பூலாஊரணி காளியம்மன் கோவில்

சேர்மக்கனி – பொது வாழ்வின் இலக்கணம்!

சேர்மக்கனி அவர்கள் பூலாஊரணி என்னும் குக்கிராமத்தில் வாழ்ந்தாலும், பொதுவாழ்வில் தலைமைப் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.

தன்னுடைய நலனுக்காக இல்லாமல் பிறருடைய நலனுக்காக உழைப்பவர்கள் இருப்பதனாலேதான், இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்தக் கருத்திற்கு முற்றிலும் பொருத்தமாக, பொது வாழ்வில் மற்றவர்களுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர் த.சேர்மக்கனி அவர்கள்.

சேர்மக்கனி எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. அவர் எந்த அரசு பதவியையும் வகித்தவர் அல்ல.

நேரடி அரசியலில் ஈடுபடாமலும் பொது வாழ்வில் ஈடுபடலாம் என எனக்கு வழிகாட்டியவர் அவர்தான்.

அவருடைய வாழ்வும் செய்தியும் சொல்லும் சுருக்கமான கட்டுரை இது.

பூலாஊரணி

பூலாஊரணி என்பது தமிழ்நாட்டின் விருதுந‌கர் மாவட்டத்தில் சிவகாசி அருகே உள்ள சிற்றூர்.

பூலாஊரணி கிராம மக்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளைச் செய்தவர் சேர்மக்கனி.

அவர் அந்த சிற்றூரில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் ஆகிய இரு கற்கோவில்களையும் ஒரு திருமண மண்டபத்தையும் கட்ட அரும்பாடுபட்டார்.

அவர் பொது மக்களிடம் பணம் திரட்டி, அதனைக் கொண்டு பூலாஊரணி கிராமத்திற்குக் குடிநீர் திட்டம் நிறைவேற்றினார்.

ஊர்ப் பெரியவர் என்ற முறையில் நிறையப் பேருக்கு ஆலோசனை வழங்கவும் அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும் நிறைய உதவி செய்திருக்கின்றார் சேர்மக்கனி.

சிறு கடன் சேவை

இன்றைக்கு இருப்பது போல், நாற்பது வருடங்களுக்கு முன்பு வங்கிக் கிளைகள் சிவகாசி ஊரில் கிடையாது. கிராமங்களில் இருப்பவர்கள் வங்கிச் செயல்பாடுகள் பற்றி அறிந்தது மிகக் குறைவு.

இன்றைக்கு நாம் வியந்து பாராட்டும் சிறு கடன் சேவை என்பதை நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் ஊரில் சாதித்துக் காட்டினார் சேர்மக்கனி.

அவர் கிராமத்துப் பெரியவர்களுடன் இணைந்து சிறு கடன்க‌ள் வழங்கும் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிய கடனுதவி கிடைத்தது.

மேலும் சிறந்த முறையில் ஏலச்சீட்டும் நடத்தப்பட்டது. பல ஏழை மக்களின் வாழ்வில் ஏற்றம் பெற இந்த சேவைகள் மிகவும் உதவின.

கல்விச் சேவை

பல மாணவர்களுக்கு, கல்லூரிப் படிப்புக்கான செலவினை, செல்வந்தர்களிடமிருந்து திரட்டி ஆதரவு அளித்தார் அவர்.

சிவகாசி பாய்ஸ் ஸ்கூல் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு.பால்ராஜ் அவர்கள், அதற்கு மிக உதவியாக இருந்தார்கள்.

பூலாஊரணி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் வழங்கும் சேவையினை 2006ம் ஆண்டு நானும் சேர்மக்கனி அவர்களும் சேர்ந்து ஆரம்பித்தோம்.

இன்று அந்த சேவை பூலாஊரணி இளைஞர் நற்பணி மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்டு மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டு வருகின்றது.

நான் அவரிடம் கற்றவை

1. நாம் பிறந்த ஊர் என்பது நமது தாய் தந்தைக்குச் சமம் என்று அடிக்கடி என்னிடம் அவர் கூறுவார். நாம் நம் ஊருக்குச் செய்யும் சேவை என்பது, நமது தாய் தந்தைக்குச் செய்யும் சேவையே என்பது அவர் கருத்து.

2. பொது வாழ்வில் நிறைய கருத்து மோதல்கள் வரும். சூழ்நிலையை ஆழ்ந்து கவனித்து, ஒரு பிரச்சினையின் பலவித கோணங்களை ஆராய்ந்து, நமது மனசாட்சிப்படி, உண்மையுடன் தெளிவாக‌ முடிவெடுக்க வேண்டும். இதனை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

முடிவுகள் தவறலாம்; ஆனால் தலைவன் முடிவெடுக்கத் தவறக் கூடாது.

3. தைரியம் பொதுவாழ்வில் முக்கியமானது. நேர்மையும் தைரியமும் சேர்ந்தால் சாதனை பிறக்கும். அதை நேரில் கண்டவன் நான்.

4. தலைவன் என்பவன் ஆணையிடுபவனாக இல்லாமல், செயல் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொன்னவர் அவர்.

5. யார் மனதையும் புண்படுத்தாமல், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அவருடைய குணம், பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

பணம் மற்றும் அதிகாரத்தை அடைவதற்காகவே, பொது வாழ்க்கையில் பெரும்பாலோர் ஈடுபடும் காலகட்டத்தில், பிறர் நலனுக்காகவே தன்னைப் பொதுவாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டவர் சேர்மக்கனி.

நல்லவர்கள் வல்லவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் பொது வாழ்வில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் மானுட சமுதாயம் மேன்மையுறும்.

பொது வாழ்வில் சேர்மக்கனி அவர்கள் போன்ற வழிகாட்டிகளை உதாரணமாகக் கொண்டு நம்மால் முடிந்த நற்செயல்களைப் பிறருக்குச் செய்வோமாக.

வ.முனீஸ்வரன்