துணிச்சல் எப்போது வரும்?

சதுப்புநிலக் காடுகள்

சிறுவன் ஒருவனை அழைத்துக்கொண்டு அவன் தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அங்கு மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.

“மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய்” என்றார்.

“இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது” என்றார்.

சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார்.

பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது.

அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.

மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது.

‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான்; பயனில்லை.

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.

திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல்.

என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான்.

இப்படியே இரவு கழிந்தது.

விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான்.

சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான்.

கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ”நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார்.

இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.

நல்ல ஆன்மீக சிந்தனையை தூண்டும் தன்னம்பிக்கையுடன் இறை நம்பிக்கையூட்டும் அற்புதமான கதை!

Comments

“துணிச்சல் எப்போது வரும்?” அதற்கு 3 மறுமொழிகள்

  1. Kumaresan

    Realy super

  2. Gowtham

    பயத்தின் உச்சம் துணிச்சல்!
    ஆன்மீக சிந்தனையை தூண்டும் பதிவிற்கு நன்றி!!

  3. SWAMINATHAN THIRUVENGADAM

    when we go beyond the limit we dont bother about anything. educated people are afraid of everything. uneducated behave rudely. honest people not afraid of anyone.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.