புகைச்சலை
மறைக்கப் பார்க்கிறாய்
அது
எரிந்து கொண்டிருப்பது தெரியாமல்…
மடியில்
நெருப்பை அள்ளி
முடிந்து கொள்ளும்போது தெரிகிறது
எனக்குத் தெரிந்து விடக்கூடாதென்கிற பதற்றம்…
குளத்து நீரில்
மூழ்கியெழுந்து பார்க்கிறாய்
தலைப்பாகையிலோ கூந்தலிலோ
முடிந்து கொள்ள முடியாமல்
அவஸ்தையைப் படுவதைக்
காணமாட்டாமல்
ஒழுகி வழியும் நனைந்த நீரும்
ஒழுகி வழிந்து அழுவது தெரிகிறதா உனக்கு…
பூமியைச் சுருட்டி அக்குளில் ஒளித்து
ஒளிந்து கொள்ளவும் தெரியவில்லை
பாதாளத்தில்…
ஆகாயத்தை மடித்து
சட்டைப் பையில் வைத்துக் கொண்டதாக
நினைக்கிறாய்
உன்னை நீ ஏமாற்றிக் கொள்வதை
அறியாமல்…
நட்சத்திரங்களைக் குவித்து
சாக்குப் பையில் கட்டி
எந்த கிரகத்தில் வாழ போகிறாய்…
இரவையும் பகலையும்
உன்னிரு கண்களில் விழுங்கி கொள்ள
என்னமாய் முயற்சிக்கிறாய்…
உன்னை நீயே மறைத்துக் கொள்ள முடியாத போது
ஏமாற்றவும் தலைமை தாங்கவும்
உன்னை மீறி மட்டுமல்ல
என்னை மீறியும் கூட
ஆற்றிவிட முடியாது எதுவும்
ஏனெனில் நீதானே நானாக இருக்கிறேன்…
கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!