ஒருநாள் பாடம் – சிறுகதை

ஞாயிற்றுக்கிழமை தந்த சுகத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் மாதவி.

அழைப்பு மணி சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தாள். கடிகாரத்தை பார்த்தபோது மணி பத்தாகியிருந்தது. வீறிட்ட கொட்டாவியை கையால் சொடக்கு விட்டு அடக்கியபடி எழுந்தாள்.

கதவை திறந்து பார்த்தபோது யாரும் தென்படவில்லை. தரையில் யாரோ விசிறிப் போட்ட விளம்பர இதழ் ஒன்று கிடந்தது.

“சே, நல்ல தூக்கத்தை கெடுத்து விட்டான்” முணுமுணுத்தவாறு கதவை அறைந்து சாத்தினாள்.

பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. ‘என்ன சாப்பிடலாம்?’யோசித்துக்கொண்டே பிரிட்ஜை திறந்தாள்.

மாவு ஏதும் இல்லை. வழக்கமாக ஞாயிறு அன்றைக்குதான் கிரைண்டர் அரைக்கும் வேலையை வைத்துக் கொள்வாள். எல்லாம் ராகுல் சொல்லியதுதான்.

“எங்கம்மா வேலைக்கு எல்லாம் போகல, ஆனால் நேரத்தை சரியா செலவு பண்ண தெரிஞ்சவங்க.

சமையல் வேலை பண்ணிட்டிருக்கும் போதே கிரைண்டர் வேலையையும் முடிச்சிடுவாங்க,

அதேபோல நீயும் சமையல் செய்யும்போதே முடிச்சிடு, அதுக்குன்னு தனியா நிக்க வேணாம். சரியா?”

அதேபோல்தான் செய்து வந்தாள்.

இன்னைக்கு மட்டும் விதிவிலக்காகி விட்டது. குளியலறைக்குள் சென்று பிரஷ்ஷாகி வருவதற்குள், மணி 11 ஆகி, பசியும் அதிகமாகி விட்டது.

பாலை அடுப்பில் ஏற்றி, காய்ச்சி காபி கலந்து எடுத்துக் கொண்டாள். பிரெட் சிலைஸை காபியில் தொட்டு சாப்பிட்டாள். வயிறு சற்று சமாதானமாகியது.

‘இப்போதைக்கு இது போதும். மதியம் ஏதாவது சமைத்துக் கொள்ளலாம்’ என்று எண்ணியபடி, டிவியை ஆன் செய்தாள்.

எதுவும் பார்க்க பிடிக்கவில்லை ஆதலால் செல்போனில் மூழ்கினாள். அவளை மீண்டும் உறக்கம் அணைத்துக் கொண்டது.

எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. பசியால் கதறிய வயிற்றின் சத்தத்தால் மீண்டும் உறக்கம் கலைந்தாள் மாதவி, மணி இப்பொழுது ஐந்தாகியிருந்தது.

தலைவலி ‘கிண் கிண்’ என்று தெறித்தது.

பசியால் ஏற்பட்ட தலைவலி.

‘உடனடியாக பசியை போக்க வேண்டும் அப்போதுதான் தலைவலி குறையும்’ என்று உணர்ந்து, டக்கென சுவிகியில் டிபன் ஆர்டர் போட்டாள்.

சரியாக அரைமணியில் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தபோது சடாரென அடித்து வெளுக்க துவங்கியது மழை.

உடனே கிடைக்க வேண்டிய டிபன் தாமதமாகத்தான் வந்தது.

“ஸாரி ஃபார் த டிலே மேம்” பவ்யமாக சொல்லிச் சென்றான், டெலிவரி பாய்.

‘யாரைச் சொல்லி என்ன?’ பெருமூச்செறிந்தவாறு நொந்து கொண்டாள் மாதவி.

பசி மரத்துப்போய் இப்பொழுது தலைவலி பாடாய்படுத்தியது. பார்சலை பிரித்து சாப்பிடத் துவங்கினாள்.

‘தூங்கினால் தலைவலி சரியாகி விடும்’ என்று நினைத்து சாப்பிட்டவுடன் படுக்க ஆயத்தமானாள். ஆனால் பகல் தூக்கம், இரவுத் தூக்கத்தை வரவிடாமல் தடுத்தது.

அவளின் யோசனை கடந்த ஞாயிறை நோக்கிச் சென்றது.

ராகுல், மாதவியின் முதுகில் மென்மையாக தட்டி எழுப்பினான்.

“மாதவி, எழுந்திரு; பால் காய்ச்சிட்டேன். நீ காபி கலக்குறதுதான் பாக்கி, கமான், ரெண்டு பேரும் சேர்ந்து குடிக்கலாம்.”

அலுப்புடன் எழுந்து காலைக்கடன்களை முடித்தாள் மாதவி. அதற்குள் டிபன் செய்வதற்கான முன்னேற்பாடுகளை செய்து விட்டான் ராகுல்.

காலை டிபன் முடித்த கையோடு காய்கறி வாங்க மார்க்கெட் கிளம்பி விட்டான்.

“மாது நான் வரதுக்குள்ள மதியத்திற்கு என்ன லன்ச்ன்னு முடிவு பண்ணி வை, ஓகே!”

சிறிது நேரத்தில் இரண்டு பை நிறைய காய்கறிகளை அள்ளி வந்தான். இருவருமாக சேர்ந்து அவற்றை தரம் பிரித்து பிரிட்ஜில் அடைத்தனர்.

“மதியம் என்ன செய்யலாம்னு யோசிச்சியா மாது?” கேட்டவனைப் பார்த்து தலையாட்டினாள்.

“இல்லைங்க, என் பிரெண்ட்ஸ்கிட்ட போன்ல பேசிட்டு இருந்தேன்.”

“சரி, பரவாயில்ல நான் காய்கறி எல்லாம் கட் பண்ணி கொடுத்திடறேன், சாம்பார் சாதம் செஞ்சிடு, ஓகே”

மணக்க மணக்க சாம்பார் சாதமும் அப்பளமும் வைத்து சாப்பிட்டு, உண்ட மயக்கம் கண்களை அசத்த அப்படியே உறங்கி விட்டனர் இருவரும்.

மாதவி கண்விழித்து பார்க்கையில் பக்கத்தில் ராகுல் இல்லை, செல்போனை எடுத்து பார்த்தாள். மணி ஐந்தாகியிருந்தது, உடன் ராகுல் அனுப்பிய மெஸேஜையும் பார்த்தாள்.

‘மாது, காபியும், சுண்டலும் எடுத்திட்டு மாடிக்கு வா, சின்ன வாக் போகலாம்’ என்றிருந்தது.

அலுத்துக் கொண்டே செல்போனை ஆப் செய்துவிட்டு அப்படியே படுத்துக் கிடந்தாள். அவள் வராமல் போக ராகுலே மாடியிலிருந்து இறங்கி வந்தான்.

“என்ன மாது உடம்புக்கு ஏதும் முடியலயா?” கரிசனத்துடன் விசாரித்தான்.

“ப்ச், உடம்புக்கு எல்லாம் ஒண்ணுமில்ல” என்று சலித்துக் கொண்டாள்.

“அப்புறம் என்ன? சன்டே ஈவ்னிங் வாக் வழக்கமா நாம பண்றதுதான! ஏன் வரல?” கேட்டவனை சற்று உற்றுப் பார்த்தாள் மாதவி,

“எப்ப பார்த்தாலும் டைம் டேபிள் மாதிரி வாழணுமா? இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தான! இன்னைக்கு கூட ப்ரீயா இல்லன்னா எப்படி?”

“நீ சொல்றத நான் ஒத்துக்கறேன் மாதவி, டெய்லியும் ரெண்டு பேரும் ஆபிஸூக்கு காலை 8 மணிக்கு கிளம்பி சாயந்தரம் 6மணி போலதான் வரோம்.

ஞாயிறு ஒருநாள் மட்டும்தான் ரெஸ்ட், அதுக்காக இன்னைக்கு எதுவுமே செய்யாம அப்படியே படுத்துக் கிடந்தா என்ன ஆவது?

ஞாயிற்றுக் கிழமைன்னா வயிறு பசிக்காம போகுமா? சாப்பிடாமா அப்படியே இருந்திட முடியுமா? சாப்பிட்டுத்தான ஆகணும்.

இன்னும் சொல்லப் போனா இன்னைக்கு என்ன சாப்பிடறமோ, என்ன வேலை பண்றோமோ அதுதான் அடுத்த வாரம் முழுக்க தொய்வில்லாம நம்மள கொண்டு போகும்.

அதுவும் இல்லாம இன்னைக்கு நாள் பூராவா வேலை செய்றோம்? வழக்கமான நாளைவிட தேவையான ஓய்வும், தூக்கமும் எடுத்துக்குறோம் தானே?” கேட்டவனிடம் ஆதங்கத்தைக் கொட்டினாள் மாதவி.

“என்ன வேணா சொல்லுங்க, ஞாயிற்றுக்கிழமையோட சுகத்தை நாம அனுபவிக்கணும். நினைச்ச நேரம் தூங்கி, நினைச்ச நேரம் எழுந்து, சாப்பாடு ஏதும் செய்யாம வெளிய போய் சாப்பிட்டு என்ஜாய் பண்ணணும். அதுதான் சன்டே, இப்படி இருக்க உங்களால முடியாது. என்னையும் இருக்க விட மாட்டீங்க” பேசிக்கொண்டே போனவளை இடைமறித்தான் ராகுல்.

“ஓ.கே, மாது, உன் பாய்ன்டுக்கே நான் வரேன். உன் என்ஜாய்மென்ட்ல நான் குறுக்கிடல. வர்ற சன்டே அன்னைக்கு நீ விரும்பற மாதிரி இருந்துக்கோ.

நானும் ஊருக்கு போய் அப்பா, அம்மாவை பார்த்திட்டு வரேன். ரொம்ப நாளாச்சு அவங்கள பார்த்து, ரெண்டு பேரோட ஆசையும் இந்த வாரம் நிறைவேறட்டும். அடுத்த சன்டேல இருந்து உன் வழிக்கே மாற நான் முயற்சிக்கிறேன்” என்றான்.

சொன்னவாறே ஊருக்கு கிளம்பி விட்டான் ராகுல். தூக்கமே வராமல் யோசனையுடனே படுத்துக் கிடந்தாள் மாதவி.

தலைவலியும் விட்ட பாடில்லை, ‘நாளை திங்கள் கிழமை’ என்கிற எண்ணம் வேறு அவளை பூதாகரமாக பயமுறுத்தியது.

எவ்வளவு அழகாக சொன்னான் ராகுல்.

“எல்லாருமே திங்கட்கிழமையை நினைச்சி பயப்படறதுக்கு காரணமே, சன்டே லீவ்னு அளவுக்கதிமான மகிழ்ச்சியோட அனுபவிச்சுட்டு, எதையும் திட்டமிடாம போறதுதான். அதை நீ புரிஞ்சிகிட்டன்னா இப்படி ஃபீல் பண்ண மாட்டே!”

அவன் சொன்னது எவ்வளவு உண்மை. அனுபவிக்கும்போதுதான் தெரிகிறது.

‘வேலை நாட்களைவிட விடுமுறை நாட்களில் நிதானமாகத்தான் எழுந்து கொள்வோம். ஆனால் ஒருவேளை சாப்பாடுகூட குறைவில்லாமல் கூடவே இருந்து அத்தனை ஒத்தாசைகளும் செய்வான்.

மற்ற ஆண்களை போல லீவ் நாட்களில் அங்கே இங்கே என்று சுத்தாமல், பொறுப்பாக வீட்டிற்கு தேவையான அனைத்தையும் கனகச்சிதமாக முடித்துவிடுவான்.

திங்கள் கிழமை எந்தவொரு சோர்வுமில்லாமல், அதோடு அடுத்து வரும் வேலை நாட்களையும் சிரமமில்லாமல் கடக்க ஏதுவாக இருக்கும்.

இதைப் புரிந்துகொள்ளாமல் அவனை எப்படி புண்படுத்தி விட்டோம்.’ இரவு முழுக்க தூக்கமே இல்லாமல் யோசனைகளுடனே கழிந்துபோனது.

விடிந்துதான் கண் அயர்ந்தாள். அழைப்பு மணி கேட்டு அரக்க பரக்க எழுந்தாள்.

வெளியே ராகுல் கையில் பெரிய பையுடன், முகத்தில் அதைவிட பெரிய புன்னகையுடன் நின்றிருந்தான்.

“என்ன என்ஜாய் பண்ணினியா? முகம் எல்லாம் என்ன இப்படி வீங்கியிருக்கு?” கரிசனத்துடன் கேட்க, கண்ணீரை அவனுக்கு காட்டாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள் மாதவி.

“முதல்ல உள்ள வாங்க” என்று கூறி விட்டுப் போனாள்,

பின்னாலயே நுழைந்த ராகுல் “ஏன் குரல் ஒரு மாதிரியிருக்கு. என்னாச்சு, மணி, ஏழாகப் போகுது இன்னும் நீ ஆபிஸூக்கு கிளம்பலயா?” படபடத்தான் ராகுல்.

“இனிமேதான் கிளம்பணும், நைட் சரியா தூங்கல, தலைவலி, அதோட நேத்து சரியா சாப்பிடல, எல்லாம் சேர்ந்து ஒரு மாதிரியாயிடிச்சி, எதுவுமே வேற சமைக்கல.”

“இப்ப உனக்கு எப்படி இருக்கு மாது? ஆபிஸூக்கு வேணா இன்னைக்கு லீவ் சொல்லிடறியா? டிபன், லன்ச் எல்லாம் அம்மா கொடுத்து விட்டிருக்காங்க. சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடு. நான் மட்டும் ஆபிஸூக்கு கிளம்பறேன். ஓ.கே” என்றான்.

தலையாட்டி மறுத்தாள், மாதவி, “இல்லைங்க, நானும் கிளம்பறேன் ஆபிஸூக்கு. தேவையான ரெஸ்ட்தான் எடுக்கணும். அளவுக்குமீறி எடுத்தா என்னாகும்னு நேத்து ஒரே நாள்ல நல்லா புரிஞ்சிக்கிட்டேன்.

நீங்க இதுவரைக்கும் செய்தத எல்லாம் டைம் டேபிளா மட்டும்தான் பார்த்தேன். அதுல எவ்வளவு வாழ்க்கைப் பாடம் இருக்குங்கிறது இப்பதான் புரியது.

உங்களுக்கு ஸாரி சொல்றதவிட தேங்ஸ் சொல்றதுதான் ரொம்ப உசிதமா இருக்கும்.”

“ஏய், என்ன? இப்படி எல்லாம் பேசற, வழக்கமா நீ இப்படி பேசற ஆளே இல்லயே, ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா? ஆச்சர்யமா இருக்கு,”

“இனிமே நிறைய ஆச்சர்யங்கள் உங்களுக்கு காத்துகிட்டு இருக்கு” சொல்லிவிட்டு சிரித்தவளோடு தானும் இணைந்து சிரித்தான் ராகுல்.

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி

2 Replies to “ஒருநாள் பாடம் – சிறுகதை”

  1. இன்றைய வாழ்க்கை முறையில், இளம் தம்பதிகள் வாழ்கை புரிதல் இன்றி, தன்வேலையை செய்யக்கூட எரிச்சல் படும் மனம் கொண்டவர்களாக இருக்கின்றனர். சுகமாக வாழ்வதே வாழ்க்கை என்ற எண்ணம் கொண்டவர்கள், தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் அரும் கதை.

    ஒருநாள் பாடம் சிறுகதை படைப்பாளருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.