சுமை தாங்கி – சிறுகதை

“வசந்தா… வசந்தா … என்ன பண்ணிக்கிட்டு இருக்க?

சீக்கிரம் வா. ஆபீசுக்கு நேரமாச்சு.” என்றான் கேசவன்.

“ச்…இதோ வந்துட்டேங்க. காலையில எந்திரிச்சா உங்க அம்மா அப்பாவுக்கு பணிவிடை செய்யணும். புள்ளைங்கள பள்ளிக்கூடத்துக்கு கிளப்பணும். இதுக்கே எனக்கு நேரம் சரியா இருக்கு. இதுல நீங்க வேற காலில சுடுதண்ணியை ஊத்திக்கிட்டு நிக்கிறீங்க…” என்று கடுகடுத்தாள் வசந்தா.

“சரி சரி. கத்திக்கிட்டு இருக்காத. அப்பாவுக்கு காபி கொடுத்தாச்சா?அம்மாவுக்கு சாப்பாட்டைக் கொடுத்து மாத்திரையை கொடு. ஸ்கூல் வேன் வந்திருச்சா இல்லையா? வேன் வந்தவுடன் குழந்தைகளை பத்திரமா அனுப்பி வை. அப்பாவ வெயில்ல கடைக்கு அனுப்பாத. பத்திரமா நீதான் ரெண்டு பேத்தையும் பாத்துக்கணும் என்ன புரியுதா?” என்று அடுக்கினான் கேசவன்.

” ..ம் ..ம்…ம் புரிஞ்சிச்சு புரிஞ்சிச்சு. நான் பாத்துக்கிறேன். உங்க அம்மா அப்பாவை நான் ஒன்னும் அப்படி பட்டினி போட்டு கொன்னுட மாட்டேன்.

நானும் மனுஷி தானே. உங்க அம்மா பண்ற அட்டகாசம் தாங்க முடியல. ரூம் பக்கமே போக முடியல. ஒரே நாத்தம். கால் தானே முடியாமல் போச்சு வாயுமா முடியாம போச்சு. கூப்பிட்டு ஒரு வார்த்தை சொன்னா என்ன?” என்று படபடத்தாள் வசந்தா.

“சரி சரி கத்தாதே. அவங்க காதுல இதெல்லாம் விழுந்து தொலைக்க போகுது. மனசு கஷ்டப்படுவாங்க வசந்தா. அவங்களுக்கு நான் ஒரே புள்ள. என்ன ரொம்ப செல்லம்மா வளத்தாங்க. ரெண்டு மூணு பிள்ளையா பெத்தாங்க. அவங்க வீட்ல பத்து நாள் இருந்துட்டி வாங்க. இவங்க வீட்டுல கொஞ்ச நாள் இருந்துட்டு வாங்கன்னு சொல்றதுக்கு. நாமதான் பார்த்தாகணும். கோபப்படாத வசந்தா” என்று சொல்லி முடிப்பதற்குள்

“பீப்.. பீப்.. பீப்.. பீப்..” வாசலில் பள்ளி வேன் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

“அங்க பாரு வேன் வந்துருச்சு போல இருக்கு. எங்க பசங்க ரெண்டு பேரும்?” என்று கேட்டான் கேசவன்.

“அடேய் சுதீஷ், சுதாகர், வேன் வந்திருச்சு வேகமா வாங்கப்பா …” என்று சத்தமிட்டாள் வசந்தா.

சுதீசும் சுதாகரும் “இதோ வந்துட்டேன் அம்மா” என்றபடி வேகமாக வந்து வேனில் ஏறினர்.

டாட்டா காட்டிவிட்டு வசந்தா உள்ளே வந்தாள்.

“சரி சரி நானும் கிளம்புறேன். உன்கிட்ட பேசிகிட்டு இருந்ததிலேயே மணி ஆயிடுச்சு.” என்று சொல்லிவிட்டு அரக்க பரக்க செருப்பை காலில் மாட்டினான்.

“லொக் ..லொக் ..லொக்..” என்ற வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த அப்பாவின் இருமல் சத்தம் அவனை நிறுத்தியது.

“கேசவன்”

“என்னப்பா ஆபீசுக்கு கிளம்பறேன் நேரமாச்சு. நைட்டுக்கு வர்றப்ப இருமல் சிரப் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு வசந்தாவுக்கு செய்கையில் தலையை ஆட்டிவிட்டு கிளம்பினான்.

கணவனை வழி அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்த வசந்தா முணுமுணுத்துக் கொண்டு அடுக்களைக்கு சென்றாள்

“….ம் இருக்கட்டும் இருக்கட்டும் இன்னைக்கு இந்த கிழவியை உண்டு இல்லைன்னு பண்றேன் பாரு. புள்ளைங்க இருக்கிற இடமுன்னு கூடவா தெரியாது.

இதுங்களுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு குடுக்கணுமா. டீ குடுக்கணுமா. நல்லா பாத்துக்கணுமா. மாத்திரை மருந்து கொடுக்கணுமா.

என்னைய சாப்பிட்டியானு கேட்கிறதுக்கு ஒரு நாதி இல்லை. நான் என்ன மெஷினா?” என்றவாறு உள்ளே சென்றாள் வசந்தா.

சற்று நேரத்தில் காப்பி டம்ளருடன் வந்தாள்.

“மாமா.. மாமா … காப்பி சாப்பிடுங்க …”

காப்பியை வாங்கிக் கொண்ட நாச்சியப்பன் “வசந்தா உங்க அத்தைக்கு கொடுத்துட்டியம்மா?” என்று கேட்டர்.

“இதோ கொடுக்குறேன் மாமா” என்றபடி உள்ளே சென்றாள்.

திண்ணையில் உட்கார்ந்திருந்த நாச்சியப்பன் பேப்பரை படித்து முடித்துவிட்டு கையில் காப்பி டம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே வந்து நேரே தன் மனைவி ரூமுக்கு சென்றார்.

“என்ன பொன்னி எப்படி இருக்க? இப்போ வலி எப்படி இருக்கு? உன் மருமகள் காப்பி கொடுத்தாளா?” என்று கேட்டுக் கொண்டு அருகில் உள்ள மேசையை பார்த்தார்.

காப்பி வைத்த வேகத்தில் கீழே சிந்தி இருந்தது. பின்பு பொன்னியின் கண்களை நோக்க பொன்னியின் கண்களில் நீர் வழிந்து காய்ந்து கொண்டிருந்தது.

நாச்சியப்பன் புரிந்து கொண்டு, “என்ன உன் மருமகள் பஜனையை ஆரம்பித்து விட்டாளா?” என்றார்.

பொன்னி “என்ன செய்ய நான்? வாங்கி வந்த வரம் அப்படி. என்னையதான் அந்த கடவுள் காலை உடைத்து உட்கார வச்சிட்டாரு. நான் என்ன வேணும்னா செய்றேன்.

காலையில இருந்து என்னைய வாய்க்கு வந்தபடி பேசிக்கிட்டு இருக்கிறா. நான் எத்தனையோ முறை ‘வசந்தா, அம்மா வசந்தா’ என்று கூப்பிட்டுப் பார்த்தேன். அவள் காதில் விழவில்லை.

என்னால் இயற்கை உபாதையை தாங்கிக் கொள்ள முடியாமல் காலோடும் கையோடும் ஆயிடுச்சு. நான் என்ன வேணுமுன்னா செஞ்சேன்.

அதுக்கு போயி, எங்கேயாவது போய் சாக வேண்டியது தானே. கோயில், குளம் என்று எங்கேயாவது பிச்சை எடுக்க போக வேண்டியது தானே. இங்கே இருந்துகிட்டு ஏன் என் உசுர வாங்குற? என்று வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறா. என் வேதனையை யாரிடம் போய் சொல்லி அழ …” என்று மிகவும் வருந்தினாள் பொன்னி.

நாச்சியப்பன் ஆறுதல் சொல்ல இயலாமல் மறுபடியும் வெளியே சென்று திண்ணையில் உட்கார்ந்தார். அவர் கண்கள் கலங்கின.

அப்போது வசந்தா அங்கே வந்தாள்.

“மாமா…மாமா… வீட்ட பத்தரமா பாத்துக்குங்க. நான் மார்க்கெட்டுக்கு போயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

மருமகள் சொன்னது நாச்சியப்பன் காதில் விழவில்லை.

நாச்சியப்பன் சிந்தனையில் ஆழ்ந்தார்.

‘நான் அவளை அழகுக்காகவா கைபிடித்தேன்? இல்லை ஆஸ்திக்காக கைப்பிடித்தேனா?

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து இனி என் காலம் உள்ள வரை உன்னை கைவிடமாட்டேன் என்று அவள் கையை பிடித்தேனோ, அன்று முதல் இன்று வரை அவள் கண்கள் கலங்கியதே இல்லையே.

இப்போது யார் கண் பட்டதோ, யார் விட்ட சாபமோ தெரியவில்லை அவள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.

அன்று மட்டும் அந்த காகம் கத்தாமல் இருந்திருந்தால்.

ஆம் அன்று அவளும் வசந்தாவும் பம்பரமாய் சுற்றி வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வீட்டு வாசலில் உள்ள மரத்தின் மேல் காக்கா கத்திக் கொண்டிருந்தது.

ஹாலில் உட்கார்ந்திருந்த என்னிடம் பொன்னி சிரித்த முகத்துடன் வேக வேகமாக ஓடி வந்தாள்.

“என்னங்க என்னங்க இன்னைக்கு நம்ம வீட்டுக்கு யாரோ விருந்தாடி வர போறாங்க. “

“நான் என்ன விருந்தாடியா?”

“ஆமாங்க”

“நம்ம வீட்டு வாசல்ல காக்கா கத்துது பாருங்க.”

“காக்காவுக்கு யாரும் சோறு வைக்கல போல அதான் உன்னைய தேடிட்டு வந்து இருக்குது”

“என்ன கிண்டலா? வேணும்னா பாருங்க இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள விருந்தாடி வராங்களா இல்லையான்னு” என்று சொல்லிக்கொண்டு வேலையை தொடர, சிறிது நேரத்தில் ஓர் அலறல் சத்தம்.

மாடிபடியில் இருந்து உருண்டு கீழே விழுந்தாள். அன்று விழுந்தவள் எழுந்திருக்கவே இல்லை. சேரில் முடங்கி விட்டாள்.

அவள் சொன்னதைப் போல் உறவினர்கள் வந்து பார்த்து சென்றனர்.

ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.

நாச்சியப்பன் ஒரு முடிவுக்கு வந்தவராய் எழுந்து ஓரத்தில் நின்றிருந்த சைக்கிளை வாசலில் கொண்டு வந்து நிறுத்தினார். தன் பலத்தினை ஒன்று திரட்டி பொன்னியை தூக்கி வந்து சைக்கிளில் உட்கார வைத்தார்.

“பொன்னி, இனி நாம் யாருக்கும் சுமையாக இருக்க வேண்டாம். என் சுமையை நானே சுமக்க போகிறேன். உன்னை கடைசி வரையில் நான் கைவிட மாட்டேன். நாம் எங்கேயாவது கண்ணுக்கு எட்டி போய் விடலாம்” என்று சொல்லிக் கொண்டே சைக்கிளைத் தள்ள ஆரம்பித்தார்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு