மானிட வாழ்வினை எளிதாக்க நாம் நடைமுறையில் செய்ய வேண்டியவற்றை பற்றிக் கூறுவது தர்மசாஸ்திரம்.
பதினெட்டு முனிவர்கள் வேதங்களை முழுக்க அறிந்து கொண்டு அவற்றிலிருந்து தர்மசாஸ்திரங்களை தொகுத்துக் கொடுத்துள்ளனர்.
அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
சூரியோதயத்திற்கு முன் அதிகாலை எழுந்து காலைக் கடன்களை முடித்து பின் குளித்து தூய உடைகளை அணிந்து கடவுளைப் பிராத்திக்க வேண்டும்.
தினசரி கோவிலுக்குப் போக இயலாதவர்கள் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை போக வேண்டும்.
இறைவழிபாட்டிற்குச் சிறந்த இடம் கோவில் தான். கோவிலில் நிதானமாக நடந்து இறைவனை வணங்க வேண்டும்; வீண்பேச்சு மற்றும் பரபரப்புக் கூடாது.
இறைவழிபாட்டின் மூலம் தைரியம், மனத்தூய்மை, புலனடக்கம், தெய்வீக உணர்வு மற்றும் நேர்மை ஆகியவை உண்டாகின்றன. இறைவனின் உதவியின்றி எதுவும் எப்போதும் நடக்காது.
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தந்தை இறைவன். அவரே எல்லா உயிரிகளையும் பரிபாலிக்கிறார்.
இறைவனின் பொறுப்பில் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு, நம் கடமையை நாம் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
ஒருமனிதன் எவ்வளவுக்கெவ்வளவு நல்ல காரியத்தில் மனதினைச் செலுத்துகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு செல்வம் கிடைக்கும்.
மனிதனுக்குத் தேவை அன்பான இதயமும் அமைதியான மூளையும். சந்தர்ப்பம் வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதே வெற்றிக்கு அடிப்படை.
நாம் குறைவாகப் பேச வேண்டும்; இனிமையாகப் பேச வேண்டும்; உண்மையே பேச வேண்டும்.
புத்திசாலியின் முதல் நண்பன் பணம். நல்ல நாக்கு ஒரு சிறந்த ஆயுதம். அதை தவறான வழியில் உபயோகிக்கக் கூடாது. எல்லா உண்மைகளையும் எப்போதும் சொல்லக்கூடாது.
பிறர் நினைப்பதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. தன்னம்பிக்கை மற்றும் கால தாமதம் இன்றி எடுக்கும் முடிவு ஆகியவைதான் வெற்றியை நிர்ணயிக்கும்.
தைரியத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது. தைரியம் போனால் எல்லாம் போய்விடும்.
தோல்வி வெற்றியின் படிக்கட்டாகும். தோல்விகளைக் கண்டு அஞ்சக் கூடாது. தோல்விகள் மனதைப் பலப்படுத்தும். எதையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.
நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். ஆதலால் நாம் நினைப்பதை நல்லதாக நினைக்க வேண்டும்.
எண்ணிய எண்ணம் நிறைவேற சுயமுயற்சியும் இறையருளும் இருந்தால் எதுவும் நடக்கும்.
சுறுசுறுப்பாக இருங்கள். செல்வம் வந்தடையும். சோர்வுக்கு இடம் கொடுக்காதீர்கள். வெற்றி கிடைக்கும்.
யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். நிம்மதி கிடைக்கும். எல்லோரையும் நேசியுங்கள். சந்தோஷம் உண்டாகும். கடவுளை நம்புங்கள். நினைத்தது நடக்கும்.
பெண்கள் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து வாசல் தெளித்து கோலம் இடுங்கள். கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள்.
வீட்டில் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுங்கள். நல்லெண்ணெய் விளக்கு சிறந்தது. வீட்டு முற்றத்தில் துளசி மாடம் வைத்து வணங்குவது நல்லது.
இரவில் வீட்டைக் கூட்டினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது. பகலில் வீட்டை கூட்டினால் குப்பையை வீட்டின் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.
அக்னியை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கைகளால் பரிமாறக்கூடாது.
இந்த பொருள் இல்லை என்று சொல்லக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
எந்த காரியத்தையும் எண்ணிக் கண்ணீர் வடிக்கக் கூடாது.
சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் உள்ள இல்லத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
தயிர், அருகம்புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோவிலுக்குச் சென்று தெய்வ தரிசனம் செய்வதும் செல்வத்தைத் தரும்.
குழந்தைகளிடமும் பெரியோர்களிடமும் நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும்.
இரக்க குணம் உள்ளவர்களுக்கு இறையருள் முன்வந்து நிற்கும். அன்பு உள்ளம் கொண்டவர்களை உலகம் தலை வணங்கும். அன்பு சாதித்ததை வேறு எதுவும் சாதித்தது இல்லை.
எந்த இல்லத்தில் உபசாரம் மனப்பூர்வமாகச் செய்யப்படுகிறதோ அங்கே திருமகள் வாசம் செய்வாள்.
பசியோடு வருபவர்கள் முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.
அழகு பெண்ணுக்கு ஆயுதம். அன்பு பெண்ணுக்கு ஒரு பொக்கிஷம். அடக்கம் ஒரு அணிகலன். மௌனம் அவளை தேவதையாக்கும். உண்மையான அழகு உடலில் இல்லை. தூய்மையான, அன்புள்ள, இரக்கமுள்ள உள்ளத்தில் தான் இருக்கிறது.
தூய உள்ளம், தூய சிந்தனை, குற்றமற்ற மனசாட்சி இவை எந்த துன்பங்களையும் தாங்கிக் கொள்ளும். எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது இதயத்தின் இசை.
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது சக்தியின் பிறப்பிடம்.
விளையாட நேரம் ஒதுக்குங்கள். அது இளமையின் ரகசியம்.
படிக்க நேரம் ஒதுக்குங்கள். அது அறிவின் ஊற்று.
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் அது மகிழ்ச்சிக்கு வழி.
உழைப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் அது வெற்றியின் விலை.
உழைப்பின் மூலம்தான் செல்வம் வரும். தர்மத்தின் மூலம் தான் அது நிலைத்திருக்கும். வளர்க தர்மம்.