ஸ்கூட்டியில் வந்த தெய்வம் – சிறுகதை

நாகை நகரத்திலிருந்து பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் வாடிய மலரை போல் முகம் வாடி இருக்க, பின்னலிடாத தலையும், வண்ணம் தீட்டாத முகமும், திருத்தப்படாத புருவமும் வரையப்படாத கண்களில் கண்ணீர் வழிய, சிரிப்பை மறந்த முகத்துடன் ஒளி மங்கிய நிலவாய் அமர்ந்திருந்தாள் மாலதி.

கலங்கிய கண்களை புடவை தலைப்பில் ஒற்றி எடுத்துக் கொண்டிருக்கையில், தன்னருகில் வந்த கண்டக்டரைக்கூட கவனிக்காமல் அமர்ந்திருந்தாள்.

“இந்தாம்மா எங்க போகணும்?” கண்டக்டரின் குரல் கேட்டு சுயஉணர்வுக்கு வந்தாள் மாலதி.

“நன்னிலம் ஒன்னு கொடுங்க” என்று தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த முடிச்சை அவிழ்த்து ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள்.

கண்டக்டர் பயண சீட்டுடன் மீதித் தொகையை கொடுத்துவிட்டுக் கடந்தார்.

வண்டி நகர்ந்து கொண்டிருந்தது.

சிறிது தூரம் சென்றிருக்கும்.

பஸ் சடன் பிரேக் போட்டு ஒரு குலுக்கலுடன் நின்றது.

ஒரு இளைஞன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கைக்குழந்தையுடன் பஸ்ஸில் ஏறி மாலதியிடம் வந்தான்.

“ஏம்பா அவ்வளவு அவசரமா வண்டிய ஓவர் டேக் பண்ணிட்டு வந்து ஏற்றயே உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கிறதா?” என்றார் டிரைவர்.

“இல்ல சார். என்ன கொஞ்சம் மன்னிச்சிடுங்க. என் மனைவி என்னிடம் கோவிச்சுக்கிட்டு ஊருக்கு போறாங்க. அதனாலதான் அப்படி வந்தேன்.”

“அதுக்காக இப்படியா? கைக்குழந்தையை வச்சுக்கிட்டு.”

“சாரி சார்” என்றான் அவன்.

“யாருமா அது? உங்க புருஷன் பொண்டாட்டி சண்டை எல்லாம் உங்க வீட்டில வச்சுக்கங்க” என்று அதட்டினார் கண்டக்டர்.

மாலதி ‘திருதிரு’ என்று விழிக்க, அந்த இளஞன் அருகில் வந்து “இந்த பார் மாலதி, நீ செய்றதெல்லாம் நல்லாவா இருக்கு?” என்றான்.

“நீங்க யாரு? எனக்கு புருசனும் இல்ல… புள்ளையும் இல்ல” என்றாள் மாலதி.

“இந்த ஒரு தடவ என்னைய மன்னிச்சிரு. நான் இனி இந்த மாதிரி ஏதும் தப்பு செய்ய மாட்டேன். வா மாலதி.”

மாலதி “முதல்ல நீ யாரு? நான் ஏன் உன் கூட வரணும்” என்று கோபத்துடன் கேட்டாள்.

“எனக்காக இல்லாட்டியும் இந்த குழந்தை முகத்தையாவது பாரு.
அதுக்காகவாவது நீ வந்துதான் ஆகணும்.” என்றான் இளைஞன்.

அவர்கள் வாக்குவாதத்தில் குழந்தையும் சேர்ந்து அழ ஆரம்பித்தது.

“நீ எனக்கு புருஷனே இல்லைங்கிரேன். அப்புறம் குழந்தை மட்டும் எப்படி? அதுவும் எனக்கு பிறந்தது இல்லை” என்ற் சீறினாள் மாலதி.

அக்கம் பக்கத்து சீட்டில் உள்ள பெண்கள், “அட போம்மா புருஷன் பொண்டாட்டி சண்டைனா அப்படித்தான். விட்டுக் கொடுத்துத்தான் போகணும்.” என்றனர்.

“அட இது யாருன்னு தெரியாது என்கிறேன். இவரு என் புருஷனும் இல்ல. இது என் பிள்ளையும் இல்ல.” என்றாள் மாலதி.

மற்ற பெண்கள் “அட சும்மா இரு புள்ள. நீ அந்த தம்பிக்காக பாக்கலனாலும் இந்த குழந்தை முகத்தை பாரு. அது எவ்வளவு நேரமா அழுதுட்டு உன்னைய பார்த்துட்டு இருக்குன்னு.” என்றனர்.

“அய்யய்யோ இது என் புள்ளையே இல்லமா.” என்று மாலதி கத்தினாள்.

உடனே அருகில் உள்ள பெண்கள் “அட என்ன பார்த்துட்டு நிக்கிறீங்க தம்பி! குழந்தையை அது கையில கொடுத்துப்புட்டு நீங்க போய் வண்டியை எடுங்க. அதெல்லாம் அந்த புள்ள வரும்.” என்றனர்.

உடனே டிரைவரும் கண்டக்டரும் “என்னப்பா அங்க என்னதான் நடக்குது? நாங்க போறதா இல்லையா? வண்டியை விட்டு முதலில் கீழே இறங்குங்க”என்றனர்.

வண்டியில் இருந்த பெண்கள் மாலதியையும் இளைஞனையும் வற்புறுத்தி கீழே இறக்கினார்கள். உடனே பஸ் புறப்பட்டது.

கீழே நின்றிருந்தவர்கள் அனைவரும் மாலதியை சூழ்ந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் ஒரு பெண் “ஏம்மா அந்த தம்பி எவ்வளவு பொறுமையா உன்கிட்ட பேசுது. கோபப்படாமல் நீ போமா புருஷன் பொண்டாட்டி சண்டை எல்லாம் இப்படி தெருவுக்கு வரலாமா? அசிங்கமா இல்ல.

ஆம்பளைங்களுக்கு ஒன்னும் இல்ல. ஆனா நாம பொம்பளைங்களுக்கு தான். நாளைக்கு வெளியே தெருவுல நாம வரவேண்டாம் போவேண்டாமா..” என்றாள்.

“ஏம்மா இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம பேசுறீங்களே. இவங்க யாருன்னு எனக்கு தெரியாது.” என்று மாலதி கூறினாள்.

கூட்டத்தில் இருந்த பெண் “அட ஏம்மா கோவத்துல கண்ணு மண்ணு தெரியாமல் இப்படியா கட்டுன புருஷன் தெரியாதுன்னு புள்ளைய தெரியாதுன்னு சொல்லுவாங்க” என்று கேட்டாள்.

“தம்பி நீங்க பைக்கை எடுங்க தம்பி. இந்தம்மா ஏறி உட்காருமா முதல்ல” என்று மற்றொரு பெண் சொன்னாள்.

அப்போது ஸ்கூட்டியில் ஒரு பெண் வந்து இறங்கினாள்.

மாலதியை பார்த்து, “மாலதி நீங்க இங்கேயே இருக்கீங்க? உங்கள எங்க எல்லாம் தேடுறது? அங்க உங்க புருஷனும் பிள்ளையும் நிக்கிறாங்க. வாங்க சீக்கிரம் வண்டியில் ஏறுங்க” என்று சொன்னாள்.

மாலதி தப்பித்தால் போதும் என்று கண்களை துடைத்துக் கொண்டு ஓடிப்போய் ஏறி உட்கார்ந்தாள். ஸ்கூட்டி வேகம் எடுத்தது.

பைக் இளைஞன் விரக்தியோடு பார்த்துக் கொண்டு நின்றான். கூட்டம் கலைந்தது.

ஸ்கூட்டி கயத்தூர் பஸ் ஸ்டாப்பில் நின்றது.

தேவகி ஹெல்மெட்டை கழட்டினாள்.

மாலதி அப்போதுதான் அவள் முகத்தைப் பார்த்தாள். முன்பின் பழக்கம் இல்லாத ஒரு பெண்.

“யாரும்மா நீங்க? உங்கள நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே. அந்தக் கூட்டத்தில் என் பெயரை சொல்லி கூப்பிடீங்களே?” என்று ஆச்சரியப்பட்டாள் மாலதி.

“ஓ! அத நீங்க கேக்குறீங்களா? சொல்றேன். ஆமா நீங்க யாரு? அவங்க எல்லாம் யாரு? உங்களுக்கு என்ன பிரச்சனை? எனக்கு ஒண்ணுமே புரியல.

ஆனா நீங்க ஏதோ பிரச்சனைல மாட்டி இருக்கீங்கன்னு மட்டும் தெரியும். உங்கள எப்படியாச்சும் காப்பாத்தி ஆகணும் அப்படின்னு தான் உங்கள இங்க கூட்டிட்டு வந்தேன். இப்ப சொல்லுங்க.” என்று கூறினாள் தேவகி.

மாலதி சொல்ல ஆரம்பித்தாள்

“எனக்கு நன்னிலம் தாங்க சொந்த ஊரு. எங்க அப்பா அம்மா நாகப்பட்டினத்துல மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சாங்க.

என் வீட்டுக்காரர் ஒரு ஆபீஸ்ல வேலை பார்க்கிறார். என் பையன் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு படிக்கிறான்.

என் வீட்டுக்காரர் ஆபீஸ் முடிந்ததும் அப்படியே பள்ளிக்கூடத்துக்கு வந்து பையனையும் அழைச்சிட்டு வீட்டுக்கு வந்துருவார்.

நான் இப்போ நன்னிலம் போறேன். அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். போன் வந்துச்சு. என் கணவரும் கூடவரேன்னு தான் சொன்னாரு. அவங்க வருவதற்கு சாயங்காலம் ஆறு மணி ஆயிடும்.

என் கணவர் கிட்டே நான் போன் பண்ணி சொல்லிட்டேன். நான் முன்னாடியே அம்மா வீட்டுக்கு போயிடுறேன். நீங்க ஆபீஸ் முடிஞ்சதும் பையன அழைச்சிட்டு நேரா அப்படியே அங்க வந்துடுங்கன்னு சொல்லிட்டு நான் புறப்பட்டு வந்துட்டேன்.

அவங்க யார் என்னன்னு தெரியல. இதையெல்லாம் எப்படியோ தெரிஞ்சுகிட்டு பஸ்ல வந்து பிரச்சனை பண்ணுனாங்க. பஸ்ல இருந்த பெண்களும் கூட சேர்ந்துகிட்டு என்னை பேசவிடாமல் பஸ்ஸ விட்டு இறக்கி இப்படியெல்லாம் என்னைய பண்ணிட்டாங்க.

நான் பயந்து போயிட்டேன். நல்ல வேலையா தெய்வம் மாதிரி நீங்க வந்து என்னைய காப்பாத்திட்டீங்க” என்று கண்ணீர் மல்க கூறினாள் மாலதி.

“என்னைய தெய்வமுன்னு எல்லாம் சொல்லாதீங்க. நானும் அந்த பஸ்ல தான் வந்தேன். பின்னாடி உட்கார்ந்து எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருந்தேன்.

எனக்கு மனசுக்குள்ள ஏதோ ஒரு சந்தேகம். அதனால என் அப்பாவுக்கு போன் பண்ணி ஸ்கூட்டியை எடுத்துட்டு வர சொல்லி இருந்தேன். நான் இங்கே பக்கத்தில் இருக்கும் மெடிக்கலில் வேலை பார்க்கிறேன்.

என் அப்பா சரியான நேரத்துக்கு ஸ்கூட்டியோட வந்ததுனால உங்களை காப்பாத்த முடிஞ்சுச்சு என்னால.

இப்போ என் கூட வரீங்களா நன்னிலத்துல உங்களை கொண்டு போய் விட்டுட்டு வரவா?” என்று கேட்டாள் தேவகி.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா. என்னைய பஸ் ஏத்தி அனுப்பி விட்டுடுங்க. இன்னும் கொஞ்ச தூரத்தில் ஊர் வந்துரும். நான் பாத்துக்குறேன். உங்களுக்கு ரொம்ப நன்றி அம்மா” என்றாள் மாலதி.

பஸ் ஸ்டாப்பில் பஸ் வந்து நின்றது.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.