2ஏ பூந்தோட்டம் செல்லும் டவுன் பஸ் வந்து நின்றது.
பஸ்ஸின் பின்புறம் வழியாக மீன் கூடைகள் எல்லாம் இறக்கியபின் பூபதியும் கீழே இறங்க, பாபு தன் லோடு சைக்கிளை அருகே கொண்டு வந்தான்.
மீன் கூடையை ஏற்றி வைத்து சைக்கிளை பாபு தள்ள, பூபதி கூடையைப் பிடித்துக் கொண்டதும் இருவரும் நடந்தனர்.
கடைத்தெருவில் தூங்குமூஞ்சி மரத்தடி வந்ததும் பூபதி மீன் கூடையை இறக்கி வைத்த போது ஊரிலிருந்த பெரியவீட்டுப் பெண்கள் சுற்றி வளைத்தனர்.
பாபு சைக்கிளை ஸ்டாண்ட் செய்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
பூபதி கூடையை திறந்ததும் மேலே இருந்த 200 ரூபாய் மதிப்புள்ள போத்தல் மீனை அரக்க பரக்க எடுத்து கோரையினால் ஆன கூடைக்குள் ஒளித்து மூடி வைத்துவிட்டு வியாபாரத்தை தொடர ஆரம்பித்தார்.
இதை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் “அது என்ன? அந்த மீன மட்டும் ஏன் தனியா எடுத்து ஒளிச்சு வைக்கிற? நாங்களும் காசு தானே தரோம். அந்த மீனு தான் வேணும்” என்று சண்டை இட்டார்.
அப்போது பூபதி “இத ஏற்கனவே ஒருத்தவங்களுக்கு வித்தாச்சு. நீங்க வேற மீனைப் பாருங்க” என்று சொன்னார்.
“அது எப்படி? நீ இப்பதான் கூடயே கொண்டாந்து இறக்கி வைக்கிற. அதுக்குள்ள யாரு காசு கொடுத்தா?” என்று சண்டையிட, இன்னும் இரண்டு பேரும் அவருடன் சேர்ந்து கத்த ஆரம்பித்தார்கள்.
பூபதி அக்கா எவ்வளதோ சொல்லிப் பார்த்தும் அவர்கள் கேட்க கேட்கவில்லை.
முதல் வியாபாரம் ஆனதோ இல்லையோ பூபதி அக்கா அரக்க பரக்க அந்த மீனை கையில் எடுத்து என் கையில் கொடுத்து, “தம்பி இத முதல்ல போயி உன் வீட்டுல கொடுத்துட்டு வா. இல்லேன்னா இவங்க எல்லாம் என்ன சும்மா விடமாட்டாங்க. சீக்கிரம் கிளம்பு கிளம்பு” என்று என்னை விரட்டிவிட்டார்.
நானும் சைக்கிளில் வேக வேகமாக சென்று வீட்டில் கொடுத்துவிட்டு திரும்பி வரும்போது ஒரு பார்சல் டீ இரண்டு கப்பும் வாங்கி வந்தேன்.
அதற்குள் சண்டை ஓய்ந்து, பெரிய பெரிய தலை கட்டுகள் முனங்கி கொண்டு அடுத்து இருக்கும் மீன்களை பொறுக்கிப் பார்த்து அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்கள்.
மீன் கூடை பாதி கூடையாக ஆகிபோது நாங்கள் இருவரும் சேர்ந்து டீ குடித்தோம்.
ஒரு மணி நேரத்திற்குள் எல்லா மீன்களும் விற்று விட்டன. ஏனென்றால் அவற்றை ‘வலை மீன்‘ என்பார்கள்.
பூபதி அக்காவுக்கு நாகூர் தான் சொந்த ஊர்.
நாகூர் கடற்கரையில் காலை 8.30.மணிக்கெல்லாம் சிறுசிறு கட்டுமரம், படகு எல்லாம் கரைக்கு வந்துவிடும். வலையில் இருந்து மீனை அப்போதுதான் எடுப்பார்கள்.
அம்மீன்களை கடல் மணலில் ஓரத்தில் கொட்டி குவித்து வைத்து அப்படியே ஏலம் விடுவார்கள். அந்த மீனை வாங்க சிறுசிறு வியாபாரிகள் கூட்டம் அலை மோதி கொண்டிருக்கும்.
அதில் பூபதி அக்காவும் ஒன்று. அப்படி உயிர் மீன்களை வாங்கிக் கொண்டு வியாபாரிகள் அவரவர் ஊர்களுக்கு வியாபாரத்துக்கு செல்வார்கள்.
மீன்களில் ஒருதுளி ஐஸ் கூட இருக்காது. கடல் மண்தான் அந்த மீன்களில் ஒட்டி இருக்கும். அதற்குப் பெயர்தான் வலை மீன்.
பூந்தோட்டத்தில் பூபதி அக்கா மீன் கூடையை எதிர்பார்த்து மக்கள் காத்திருப்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது அடிக்கடி நடப்பது தான்.
நான் சமையல் மாஸ்டர். எனக்கு சமையல் வேலை இருக்கும் சமயங்களில் சமையலுக்குச் சென்று விடுவேன். இல்லையென்றால் மற்ற நேரங்களில் பூபதி அக்காவுக்கு உதவியாக இருப்பேன்.
பூபதி அக்காவுக்கு என் மேல் பாசம் அதிகம். அக்கா இருந்த வரையில் நான் ஒருநாள் கூட காசு கொடுத்து மீன் வாங்கியதே கிடையாது. மீனுக்கு காசு கொடுத்தால் அவர் என்னுடன் சண்டை போடுவார். உரிமையுடன் ‘தம்பி தம்பி’ என்று பேசுவார்.
பூபதி அக்காவிற்கு எப்போதாவது மீன் வாங்க பணம், காசு தேவைப்பட்டால் நானும் அவ்வப்போது கொடுப்பேன்.
நாணயக்கார பொண்மணி. மறுநாள் பணம் தருவதாகச் சொன்னால் சொன்ன மாதிரி மறுநாள் கண்டிப்பா பணத்தைக் கொடுத்து விடுவார். பூபதி அக்காவுக்கு மூன்று குழந்தைகள்.
வருடங்கள் ஓடின.
ஒருநாள் பூபதி அக்கா என்னிடம் “பாபு தம்பி! ஒன்னும் இல்ல. என் மகன் சரபோஜி மாலை போட்டு இருக்கான் தம்பி. அவன் மலைக்கு போறதுக்கு என்கிட்ட காசு இல்ல. கையில வெறும் 3000 தான் இருக்குது. என்ன பண்றதுனே தெரியல” என்றார்.
“அதனால் என்ன அக்கா! உனக்கு இப்போ எவ்வளவு பணம் வேணும் சொல்லு. என்னால முடிஞ்சத நான் தரேன்” என்றேன் நான்.
“மலைக்கு போறதுன்னா 8000 ரூபாய் ஆகும் தம்பி. என்கிட்ட 3000 ரூபாய் இருக்கு. இன்னும் ஒரு 5000 வேணும் தம்பி.”
“அதனால என்னக்கா கவலப்படாத. நீ ஊருக்கு போயிட்டு நாளைக்கு காலையில வா” என்று அனுப்பி வைத்தேன்.
மறுநாள் காலை பூபதி அக்கா வியாபாரத்திற்கு வந்தபோது நான் வீட்டில் வைத்திருந்த பணத்தையும் என்னிடம் இருந்த பணத்தையும் தடவி சேர்த்து போட்டு 4000 ரூபாய் தேற அதை அக்கா கையில் கொடுத்தேன்.
பூபதி அக்காவுக்கு ஒரே சந்தோஷம். “இது போதும் தம்பி நான் மேலே பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
சரபோஜி மலையிலிருந்து திரும்பிய மறுநாள் பூபதி அக்கா பஞ்சாமிர்தம், நேந்திரம் சிப்ஸ், கட்டி கல்கண்டு என்று மலையிலிருந்து வந்ததை எனக்கு கொண்டு வந்து கொடுத்தார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ஒரே மேக மூட்டமாகவே இருந்தது. நான் தாராசுரம் கல்யாணத்துக்கு சமையல் வேலைக்கு சென்று இருந்தேன்.
காலை 9.30.மணி ஆனபோது கல்யாண வீட்டிலே ஒரே கூச்சலும் குழப்பமும் ஆக இருந்தது. என்னவென்று விசாரித்தேன். “
சுனாமி வந்துருச்சாம்” என்றார்கள்.
‘சுனாமி’ என்ற வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் புரிவதற்குள் ஒரு சிலர் திட்டச்சேரி, திருமருகல் தாண்டி ஏனங்குடி வரைக்கும் கடல் தண்ணீர் வந்து விட்டதாம் என்று சொல்ல, எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
‘வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் என்ன ஆனார்களோ?’ என்ற பதட்டத்தில் நானும் இருக்க, கல்யாணத்திற்கு சமைத்த சாப்பாடும் அப்படி அப்படியே இருந்தது.
யாருக்குத்தான் இந்த நிலையில் சாப்பிட மனது வரும்?
மண்டபத்தில் இருந்து முதலில் பெண்வீட்டார் வேன் கிளம்பியது. அதில் நானும் ஏறிக்கொண்டு திட்டச்சேரி வந்து இறங்கினேன்.
அங்கிருந்தவர்கள் சொன்னது போல் ஒன்றும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்ற நான் எல்லோரையும் விசாரித்து விட்டு என் சைக்கிளை எடுத்துக் கொண்டு நாகூர் புறப்பட்டேன்.
நாகூர் பாலத்தடி வரை தண்ணி வந்து திரும்பி இருந்தது. திரும்பிய பக்கம் எல்லாம் ஒரே மக்கள் கூட்டம். நாகூரே அல்லல் பட்டுப் போய் இருக்க, ஒவ்வொரு மண்டபம், பள்ளிக்கூடம், சமுதாயக்கூடம் என்று பூபதி அக்காவைத் தேடி நான் சென்றேன்.
அப்போது எதிரே ‘அஞ்சுமணி’ என்ற மீன்காரக்கா கண்ணில் பட்டார்.
“என்னக்கா! என்ன ஆச்சு?
எப்படி இது நடந்தது?
பூபதி அக்கா எல்லாம் எங்க இருக்காங்க?” என்று கேட்டேன்.
அஞ்சுமணி அக்கா அழுது கொண்டே “காலையில ஒரு 8:30 மணி இருக்கும் தம்பி. எல்லாரும் மீன் வாங்க கடற்கரைக்கு போயிருந்தாங்க. நான் இன்னைக்கு மீன் வாங்க போகல. பூபதியும் அங்க தான் போயிருந்தா.
ஒரு அலை ரெண்டு தென்னை மரம் உயரத்துக்கு வந்திருக்கு தம்பி. அப்படியே போட்டு அமுக்கிடுச்சு. போனவங்க ஒருத்தர் கூட மிஞ்சல. என்ன ஆனாங்கன்னு தெரியல. எல்லாரும் தேடிக்கிட்டு இருக்காங்க.
நீங்க நல்லா இருக்கீங்களா தம்பி?
பூபதியோட சின்ன பசங்க ரெண்டு இந்த மண்டபத்துல இருக்குதுங்க. அம்மாவையும் அப்பாவையும் அண்ணனையும் காணமுன்னு அழுகுதுங்க. கொஞ்சம் அழைச்சிட்டு போயி உங்க வீட்டில வச்சுக்கறீங்களா?” என்று கூறினார் .
எனக்கு சொல்லவும் முடியல. மெல்லவும் முடியல. யார எங்க போயி தேடுறதுன்னு புரியல!
பூபதி அக்காளின் பிள்ளைகள் இரண்டையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
என் அம்மாவும் அப்பாவும் பிள்ளைகளை நல்ல விதமாக பார்த்துக் கொண்டார்கள். இருந்தாலும் தாயைக் காணாத குழந்தைகள் அழுது கொண்டே இருந்தன.
இரண்டு நாட்கள் கழித்து பூபதி அக்காவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை கடற்கரையிலேயே ஜே.சி.பி.ஐ வைத்து தோண்டி அனைவரையும் ஒன்றாக புதைத்தார்கள்.
நான்கைந்து நாட்களுக்குப் பிறகு அமைதி திரும்பியதும் பூபதி அக்காவின் கணவனும் மூத்த மகனும் வீட்டிற்கு வந்தார்கள். குழந்தைகள் ஓடி கட்டிப் பிடித்துக் கொண்டன.
பூபதி அக்காவின் மூத்த மகன் சரபோஜி “அண்ணா! அம்மா எங்களையெல்லாம் விட்டுட்டு போயிடுச்சுன்னா” என்று அழுதான்.
என்னால் முடிந்த ஆறுதலை அவனுக்குச் சொன்னேன்.
“அண்ணா நான் மலைக்கு போக, யார் யார்கிட்டையோ கடன் வாங்குனதா அம்மா சொல்லுச்சுன்னா கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க. நான் கொடுத்துடுறேன்” என்று சொன்னான் சரபோஜி.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. யாருக்கும் கடன் தர வேண்டியது எல்லாம் இல்லை. அம்மா கொடுத்துட்டு தான் போச்சு” என்று சொல்லி வழி அனுப்பி வைத்தேன்.
நினைத்தால் இன்றும் என் கண்கள் கலங்குகின்றன.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!