நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம்-23

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 25

தாயை இழந்து காதலையும் இழந்து நடைபிணம் போல் ஆகியிருந்தான் ராகவ்.

நாகர்கோயிலில் தஞ்சமடைந்தவன் அலுவலகம் செல்வதும் தங்கியிருக்கும் இருப்பிடத்துக்கு வருவதுமாய் எந்திரகதியில் இயங்கினான்.

யாரோடும் பேசுவதில்லை. எதிலும் ஈடுபாடில்லை. அம்மாவை நினைத்து நினைத்து மனம் அழுதது. தன்னால்தான் அம்மா இறந்ததாக நினைத்தவனை குற்ற உணர்ச்சி வாட்டியது.

‘இந்து! ஏன் இந்து என்னை ஏமாத்தின?’ என்று எதிரில் இந்து நிற்பதாய் கற்பனை செய்து கொண்டு கேள்வி கேட்டான். மொத்தத்தில் சித்தத்தால் மாறித்தான் போயிருந்தான் ராகவ்.

இப்படி இருந்தவனை எதிர்பாராமல் சந்தித்த கல்லூரித் தோழன் குமார் அரவணைத்துக் கொண்டான்.

குமாருக்கு மனைவியும் ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றும் மூன்று மற்றும் ஒன்னரை வயதில் இருக்க, அவ்வப்போது நண்பனின் வற்புறுத்தல் அழைப்பால் நண்பனின் வீட்டுக்குச் சென்று வந்தான் ராகவ்.

குழந்தைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் மனதிற்கு ஆறுதல் கிடைப்பது புரிந்தது ராகவுக்கு.

தானும் வருவேரெனப் பிடிவாதம் பிடித்த இந்துவோடு நாகர்கோயிலுக்கு ரெயிலேறினார்கள் ரத்தினவேலும் சுந்தரியும். அவர்களோடு ரெயிலில் விதியும் சேர்ந்து அமர்ந்து கொண்டது.

விடியக்காலை நேரம்.

பயணிகள் கண்ணயர்ந்திருக்கும் அந்த விடிகாலைக் கருக்கிருட்டில் விதி செய்த செயலோ, மனிதன் செய்த தவறோ? திருச்சி அருகே, ரத்தினவேல் குடும்பம் சென்ற ரெயில் எதிரே வெகு வேகமாக வந்த மற்றொரு ரெயிலுடன் மோத, மோதிய வேகத்தில் ரெயிலிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டாள் இந்து.

ரத்தினவேலும் சுந்தரியும் சிதைந்து சின்னா பின்னமாய்ப் போயினர். இருட்டில் அல்லோலகல்லோலப்பட்டது விபத்து நடந்த அந்த இடம்.

தலையில் அடிபட்டு ரெயில்வே மருத்துவமனையில் மயங்கிக் கிடந்த இந்துவுக்கு மருத்துவ உதவி செய்து வந்த மருத்துவர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த இந்துவின் தோழி சரண்யா பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டு தான் ஒரு மருத்துவ மாணவி என்பதையும் மறந்து அழுதார்.

டாக்டர் சரண்யாவின் கவனிப்பில் தலைக்காயம் ஆறிவிட்டாலும் தலை நரம்பில் அடிபட்டிருந்ததால் அடிக்கடி நினைவில் தடுமாற்றம் ஏற்பட்டிருந்தது இந்துவுக்கு.

பெற்றவர்கள் விபத்தில் இறந்ததைக்கூட அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்துவுக்குத் தீவிர சிகிச்சை தந்து கொண்டிருந்தார் இந்துவின் தோழி சரண்யா.

ரத்தினவேல் குடும்பத்துக்கு நடந்த அதே ரயில் விபத்தில் ராகவ்வின் நண்பன் குமாரும் அவன் மனைவியும் ஒரு திருமணத்துக்குச் சென்று திரும்புகையில் இறந்து போக நண்பனின் இரண்டு குழந்தைகளுக்கும் தனது இருபத்தெட்டாம் வயதில் தாயுமாய் தந்தையுமாய் ஆகிப்போனான் ராகவ்.

கிட்டத்தட்ட ஒன்பதாண்டு காலம் போராடித் தன் தோழி இந்துவை பழைய இந்துவாய் மாற்றியிருந்தார் டாக்டர் சரண்யா. இப்போது இந்துவுக்கு முப்பது வயதாகியிருந்தது.

தாய் தந்தை நினைப்பும் ராகவின் நினைப்பும் மீண்டும் இந்துவை ஒட்டிக் கொண்டன.

பெற்றவர்களைப் பார்ப்பதோ அவர்களை மீண்டும் கொண்டு வருவதோ முடியாது எனப் புரிந்து அமைதியானவளால் ராகவை மறக்க முடியவில்லை.

‘இந்து! நீ கடைசியா ராகவப் பாத்து பத்து வருஷமாச்சு. இந்தப் பத்து வருஷத்துல அவுனுக்குக் கல்யாணமாகி மனைவி குழந்தைங்கன்னு அமைதியான வாழ்க்க அமைஞ்சிருந்து, திடீர்னு நா ஒன்னோட பழைய காதலின்னு நீ போய் நின்னா, அவன் குடும்ப வாழ்க்க சிதைந்து சின்னா பின்னமாயிடாது?

நீ அவன காதலிச்சது உண்மையினா அவனோட அமைதியான வாழ்க்கையில நுழையாது இருக்கனும். அதுதா உண்மையான காதலுக்கு அழகு’ மனது சொன்னது சரியென சத்தியமென நியாயமெனப்பட்டது இந்துவுக்கு.

ராகவைச் சந்திக்க வேண்டுமென்ற ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் இந்து. ‘சந்திக்க வேண்டாம். ஆனால் அவனை நினைத்திருப்பது தவறல்ல’ என்று சமாதானம் செய்து கொண்டாள்.

தோழி டாக்டர் சரண்யாவால் புகழ் பெற்ற செவிலியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயின்று சிறந்த செவிலியராக வெளியே வந்தாள் இந்து.

கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் செவிலியராகப் பணியாற்றிக் கொண்டே அவ்வப்போது வயது முதிர்ந்த, பிறர் உதவி தேவைப்படும் நோயாளிக்கு வீட்டுக்கே சென்று அந்த நோயாளியைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பையும் ஏற்று வந்த இந்துவுக்கு இப்போது வயது அறுபத்தெட்டு.

தொண்டு நிறுவனம் அனுப்பும் வெளியூர்களுக்கும் சென்று உதவி தேவை என்று பதிவு செய்திருக்கும் நபர்களின் வீட்டுக்குச் சென்று நோயாளியைக் கவனிப்பதுண்டு.

அப்படி தொண்டு நிறுவனத்தில் உடல் நலமின்றி இருக்கும் தந்தையைக் கவனிக்க நர்ஸ் தேவை என்று திருச்சியிலிருந்து கணேசன் என்பவர் பதிவு செய்திருக்க, இந்துமதிக்கு அந்தப் பணி கொடுக்கப்பட அதற்காகத்தான் திருச்சி செல்ல விழுப்புரத்தில் பேருந்தில் ஏறினார் இந்துமதி.

“மேடம் டிக்கெட்” தனது கடந்த கால வாழ்க்கையில் மூழ்கிப் போயிருந்த இந்துமதி, ‘மேடம் டிக்கெட்’ என்ற குரல்கேட்டு நிகழ்வுக்கு வந்தார்.

டிக்கெட் பரிசோதகர். ஹேண்ட் பேக்கிலிருந்து டிக்கெட்டை எடுத்துக் காண்பிக்க அடுத்த இருக்கைக்கு நகர்ந்தார் பரிசோதகர்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் பேருந்து போய் நின்ற போது இரவு மணி எட்டாகியிருந்தது.

தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்து வைத்திருந்த ஹோட்டல் அறைக்கு ஆட்டோ ஒன்றில் ஏறிச் சென்றார் இந்துமதி.

குளித்து உணவருந்தி படுக்கும் வேளை, பக்கத்து அறையில் “விழியே கதையெழுது! கண்ணீரில் எழுதாதே! மஞ்சள் வானம், தென்றல் காற்று…”பாடல் ஒலித்தது.

“ராகவ்…” மெல்ல உச்சரித்தவர் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்