீலவிடங்கர்

இத்தலம் திருவாரூரை அடுத்து திருக்குவளையிலிருந்து வடக்கே 5 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு இறைவன் வாய்மூர் நாதர், அம்மை பாலின் மென்மொழியாள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

வாய்மையர் ஊர் வாய்மூர் என்றானது. இத்தலத்தில் நவகிரகங்கள் ஒரே திசையில் ஒரே வரிசையில் காணப்படுகின்றன. தேவாரம் பாடப்பட்ட காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 124-வது தலமாகும்.

இத்தலத்தில் நீலவிடங்கர் மூலவருக்கு தெற்கே இரத்தின சிம்மாசனத்தில் அருள்புரிகிறார். இவர் நீலநிற இரத்தினக்கல்லால் ஆனவர். இவர் ஏனைய விடங்கர்களைவிட அளவில் சிறியவர்.

இவரின் நடனம் கமல நடனம் ஆகும். தண்ணீர் நிறைந்த குளத்தில் தாமரைப்பூவானது தென்றலுக்கு ஏற்றவாறு ஆடுவது கமல நடனம் ஆகும்.

நீலவிடங்கருக்கு தினமும் மாலையில் பிட்டும் வடையும் படைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இவரை வழிபட அகால மரணம் நிகழாது. திருமண பாக்கியம், கல்வி வளம், செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.

வாழ்வுக்குத் தேவையானவற்றை வாரி வழங்கும் விடங்கர்களை சப்தவிடங்கத் தலங்கள் சென்று வழிபாடு செய்து வாழ்வில் உன்னத நிலை பெறுவோம்.

– வ.முனீஸ்வரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.