நான் நிகழ்காலத்தில் வாழ விழைகின்றேன்
நிகழ்காலத்தில் வாழ விழைகையில்
நான் இதுவரை என்னவாக இருந்தேன்
என நினைக்க வேண்டி
எனது கடந்த காலத்திற்கு
பயணிக்க தள்ளப்படுகிறேன்
என் நிகழ்காலம் என்னை
கடந்த காலத்திற்கு இட்டு செல்கிறது
நடந்தவைகள் நல்லவைகள்
வெட்கப்பட வேண்டியவைகள்
இனப் பற்று- இல்லை இல்லை
இன வெறி
பாட்டாளி மக்களின் வல்லாட்சி
உன்னத சமுதாயம்
கொலை வெறி கொல்லாட்சி
மூளையில்லா கொடுங்கோண்மை
எல்லாம் வந்து வந்து
என்னால் நிகழ் காலத்தில்
கடந்த காலமில்லா
நிகழ்காலத்தில்
இருக்க முடியவில்லை
கடந்ததை மறக்க
நிகழ்காலத்தை வாழ
நிகழ்காலத்தில் மட்டும் வாழ
என்னை நான் இழுத்து வரும்போது
நான் தள்ளப்படுகிறேன்
எதிர்காலத்திற்கு
கடந்த காலத்தின்
விளைவுகளும்
வருங்காலமும்
என்னை நிகழ்காலத்தில்
இருக்க விடவில்லை
இருக்க முடியவில்லை.
நான் குதர்க்கம்
பேசக் கற்றுக்கொண்டுள்ளேன்
எனக்குத் தெரிய வேண்டும்
என் பெற்றோரின் பெற்றோரின் பெற்றோர் யாரென்று
எனது கடந்த காலம்
என்னவாக இருந்தது
என்னவாக இல்லை
என்னவாக ஏனில்லை
நான் பிறந்தாக நான் நினைத்ததுக் கொள்ளும்
என் இனம்
எனது விருப்பு வெறுப்புகள்
எனது ஆடை அலங்காரங்கள்
எனக்கு கிடைத்த சொத்தான
எனது கோபம், காமம், அழுகை
எனது சொல்லப்படாத நினைவுகள்
மிகைப் படுத்தப்பட்ட நினைவுகள்
எனக்குத்தெரிய வேண்டும்
நான் என்னவாக
இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து இருப்பேன்
என்றும் எனக்குத் தெரிந்தாக வேண்டும்
இவையெல்லாம்
நான் நிகழ்காலத்தில் வாழ்வதற்கு
நான் நானாக வாழ
நான் என் இனமாக வாழ
மற்ற இனங்களும் வாழ
அல்லது அவைகளை வாழ விடாமல் இருக்க
எனக்குப் புரிந்து விட்டது
நிகழ்காலம் என்று ஒன்று இல்லை
இருப்பது
கடந்த நினைவுகளின் காலம்!
வாழப் போகின்ற எதிர்காலத்தின்
திட்டமிடல்!
பிறகு
இல்லாத நிகழ்காலத்தில்
எப்படி வாழ முடியும்?
Dr. இராமானுஜம் மேகநாதன்
பேராசிரியர் (மொழிக்கல்வி)
மொழிக் கல்வித் துறை
தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்
புதுதில்லி 110016
கைபேசி: 09968651815
மின்னஞ்சல்: rama_meganathan@yahoo.com