தண்ணீர் பற்றாக்குறை

தண்ணீர் பற்றாக்குறை இன்றைக்கு உலகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை ஆகும்.

நாம் உயிர் வாழ்வதற்கு நீர் இன்றியமையாதது என்ற உண்மை எல்லோரும் அறிந்ததே.

அத்தகைய நீரானது சுத்தமானதாக, பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உலகின் பல இடங்களில் இன்றைக்கு இல்லை என்பது மிகவும் வருந்தக்கூடிய விசயமாகும்.

நாம் வாழும் இந்த பூமியானது 70 சதவீதம் நீர்பரப்பினைக் கொண்டுள்ளது.

இந்நீர்ப்பரப்பில் நம்மால் பயன்படுத்தக்கூடிய நன்நீரானது 3 சதவீதம் மட்டுமே ஆகும்.

நன்நீரில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் பனிக்கட்டியாகவும், பனியாறாகவும் உள்ளது.

மீதமுள்ள ஒரு சதவீத நன்நீர் மட்டுமே நம்மால் பயன்படுத்தப்படுகிறது.

 

உலகில் 110 கோடி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

உலகில் சுமார் 240 கோடி மக்கள் ஓர் ஆண்டில் குறைந்தது ஒரு மாத கால அளவு தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர்.

அசுத்தமான நீரினால் உலகில் 240 கோடி மக்கள் காலரா, டைபாய்டு போன்ற நீர்தொற்று வியாதிகளால் பாதிக்கப்படுகின்றனர்.

அசுத்தமான நீரினைப் பயன்படுத்தி 20 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் இறக்கின்றனர் என உலக காட்டுயிர்கள் பாதுகாப்பு அமைப்பானது தெரிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டில் உலக மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தண்ணீர் பற்றாக்குறையினால் கடுமையாக பாதிக்கப்படுவர்.

இப்பாதிப்பு சுற்றுசூழலில் பெரும் தாக்கத்தினை உண்டாக்கி உயிர்சூழலில் கடுமையான விளைவுகளை உண்டாக்கும்.

தண்ணீர் பற்றாக்குறை என்றால் என்ன?. அது ஏற்படுவதற்குரிய காரணங்கள், தண்ணீர் பற்றாக்குறையினால் உண்டாகும் விளைவுகள், தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்வது எப்படி என்பது பற்றி இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

 

தண்ணீர் பற்றாக்குறை

ஒரு குறிப்பிட்ட பகுதியில் தண்ணீரின் தேவையானது, அவ்விடத்தில் இருக்கும் தண்ணீரின் அளவினைவிட அதிகரிக்கும்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

மேலும் சில இடங்களில் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்தும் மோசமான நீர் மேலாண்மையால் நீர் பற்றாக்குறை உண்டாகிறது.

பொதுவாக நீர் ஆதாரங்களில் நீர் இருப்பு சரிவதே தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் ஆகும்.

 

தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக் காரணங்கள்

நீர் மாசுபாடு

விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள், தொழிற்சாலை கழிவுகள், வீட்டுக்கழிவுகள், மனிதனால் ஏற்படுத்தப்படும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன.

இதனால் மேற்பரப்பு நீர் மாசடைகிறது.

நிலத்தில் ஏற்படுத்தப்படும் எண்ணெய் கசிவு, குப்பைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள், மாசடைந்த நீர்நிலைகள் நிலத்தடி நீரினை மாசடையச் செய்கின்றன.

இதனால் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீரானது பயன்படுத்த முடியாமல் அசுத்தமாகிறது.

இந்நிகழ்வுகளால் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

 

மக்கள் தொகைப் பெருக்கம்

நாளுக்குநாள் ஏற்படும் மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கத்தின் காரணமாக நன்நீரின் பயன்பாடும் அதிகரிக்கவே செய்கிறது.

இதன் காரணமாகவே மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீரானது அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப நீர்வள ஆதாரங்கள் பராமரிக்கப்பட்டு பெருகாததால் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

வேளாண்மை

வேளாண்மைக்கு அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் 60 சதவீதம் நீரானது, மோசமான பாசனமுறைகள் மற்றும் பாசன நீர் கசிவு ஆகியவற்றால் வீணாகிறது.

வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள் நீர்நிலைகளில் கலந்து, பயன்படுத்த முடியாமல் நீரினை மாசுபடுத்தி நீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றன.

 

அதிகநீர் பயன்பாடு

தொழிற்சாலைகள் மற்றும் பொறுப்பற்ற மக்களின் செயல்பாடுகள் அதிகநீர் பயன்பாட்டினை உருவாக்கும்போது நீர்வள ஆதாரங்கள் பாதிப்படைகின்றன.

பாதிப்படைந்த நீர்நிலைகளை முறையாக பராமரிக்காதபோது அதிகநீர் பயன்பாடானது பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.

 

பருவநிலை மாற்றங்கள்

சுற்றுச்சூழல் மாசுபாடு,  புவிவெப்பமடைதல், எல் நினோ, லாநினோ உள்ளிட்ட பருவநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மழைபொழிவு குறையும்போது வறட்சி உண்டாகி நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

சிலநேரங்களில் மழைப்பொழிவு அதிகமாகும்போது வெள்ளம் ஏற்பட்டு நீர்நிலைகள் உடைப்பு நிகழ்கிறது.

மேலும் வெள்ளத்தின்போது மாசடைந்த நீரினால் நன்நீர் தட்டுப்பாடு உண்டாகிறது.

 

தண்ணீர் பற்றாக்குறையின் விளைவுகள்

பஞ்சம்

தண்ணீரானது தாவர மற்றும் விலங்குகள் உயிர்வாழ இன்றியமையாதது.

உலகில் பயன்படுத்தப்படும் நீரில் 70 சதவீதம் வேளாண்மை மற்றும் பாசனத்திற்காகவும், 10 சதவீதம் மக்களாலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

நீர் பற்றாக்குறை ஏற்படும்போது தண்ணீர் இல்லாமல் உணவுப்பொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டு பஞ்சம் ஏற்படுகிறது.

கால்நடைகள் உணவு இல்லாமல் இறக்க நேரிடுகிறது.

தண்ணீர் பற்றாக்குறையினால் பசி, பட்டினி பொருளாதார இழப்பும் உண்டாகிறது.

 

சுகாதாரமின்மை

தண்ணீர் பற்றாக்குறையினால் மக்கள் அசுத்தமான, பாதிப்படைந்த நீரினை பயன்படுத்த நேரிடுகிறது.

சுகாதாரமற்ற நீரினை உணவுக்காகப் பயன்படுத்தும்போது காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நீரினால் பரவும் நோய்களால் மக்கள் அவதியுறுகின்றனர்.

அசுத்தமடைந்த நீரினை குளிக்க, துணி அலச உள்ளிட்டவற்றிக்கு உபயோகப்படுத்தும்போது சரும நோய்கள், சருமப் புற்றுநோய் ஆகியவை ஏற்படுகின்றன.

எனவே நீர் பற்றாக்குறை சுகாதாரமின்மையை உண்டாக்குகிறது.

 

பொருளாதாரப் பாதிப்பு

தண்ணீர் பற்றாக்குறையால் வேளாண்மை பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைகிறது.

நீர் பற்றாக்குறை ஏற்படும் இடங்களில் பஞ்சம் உண்டாகி கால்நடைகள் தீவனம் இன்றி இறக்க நேரிடுகிறது.

மேலும் தொழிற்சாலைகளும் நீர் பற்றாக்குறையினால் கடுமையாக பாதிப்படைந்து உற்பத்தி திறன் குறைகிறது.

எனவே தண்ணீர் பற்றாக்குறையால் எல்லா தரப்பு மக்களும் பொருளாதாரப் பாதிப்பினை சந்திக்க நேரிடுகிறது.

ஈரநிலங்கள் அழிவு

ஈரநிலங்கள் பாலூட்டிகள், பறவைகள், மீன்கள், இருவாழ்விகள் போன்றவற்றிற்கு வாழிடமாக இருக்கின்றன.

ஈரநிலங்கள் அரிசி சாகுபடிக்கு உதவுகின்றன.

மேலும் ஈரநிலங்கள் நீர் வடிகட்டுதல், புயல் பாதுகாப்பு, வெள்ளக்கட்டுப்பாடு போன்ற நமக்கு நன்மை அளிக்ககூடிய சுற்றுசூழல் சேவைகளை வழங்குகின்றன.

1900-ஆம் ஆண்டு முதல் உலகில் ஈரநிலப்பகுதிகளில் பாதி நிலங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக காட்டுயிர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரநிலங்கள் அழிந்ததற்கு தண்ணீர் தட்டுப்பாடு முக்கிய காரணமாகும். ஈரநிலங்கள் அழிவானது சுற்றுசூழலில் கடும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.

 

வாழ்வாதார இழப்பு

தண்ணீர் பற்றாக்குறையினால் இயற்கைத் தாவரங்கள், காடுகள் பாதிப்படைகின்றன.

இதனால் விலங்குகள் வாழிடங்கள், உணவு ஆகியவற்றை இழக்கின்றன.

நீர்வாழ் உயிரினங்கள் வாழிடம், உணவு இன்றி இறக்கின்றன. இதனால் சுற்றுசூழலில் உயிர்சூழ்நிலை பாதிப்படைகிறது.

 

தண்ணீர் பற்றாக்குறைக்கான தீர்வுகள்

மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், தடுப்பணைகள் அமைத்தல் போன்றவற்றின் மூலம் மழைநீரினால் உண்டாகும் மேற்பரப்பு நீரினைக் கொண்டு நிலத்தடி நீரினை செறிவூட்ட வேண்டும்.

கட்டிடங்களில் இருந்து பெறப்படும் மழைநீரினைக் கொண்டு நிலத்தடி நீரினை செறிவூட்டுவதற்கான அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

நாம் உபயோகிக்கும் நீரினை நவீன அறிவியல் முறையின் மூலம் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும்.

வேளாண்மைக்கு நீரினை பயன்படுத்தம் போது முறையான பாசன முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பாசனத்தின் போது ஏற்படும் நீர் கசிவுகளை சரிசெய்ய வேண்டும்.

கழிவுநீர் அமைப்புகளை முறையாக அமைத்தல் மேலும் கழிவுநீரை முறையாக சுத்தகரித்து வெளியேற்ற வேண்டும்.

தண்ணீரைப் பாதுகாத்து பயன்படுத்த வேண்டியது அவசியம் என்பதை எல்லோரும் அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

தண்ணீர் எல்லோருக்கும் உயிர்நீர் என்பதை எல்லோரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இயற்கையின் கொடையான தண்ணீரை அளவோடு பயன்படுத்தி வருங்கால சந்ததிக்கு பாதுகாத்து சுற்றுசூழலை மேம்படுத்துவது ஒவ்வொருவரின் கடமையாகும்.

வ.முனீஸ்வரன்

 

One Reply to “தண்ணீர் பற்றாக்குறை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.