சுகமான சுமை – கதை

செழியனுக்கு அன்று காலைப் பொழுது சீக்கிரமே புலர தொடங்கியது.

சுற்றுலா தளத்தின் அருகே இருப்பதனாலோ என்னவோ அன்று காலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. தன் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வெளியே கிளம்பினார் செழியன்.

அவர் தன் கையில் வைத்திருந்த கோப்பில் கண்ணில் பட்ட இயற்கை அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டு சென்று கொண்டு இருந்தார்.

ஒரு மலைத்தொடரை அடைவதற்குள் மணி எட்டரை ஆகி இருந்ததை ஊர்ஜிதம் செய்த செழியன், டீக்கடைக்குள் சென்று டீ ஆர்டர் செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்து அருகே உள்ள நாளிதழை புரட்ட ஆரம்பித்தார்.

நாளிதழில் முக்கிய செய்திகளை மட்டும் மேய்ந்தன அவரின் கண்கள். சிறிது நேரத்தில் டீ வந்தது. கையில் எடுத்துக்கொண்ட செழியன் ஒரு மடக்கு குடித்துவிட்டு டீயை மேசை மீது வைத்தார்.

திரும்பவும் நாளிதழ். செய்திகள் நகர்ந்தன. ஒருவழியாக டீயை குடித்து முடித்துவிட்டு வெளியில் பார்வையை அலையவிட அவரின் பார்வை ஒரு இடத்தில் நிலை குத்தி நின்றது.

அப்போது டூரிஸ்ட் சொகுசு பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து பயணிகள் எல்லாம் கீழே இறங்க, அந்த இடமே மகிழம்பு மரத்துக்கு அடியில் உதிர்ந்து கிடக்கும் மலர்களைப் போல் மக்கள் கூட்டம் அங்கும் இங்கும் சிதற ஆரம்பித்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த செழியனின் கண்கள் மேஜைக்கு திரும்ப ஆரம்பித்த நேரம் ஒரு பெரியவர் நடுத்தர வயது மதிக்கத்த ஒரு பெண்ணை தன் முதுகில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தார்.

அவ்வளவுதான் செழியனின் மனம் கேள்வி கேட்க தொடங்கிற்று.

யார் இவர்?

ஏன் அந்த அம்மாவை முதுகில் சுமந்து வர வேண்டும்?

உடல்நிலை சரியில்லாதவரா?

அவருக்கு இப்பெண் மனைவியா? சகோதரியாக இருக்குமோ! ஒன்றுமே புரியவில்லையே.

இவர்களுக்கு துணைக்கு வேறு யாரும் இல்லையா! ஆதரவற்றவர்களா? செழியனின் மனம் ‘பாவம்’ என்று நினைத்து குழம்பி கொண்டு இருந்தது.

‘சரி எப்படியேனும் இதனை தெரிந்து கொண்டு ஆக வேண்டும். எப்படி தெரிந்து கொள்வது? நேரே போய் கேட்டுவிட முடியுமா? அப்படிக் கேட்டால் அவர் மனம் வலிக்காதா? அவரின் துக்கம் அதிகமாகிவிட்டால் என்ன செய்வது?’

யோசித்துக் கொண்டிருந்த அவருக்குள் ஒரு யோசனை தோன்ற தன் மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டு அவர்கள் இருவர் மீதும் மீண்டும் பார்வையை செலுத்தினார்.

பெரியவர் அருகில் இருந்த ஒரு மரத்தடியின் நிழலில் பெண்மணியை உட்கார வைத்துவிட்டு எங்கோ அவசரமாக சென்று சிறிது நேரத்தில் ஒரு தள்ளுவண்டியோடு வந்தார்.

அத்தள்ளு வண்டியில் அந்தப் பகுதியில் விளைந்த பழ வகைகளும் நிறுவை தராசும் பணம் வைப்பதற்கு ஒரு பிளாஸ்டிக் டப்பாவும் அதனுடன் வண்டிக்கு அடியில் இரண்டு பிளாஸ்டிக் சேரும் இருந்தன.

வண்டியை தள்ளி கொண்டு வந்தவர் மரத்தின் நிழலில் வண்டியை நிறுத்தி விட்டு வண்டியிலிருந்து சேரை எடுத்து ஓரமாக போட்டு, அந்த பெண்ணை தூக்கி உட்கார வைத்துவிட்டு பழங்களை எல்லாம் சரி செய்து வரிசையாக அடுக்கி வைக்க வியாபாரம் ஆரம்பித்தது.

‘ஓ! பழ வியாபாரியா? பரவாயில்லை எப்படியாக இருந்தாலும் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே! அது ஒன்று போதும் அவர்கள் சுயமரியாதையுடன் வாழ்பவர்கள் என்பதற்கு’ என்று நினைத்துக் கொண்டு தான் சாப்பிட்ட டீக்கு காசு கொடுத்துவிட்டு மெல்ல பழ வண்டியை நோக்கி நடந்தார் செழியன்.

“பெரியவரே பழம் எப்படி? எல்லாம் நல்ல பழம் தானே!” என்று கேட்டார் செழியன்.

“எல்லாம் நல்ல பழம் தானுங்க. வேண்டும் என்றால் ஒன்று எடுத்து சாப்பிட்டு பாருங்கள்” என்று தான் வெட்டி வைத்திருந்த பழத்தை காண்பித்தார் பெரியவர்.

“அதெல்லாம் வேண்டாம் பெரியவரே இதெல்லாம் எங்கிருந்து வருது?”

“இதெல்லாம் இங்கு சுற்று வட்டாரத்தில் கிராமத்தில் விளைந்த பழங்கள். எல்லாம் சுத்தமான நாட்டு பழ வகைகள். பயப்படாம நம்பி வாங்கிட்டு போங்க தம்பி. ஆமாம் உங்களுக்கு என்ன பழம் வேணும்?”

“செந்தூரா மாம்பழம் ஒரு கிலோ கொடுங்க. கிலோ என்ன விலை?”

“50 ரூபாய் தம்பி. 45 ரூபாய் கொடுங்க.”

“அப்புறம் மாதுளம் பழம் ஒரு கிலோ நல்ல பழமா கொடுங்க. அது ரெண்டும் சேர்த்து எவ்வளவு ஆச்சு?”

“மாதுளம் பழம் எண்பது ரூபாய். ரெண்டும் சேர்த்து 125 ரூபாய் ஆச்சு தம்பி.”

செழியன் பணத்தை கொடுத்து விட்டு, “ஆமாங்கய்யா இந்த வியாபாரம் எவ்வளவு நாளா பாக்குறீங்க?” என்று கேட்டர்.

“நான் சொல்லப்போனால் ஒரு 15 வருஷமா பார்க்கிறேன் தம்பி. ஆமா தம்பிக்கு எந்த ஊரு?”

“எனக்கு தஞ்சை மாவட்டம் தான். பக்கத்து கிராமம். நான் ஒரு எழுத்தாளன். என் வேலை காரணமாக இங்கே வந்திருக்கேன். இங்கே பக்கத்தில் தான் ஒரு கிலோமீட்டர் தள்ளி ரூம் எடுத்து தங்கி இருக்கேன். உங்களுக்கு சொந்த ஊர் இதுதானா? ஆமாம் அம்மாவுக்கு என்ன உடம்புக்கு முடியலையா?”

“கொஞ்சம் இருங்க” என்று சொல்லிவிட்டு பெரியவர் அருகில் இருந்த சேரை இழுத்து போட்டார்.

“உக்காருங்க தம்பி ரொம்ப நெருங்கிட்டீங்க. எனக்கும் தஞ்சை மாவட்டம். பள்ளி அக்ரஹாரம் தான் ஊரு. கொஞ்சம் டீ சாப்பிடுறீங்களா?”

“அதெல்லாம் வேணாம் ஐயா.”

“கொஞ்சம் இருங்க தம்பி. நாங்களும் இன்னும் டீ சாப்பிடல. உங்கள வச்சு நாங்களும் டீ சாப்பிடுகிறோம்” என்று சொல்லிவிட்டு அருகில் இருக்கும் டீ கடைக்கு சென்று டீ வாங்கி வந்தார்.

மூன்று கப்பில் ஊற்றி ஆளுக்கு ஒன்றாக கையில் கொடுத்தார். டீயை சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் அவரே பேச்சை ஆரம்பித்தார்.

“இவங்க என் மனைவி முல்லை. இவங்க கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவங்க. இவங்க கல்லூரியில் படிச்சுக்கிட்டு இருந்தாங்க. நான் கல்லூரிக்கு அருகே ஒரு கேண்டின்ல வேலை பார்த்துட்டு இருந்தேன்.”

அப்போது ஒருவர் வந்து “ஐயா ஒரு கிலோ கமலா ஆரஞ்சு கொடுங்க” என்றார்.

“ஒரு கிலோ கமலா ஆரஞ்சு 40 ரூபாய். ரெண்டு கிலோவா வாங்கிட்டீங்கன்னா 65 ரூபாய் கொடுத்தா போதும். இரண்டு கிலோவா கொடுத்துடவா?”

“சரிங்க கொடுத்துடுங்க.”

வந்தவர் 2 கிலோவை வாங்கிக் கொண்டு நகர, பெரியவர் பேச்சை தொடர்ந்தார்.

“எங்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பித்து விட்டோம். இந்த விஷயம் இரண்டு குடும்பத்தினர்களுக்கும் தெரிய வர எங்கள் விருப்பத்தை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரும் நிலை ஏற்பட்டு விட்டது. எங்களுக்கு அடைக்கலம் தந்தது இந்த ஊரு தான். இங்கே வந்து இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை வாழ தொடங்கினோம். இங்கே வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது.”

“ஆமாம் அவங்களை பார்த்துக் கொள்ளும் அளவிற்கு வீட்டில் யாரும் இல்லையா?”

“எங்களுக்கு 23 வயதில் எங்களுக்கு ஒரே ஒரு பையன் தான். நாங்கள் இருவரும் எப்படியோ கஷ்டப்பட்டு அவனை ஆளாக்கி விட்டோம். பையன் நல்லா படிச்சிருக்கான்.”

“இவங்களுக்கு எப்போ இப்படி நடக்க முடியாம உடம்பு சரி இல்லாம போச்சு?”

“என் மனைவி நல்லாத்தான் இருந்துட்டு இருந்தாங்க. ஒரு மூணு வருஷத்துக்கு முன்னால திடீர்னு ஒரு நாள் காய்ச்சல்னு படுத்துட்டாங்க. அதுல இவங்களுக்கு கால் நரம்புகள் பாதிச்சு போய் நடக்க முடியாம ஆயிடுச்சு.

இதுவரையில் என் வாழ்க்கை ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து வந்து கொண்டிருந்தவளுக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சி. இதற்கிடையில் இவள் செல்லமாக வளர்த்த மகன் வேறு வீட்டின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் அவன் கூட படித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் சென்று விட்டான்.

ம் ..தன் வினை தன்னைச் சுடும் என்பார்கள். அது எங்கள் வாழ்க்கையில் இன்று உண்மையாகி விட்டது. இருந்தாலும் நான் மனம் தளர்ந்து விடவில்லை. அவள் என்னை நம்பி தானே கை பிடித்தாள். அவளை நான் கை விட்டு விடுவேனா?

என் உடம்பில் இன்னும் வலு இருக்கிறது. என் உடம்பில் உயிர் உள்ளவரை காப்பாற்றுவேன். இந்நிலையிலும் என் மனைவிக்கு என் மீது பிரியம் அதிகம்.

அவள் நல்லா இருக்கும் பொழுது எங்களை கண்ணின் இமை போல் காத்தவள். குடும்ப பாரத்தை சற்றும் சளைக்காமல் சுமந்தவள். இப்பொழுது அவளை நான் சுமக்கிறேன். இதுவும் ஒரு சுகமான சுமை தானே… இதுலயும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.”

பெரியவர் கூறியதைக் கேட்ட செழியன், கண்ணாடியை கழற்றி கண்களை துடைத்து விட்டு, பின்பு கண்ணாடியை மாட்டிக் கொண்டு, யோசனை செய்தவாறே நடக்கலானார்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.