குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைவிட மிகச்சிறந்த ஓர் உணவு இருக்க முடியாது. அதிக சத்து மிகுந்த பாலாக தாய்ப்பால் இருப்பதால் நோய்கள் அணுகாதபடி அது குழந்தைகளைப் பாதுகாக்கிறது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் உடலால் மட்டுமின்றி உள்ளத்தாலும் ஆரோக்கியமாக இருக்கும். பாட்டில் பாலை விட தாய்ப்பால் சத்துமிக்க சிறந்த உணவு என மருத்துவரீதியாகவும், பரிசோதனை வாயிலாகவும் இதர ஆய்வுகளாலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வைட்டமின் சொட்டு மருந்து தேவையில்லை. மேலும் அலர்ஜி என்று சொல்லப்படுகிற ஒவ்வாமை, ஆஸ்துமா, எக்ஸிமா, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் போன்றவைகளும் தோன்றுவதில்லை. ஆனால், பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்நோய்கள் சுலபமாகத் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.
தாய்ப்பால் மலிவான விலையைக் கொண்டது. ஒரு தாயானவள் தாய்ப்பால் சுரப்பதற்காக சத்துமிக்க உணவை உட்கொள்ள சராசரியாக மாதம் ஐம்பது ரூபாய் மட்டுமே செலவழித்தால் போதுமானது. அதே சமயம் மற்றவகைப் பால்களுக்கு ரூ.1,000 வரை அல்லது அதற்கு மேல்கூட செலவழிக்க வேண்டிவரும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பு கரைகிறது; உடல் கட்டுக்கோப்புடன் திகழ்கிறது.
அனைத்தையும் விட, தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கும், குடிக்கும் குழந்தைக்கும் கிடைக்கும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஓரு கோடிக்கும் மேல் ஏற்படும் சிசு மரணங்களை தாய்ப்பால் கொடுப்பதின் மூலம் நிறுத்த முடியும். பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகள் எண்ணற்ற வியாதிகளுக்கு ஆளாகிறார்கள் என்பது குழந்தை மருத்துவ நிபுணர்களின் கணிப்பு.
எனவே தாய்மார்களே! ‘அழகு கெட்டு விடும்’ என்கிற ஒருவித தவறான எண்ணத்தை உடனடியாகக் கைவிட்டு உங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
மறுமொழி இடவும்