மழைத்துளி – நீருடன் ஓர் உரையாடல் 1

பேருந்தில் இருந்து இறங்கியவுடன், எனது நடையில் வேகத்தைக் கூட்டினேன். காரணம், மழை மேகங்கள் படையெடுத்து பெருமழைப் பொழிவிற்கான சமிக்ஞையை தந்து கொண்டிருந்தன.

சில மீட்டர் தூரம் கடந்தவுடன் ‘டொக்கென’ தலையில் ஏதோ விழுந்தது. மேல் நோக்கிப் பார்க்க, சில மழைத்துளி எனது முகத்தில் ‘டொக் டொக்கென’ விழுந்தது.

உடனே கைக்குட்டையை எடுத்து எனது தலையில் விரித்துப் பிடித்தேன்; நடப்பதும் ஓடுவதுமாக இருந்தேன். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மழைப் பொழிவு அதிகமாயிற்று. சடுதியில் மழையின் வேகமும் வெகுவாகக் கூடிற்று.

சற்று தூரத்தில் ஒரு கட்டிடம் இருந்ததைக் கண்டேன். உடனே ஓடிச் சென்று அங்கிருந்த மதில் சுவரின் அருகில் ஒதுங்கி நின்று கொண்டேன். மேலே கல்நார் (asbestos) தகடாலான மேற்கூரை போடப்பட்டிருந்தது. மழைக்கு ஒதுங்க பாதுகாப்பானதாகவே அவ்விடம் இருந்தது. அதனால் மழை நீரில் நான் நனையவில்லை.

அப்பொழுது தலையில் இருந்த கைகுட்டையை எடுத்துப் பார்க்க, அது முழுவதும் மழைநீரில் நனைந்து பொத பொதவென இருந்தது. எனது வலது கையால் அந்தக் கைகுட்டையை வலுவாக பிழிய, அதிலிருந்து கருமை நிறத்தில் நீர் வெளியேறியது.

நிச்சயமாக மழை நீர் தூய்மையானது தான். நிறமற்ற நீர் கருமையாக வெளியேறியதற்கு காரணம், கைகுட்டையால் அடிக்கடி முகம் துடைக்கப்பட்ட பொழுது அதில் படிந்த வியர்வையே. எது எப்படியோ இப்பொழுது எனது கைக்குட்டை ஓரளவிற்குத் தூய்மையாகி விட்டது.

பின்னர் எனது தலையை லேசாக தொட்டுப் பார்க்க, நீர் அவ்வளவாக இல்லை. ‘நல்ல வேள, தலை நனையல’ என்று எண்ணி நிம்மதி அடைந்தேன்.

அப்பொழுது மழை ஊற்றிக் கொண்டிருந்தது. சில அடிகளுக்கு அப்பால் இருக்கும் எதுவும் எனது கண்களுக்குப் புலப்படவில்லை. பெருமழையின் இரைச்சல் அதிகமாகவே இருந்தது.

“குடைய எடுத்துக்கிட்டு போப்பா” என்று காலையில் நான் கிளம்பும் பொழுது அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது.

‘மேகமூட்டம் லேசா தானே இருக்கு, மழையா வரப்போகுது’ என்று நினைத்ததால், அம்மாவின் வார்த்தைகளை அலட்சியப்படுத்திவிட்டு வந்ததும் நினைவிற்கு வந்தது.

அடுத்து, ‘பெரியவங்க சொன்னா கேட்கனும்’ என்ற சொற்றொடரும் நினைவிற்கு வரவே, ‘ச்சே, அம்மா குடைய கையில கொடுத்தாங்க; வேணாமுன்னு சொல்லிட்டு வந்தது தப்பா போச்சே’ என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்.

சிலநிமிடங்கள் சென்றன. மேற்கூரையில் இருந்த ஏதோ ஒரு துவாரத்தின் வழியே மழைத்துளி உள்நுழைந்து என் மீது விழுந்தது.

‘அடடா… இங்க மழை தண்ணி சொட்டுதா?’ என்று எண்ணியவாறே கூரையைப் பார்த்தேன். சீரான வேகத்தில் மழைத்துளிகள் கூரையின் இடுக்கிலிருந்து விழத் துவங்கின.

எனது மனம் அந்த மழைத்துளிகளின் மீது சென்றது. கூரையில் முத்து முத்தாக மழை நீர் சேர்ந்து அளவில் பெரிதாகி, பின் புவி ஈர்ப்பு விசையால் அவை கீழ் நோக்கி வந்தன.

மழைத்துளி ஒவ்வொன்றும் ஒருவிதமான கோள வடிவத்தில் இருந்த‌து; மேற்பகுதி கூம்புவடிவாகவும், கீழ்ப்பகுதி கோள வடிவிலும் இருந்தது. அதாவது கண்ணீர் துளியின் வடிவத்தை சொல்லலாம்.

இவற்றை எண்ணும் பொழுது இயற்கை அறிவியலின் உன்னதத்தை நினைத்து மகிழ்ந்தேன். மழைத்துளி வடிவம் உருளையாகவோ, செவ்வகமாகவோ அல்லது முக்கோணமாகவோ இருப்பதில்லையையே.

எல்லா நீர்த் துளிகளும் மேலிருந்து கீழ் வர கோள வடிவத்தைத் தான் பெருகின்றன. அதற்கு காரணம் நீரின் மீது செயல்படும் பரப்பு இழுவிசை தானே.

பரப்பு இழுவிசைக்கு காரணம் நீர் மூலக்கூறுகளுக்கு இடையிலான ஹைட்ரஜன் பிணைப்புகள் தான்.

அதாவது, ஒரு குவளையில் நீர் இருக்கிறது. நீரின் உட்பகுதியில் இருக்கும் ஒரு நீர் மூலக்கூறு மற்ற எல்லா மூலக்கூறுகளாலும் எல்லாத் திசைகளிலும் சமமாக இழுக்கப்படுகிறது. இதனால் நிகர விசை பூஜ்ஜியம் ஆவதால், அந்த நீர் மூலக்கூறு நகருவதில்லை.

ஒரு பொருளை நான்கு புறமும் கயிற்றால் கட்டி சமமாக இழுத்தால், அந்தப் பொருள் எத்திசையிலும் நகருவதில்லையே! அது மாதிரித்தான் உட்குதியில் இருக்கும் நீர் மூலக்கூறுகளும்.

ஆனால் குவளை நீரின் மேற்பரப்பில் இருக்கும் நீர் மூலக்கூறுகள் உள்நோக்கி இருக்கும் மூலக்கூறுகளால் மட்டுமே இழுக்கப்படுகின்றன. அவற்றை மேல்நோக்கி இழுக்க நீர் மூலக்கூறுகள் இல்லாததால், நீரின் மேற்பரபரப்பில் ஒருவித இறுக்கம் ஏற்படுகிறது. இதனைப் பரப்பு இழுவிசை என்று அறிவியலில் சொல்கிறார்கள்.

அத்தோடு, ஹைட்ரஜன் பிணைப்புகளால் தான் நீர் திரவநிலையில் இருக்கிறது என்ற அறிவியல் உண்மையை நினைக்கும் பொழுதே அகம் மகிழ்ந்தது.

அப்பொழுது,

“என்ன சார், ரொம்ப சிந்திக்கிற மாதிரி இருக்கு?” என ஒரு குரல் ஒலி கேட்டது.

திரும்பி திரும்பிப் பார்க்க அருகில் யாரும் இல்லை. நான் மட்டும் தான் அங்கு நின்றுக் கொண்டிருந்தேன்.

மறுபடியும் “சார் பயப்படாதீங்க; இங்க பாருங்க” என குரல் ஒலி கேட்டது.

திகைத்தேன்; உடல் சிலிர்த்தது. “யாரு? யாரு பேசுவது” என்று அச்சத்துடனே கேட்டேன்.

“சார் பயப்படாதீங்க; நான் தான் நீர் பேசுகிறேன்” என்றது அந்தக் குரல்.

“என்னது? நீரா?”

“ஆமா சார், நீர் தான் பேசுகிறேன்”

“அதிசயமா இருக்கே; நீரே! நீ கூட பேசுவியா? என்னால் சுத்தமா நம்ப முடியல.”

“எனக்கும் தான் ஆச்சரியமா இருக்கு. நான் பேசுவது உங்களுக்கு மட்டும் கேட்குதே”

மீண்டும் “உண்மையா சொல்லு. நீர்தான் பேசுவதா?” என்று கேட்டேன்.

“அடடா, இன்னும் நீங்க ஆச்சரியத்துல இருந்து மீளல போல. நான் நீர் தான் பேசுகிறேன் நம்புங்க”

“சரி, உனக்கு என்ன வேணும்?” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.

“எனக்கு எதுவும் வேணாம் சார். நீங்க என்னையே பார்த்துக்கிட்டு இருந்தீங்க. அதான் உங்ககிட்ட பேச்சுக் கொடுக்கலாமுன்னு முயற்சி பண்ணேன். அதிசயமா, நான் பேசுவதும் உங்களுக்கு மட்டும் கேட்டுடுச்சு”

நான் எனது பயத்தைத் தணித்துக் கொண்டேன்.

“நல்லது தான், நீ நல்லா இருக்கியா?” என்றேன்.

“ஊம்ம், நான் நல்லாதான் இருக்கேன். எனக்கு என்ன? நீங்க தான், பாவம் வீட்டுக்குப் போக முடியாம இங்கேயே நிக்குறீங்க போல”

“பரவால்ல… எப்பவாச்சும் தானே இப்படி ஆகுது. ஆனா நீ இல்லாம உலகம் இருக்க முடியுமா என்ன?”

“அப்படியா? அந்த அளவுக்கா நான் முக்கியம்”

“என்ன இப்படி சொல்லிட்ட; நீ தான் உயிர்களுக்கு அமிழ்தமாச்சே.”

“நான் அமிழ்தமா? என்ன ஓவரா புகழ்றீங்களோ?”

“இல்ல இல்ல வீண் புகழ்ச்சியில்ல, திருவள்ளுவர்,

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று

அப்படீன்னு திருக்குறள் பாடியிருக்காரு. அதாவது, நீ சரியான பருவத்துல பூமிக்கி வருவதாலத்தான், தாவரங்கள் செழிச்சு வளருது; அவை தரும் உணவாலத்தான் மனுச‌ங்க உட்பட எல்லா உயிரினங்களும் உயிரோட இருக்கோம். அதனால் தான் உன்ன அமிழ்தமுன்னு சொல்றோம்.”

“அப்படியா? கேட்பதற்கே மகிழ்ச்சியா இருக்கு”

“உம்ம், உன்கிட்ட பேச முடியற‌தால எனக்கு சந்தோஷம் தான்” என்றேன்.

“எனக்கும் சந்தோச‌ம் தான். நேரம் கிடைக்கும்போது நாம பேசலாம்”

“ஓ ஓ தாராள‌மா பேசலாமே, ஆனா என்கிட்ட பேசறதுக்கு என்ன இருக்குன்னு நான் தெரிஞ்சிக்கலாமா”

“எவ்வளவோ இருக்கு. எனக்கே தெரியாது; ஆனா என்ன பத்தி எழுதியிருக்குன்னு இப்ப நீங்க ஒரு திருக்குறள சொன்னீங்களே. அது மாதிரி என்ன பத்தி உங்களுக்கு தெரிஞ்ச தகவல எனக்கு சொல்லுங்க. நானும் என்னப் பத்தி உங்களுக்கு சொல்றேன்.”

“அப்ப சரி தான். நாம அடிக்கடி சந்திக்கலாம். ஆனா உன்ன சந்திக்கனும்னா இங்க தான் வரனுமா?”

“சார் நான் தான் எல்லா இடத்துலேயும் இருக்கேனே! என்ன தேடி நீங்க வரவேண்டிய அவசியம் இல்ல. நானே உங்களத் தேடி வர்றேன்.”

நானும் “சரி” என்று மகிழ்ச்சியுடன் கூற, “சரி சார் நான் புறப்படுறேன், நாம அப்புறமா சந்திக்கலாம்.” என்று கூறி ஓடியது அந்த நீர்.

அடுத்த சில நிமிடங்களில் மழைப் பொழிவு நின்றது. அப்பொழுது என் திறன் பேசி ஒலிக்க, அதை எடுத்துப் பார்த்தேன். அது அம்மாவின் அழைப்புத்தான்.

அழைப்பை ஏற்க, “எங்கப்பா இருக்க?” என்றுக் கேட்டார் அம்மா.

“இதோ வந்துக்கிட்டே இருக்கேன்” என்று கூற, “மழையில நனையாம வந்துடு” என்று கூறி அம்மா திறன் பேசியை வைத்தார். உடனே நான் அங்கிருந்து வீட்டை நோக்கிப் புறப்பட்டேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

One Reply to “மழைத்துளி – நீருடன் ஓர் உரையாடல் 1”

  1. நீருக்கும் மனிதனுக்குமான உரையாடல் அருமை.
    நீரின்றி அமையாது உலகு.
    அப்படிப்பட்ட நீருடன் நாம் உரையாடலை நிகழ்த்துவோமே!
    அதன் தகவல்களை தெரிந்து கொள்ளலாமே!

    அருமை. வாழ்த்துக்கள் ஐயா!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.