சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்

சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்.

டெல்லி வன்முறையில் சிந்திய ரத்தம் இந்து ரத்தமோ, இஸ்லாமிய ரத்தமோ அல்ல; அது இந்திய ரத்தம் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கும் வரைதான் நம்மிடம் சுதந்திர இந்தியா இருக்கும்.

இந்தியா என்ற புண்ணிய பூமி அன்னியருக்கு அடிமைப் பட்டது எதனால்?

தன்னுடைய பலக் குறைவாலா?

இல்லை; ஒற்றுமை குறைவால்.

நம்மிடையே வளம் இருந்தும், திறமை இருந்தும், ஒற்றுமை இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர்தான் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள்.

நாம் விடுதலை பெற வேண்டும் என்றால் நம்மிடையே ஒற்றுமை வேண்டும் என்றுதான், நமது நாட்டுத் தலைவர்கள் அனைவரும் உழைத்தனர்.

எல்லா மதத்தினரும் எல்லா சாதியினரும், விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்புதான், நமக்கு விடுதலை சாத்தியமானது.

 

மனிதனைத் தெய்வீக நிலைக்கு உயர்த்துவதுதான் எல்லா மதத்தின் நோக்கமும். மனிதனை விலங்காக மாற்ற எந்த மதமும் சொல்லிக் கொடுக்கவில்லை.

நீ வாழப் பிறரைக் கெடுக்காதே என்பதுதான் மதத்தின் அடிப்படை.

ஆனாலும் அதிகாரத்திற்கான துருப்புச் சீட்டாகவே மதம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.

இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் அப்படித் தொடர்வது வருத்தம் தருகின்றது.

 

நம்மிடம் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் பேசித் தீர்க்க முடியாது என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம் என்றால் நம்மிடம் மகிழ்ச்சியும் சுதந்திர வாழ்வும் நிலைக்காது.

சிறுபான்மையினர் என்பவர் நமது அடிமைகள் போல என்ற எண்ணத்திற்கு பெரும்பான்மையினர் வருவது தவறு.

சிறுபான்மையினரை நாம் தனிமைப்படுத்தி அவர்களை வித்தியாசமாக நடத்தினால், நாடு எப்போதும் கொதித்துக் கொண்டே இருக்கும். அங்கு மகிழ்ச்சி இருக்காது.

இதற்கான நல்ல உதாரணம் இலங்கை.

 

சிறுபான்மையினரும் தங்களை எப்போதும் விலக்கிக் கொண்டே செல்லாமல், பெரும்பான்மையினருடன் இணைந்து வாழ வேண்டும் என்ற மன நிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

 

சிறுபான்மையினரான‌ முஸ்லீம்கள், பாபர் மசூதி பிரச்சினையில் நமது உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பைப், பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் ஏற்றுக் கொண்டது ஒரு நல்ல விசயம்.

அவர்களின் அந்த பங்களிப்பை மனதில் கொண்டு நாம் நமது குடியுரிமை சட்டத்தைத் திருத்தி இருக்க வேண்டும்.

பெரும்பான்மையினரான இந்துக்களும், மற்ற சிறுபான்மையினரும் வேறு நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் வந்திருந்தால், அவர்களுக்குக் குடியுரிமை வழங்கத் தயாராக உள்ள் இந்தியா, ஏன் அதே உரிமையை முஸ்லீம்களுக்கு அளிக்கவில்லை?

 

இந்துக்களும் மற்ற சிறுபான்மையினரும் மதக் கொடுமையால் வந்திருந்தால், மற்றவர்கள் மொழிக் கொடுமையால், சாதிக் கொடுமையால் அல்லது வறுமையால் வந்திருக்கலாம்.

 

அவர்களும் அகண்ட பாரதம் என்று நாம் சொல்லும் அன்றைய இந்தியாவின் ஒரு பகுதியினர்தான்.

ஏன் ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு?

 

இந்த சட்டம் ஏன் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் இருந்து வந்தவர்களை மட்டும் பற்றிப் பேசுகிறது?

ஏன் இலங்கை, திபெத் மற்றும் பர்மாவில் இருந்து வந்தவர்களைப் பற்றிப் பேசவில்லை.

பல கேள்விகள்; ஏமாற்றப்பட்டதான எண்ணங்கள்; அதற்கான  போராட்டங்கள்.

போராட்டம் ஒரு கட்டத்தில் டெல்லியில் 50 பேரைக் காவு வாங்கி விட்டது. யார் காரணம் என்று நான் பேச விரும்பவில்லை.

 

நம் நாட்டின் தலை நகரில் 50 பேர் கொல்லப்படும் வகையில் ஒரு வன்முறை அரங்கேறியிருக்கின்றது. நிலவுக்கும் செவ்வாய்க்கும் இராக்கெட் விடும் நம்மால், நமது சகோதரப் பிரச்சினையைப் பேசித் தீர்க்க முடியாமல் போய்விட்டது.

 

தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு வாய்ப்பாக, இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்த விரும்பும் மூன்றாம் தர அரசியல்வாதிகள், இருபுறமும் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். அப்பாவிகள் அதற்குப் பலியாகிக் கொண்டே இருக்கின்றார்கள்.

 

இந்து முஸ்லீம் பிரச்சினை என்பது இந்த நாட்டிற்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தவர்கள் உருவாக்கிய பிரச்சினை.

இந்த நாட்டிற்கு விடுதலை வேண்டும் என்று முன்னின்று போராடியவர், தனது உயிரை விலையாகக் கொடுத்த பின்புதான் அந்தப் பிரச்சினை தற்காலிக அமைதி கொண்டது.

அப்படி ஒரு மனிதர் இன்று நம்மிடையே இல்லை. எனவே மீண்டும் மதவெறி என்ற பூதம் தலையெடுக்காமல் இருக்க எல்லா அரசியல் தலைவர்களும் பொது மக்களும் உறுதி எடுக்க வேண்டும்.

 

டெல்லி வன்முறையில் சிந்திய ரத்தம் இந்து ரத்தமோ, இஸ்லாமிய ரத்தமோ அல்ல; அது இந்திய ரத்தம் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கும் வரைதான் நம்மிடம் சுதந்திர இந்தியா இருக்கும்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.