ஒருவரை உடல் அளவில் தாக்க ஆயுதங்கள் பல உள்ளன. ஆனால் மனதளவில் ஒருவரை தாக்க நினைக்கையில் எடுத்திடும் ஆயுதங்களில் ஒன்றாக தற்கொலை மிரட்டல் உள்ளது.
ஒரு துறையின் கீழ் ஒருவர் பணிபுரியும்போது, அது தனியார் துறையோ அரசுத் துறையோ எது வாயிருப்பினும், அத்துறையின் மேலாண்மைக்கு கட்டுப்பட்டு பணி செய்ய வேண்டும் என்பது விதி.
சில முரண்பாடுகளால் அவ்விதிகள் மீறப்படும்போது பிரச்சனைகள் எழுகின்றன.
அந்த பிரச்சனையினின்று தான் மீண்டெழவும், எதிராளியை பிரச்சினையில் சிக்க வைக்கவும் ஆயுதமாக தற்காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது தற்கொலை மிரட்டல்.
மிரட்டல் விடும் நபர் துறையின் உயரதிகாரியிடம் வேண்டுகோள் வைப்பது ஒரே வரிதான்.
“அந்த நபர் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நான் தற்கொலை செய்து கொள்வேன்.” என்பதே.
இதைக் கேட்கும் அதிகாரிகளும், மிரட்டல் விடும் நபருக்கு எதிராகப் பேசி, தான் வீணாக மாட்டிக் கொள்ளக் கூடாது என்கிற உத்வேகத்தில், பிரச்சனையின் தன்மையை மிரட்டல் விடும் நபரின் நோக்கிலேயே அலசி, சில தவறான தீர்ப்புகளை அளித்து விடுகிடுன்றனர்.
இதனால் மனஉளைச்சல் மிரட்டல் விடும் நபரிடமிருந்து எதிர் நபருக்கு மாறுதலாகுமே அன்றி பிரச்சனைக்கு முடிவு ஏற்படாது.
பெற்றோரின் அதிகப்படி கவனத்தை ஈர்க்க அடம் பிடித்திடும் குழந்தையைப் போல், அதிகாரியின் நடவடிக்கை தன்பால் சாதகமாக வளைக்கவும் தன்மீது இரக்கம் ஏற்படுத்தவும் பிரயோகிக்கும் வார்த்தையே ‘தற்கொலை செய்து கொள்வேன்’ என்பது. இதுவும் ஒருவகை மனநோய்தான்.
தற்கொலை மிரட்டல் விடும் நபரது கோரிக்கை நியாயமானதாகவே இருந்தாலும், அதற்கான வழிவகை இதுவல்ல.
அதுபோல் தன்முன் இதுபோன்ற செயலை முன்நிறுத்தி, எதிராளியை தண்டிக்க கோரிக்கை விடும் நபரின் போக்கிலேயே பிரச்சனையை ஆராயாமல், இருதரப்பு வாதத்தையும் நடுநிலையுடன் ஆராய்ந்து, கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்ற வாக்கின்படி தீர ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதே உயர் அதிகாரியின் கடமையாக இருக்க வேண்டும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
என்கிற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு நமக்கு வாழ்க்கைப் பாடமாகும்.
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி
One Reply to “தற்கொலை மிரட்டல் தற்காப்பு ஆயுதமா?”