நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 24

ஆயிற்று பார்வதி மாமி இறந்து இன்று ஆறாம் நாள். வேரறுந்த மரம் போல் கீழே விழுந்தவர் எழுந்திருக்கவே இல்லை.

தலையில் எண்ணை தடவாததால் பரட்டைத் தலையுமாய் ஷேவிங் செய்யாததால் முள் முள்ளாய் தாடியும் மீசையுமாய் ஒடுங்கிப் போய் தளர்வாய் அமர்ந்திருந்தான் ராகவ்.

அடிக்கடி மார்பு குலுங்கியது. கட்டுப்பாடின்றி கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. மாமாவும் அத்தையும் பெயருக்குத் துக்கம் விசாரிக்க வந்து போனார்கள்.

காலை மணி பதினொன்று.

காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. வயிறு பார்த்து சாப்பிடத்தர
யாருமில்லை. பசிக்கும்போது தாயின் அருமை ஆயிரம் மடங்கு அதிகமாகத் தெரியும்.

“சார் போஸ்ட். போஸ்ட்மேன் கொஞ்சம் பெரிய கவரொன்றை ரேழியில் எறிந்து விட்டுப் போனார். அதைப் போய் எடுக்கக்கூடப் பிடிக்காமல் அமர்ந்திருந்தான் ராகவ்.

கால் மணி சென்றிருக்கும். மெல்ல எழுந்தவனின் உடல் தள்ளாடியது. கண்கள் அழுதழுது எரிச்சலாய் எரிந்தன.

குனிந்து கவரை எடுத்தவன். “ப்ச்! கல்யாணப் பத்திரிகை” என்று நினைத்து எந்த சுவாரசியமுமின்றி அதனைப் பார்த்தவன் கண்களில் மணமக்கள் இந்துமதி-தனசேகர் என்று அச்சடிக்கப்பட்டிருப்பது விழுந்ததும் அப்படியே மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தான்.

இதயமே வெடித்துச் சிதறிவிடும்போல் இருந்தது. உடல் சில்லிட்டுப் போனது. அதிர்ச்சியில் மனதுவும் உடலும் உறைந்து போயின.

‘என் இந்துவா? இருக்காது. வேற எந்த இந்துமதியோட கல்யாணப் பத்திரிக்கயோ இது?’ மனம் சமாதானம் செய்ய முயன்றது.

மீண்டும் பதட்டத்தோடு பத்திரிக்கையைப் பார்த்தபோது அவனின் காதலி இந்துவின் சிரித்தபடி காணப்படும் மார்பளவு புகைப்படம். பக்கத்தில் சிரித்தபடி தனசேகரின் மார்பளவு புகைப்படம்.

சின்ன சைஸில் பத்திரிகையின் பின்புறத்தில், திருமணத் தேதி நான்கு நாட்களுக்கு முன்பான தேதியைக் காட்டியது.

நொறுங்கிப் போனான் ராகவ்.

நாகராஜு, தனசேகரால் பிரத்தியேகமாக திருமணம் முடிந்து விட்டதாக நம்ப வைக்க அச்சடிக்கப்பட்டு தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட பத்திரிகை அது என்பது ராகவ்க்கு எப்படித் தெரியும்?

பாவம் ராகவ். அப்படியே மடங்கி தரையிலமர்ந்து கைகளில் முகம் புதைத்து அழுதான்.

தன்னை வயிற்றில் சுமந்தவளின் பிரிவுக்காக இன்னும் அழுது முடிக்காத நிலையில் தான் நெஞ்சில் சுமப்பவளின் பிரிவுக்காக அழ ஆரம்பித்த ராகவ், தன் வாழ்க்கையில் இன்னும் எதற்கெல்லாம் அழுவானோ? பாழும் விதி அவனை இன்னும் என்ன செய்யக் காத்திருக்கிறதோ?

தாயின் பதின்மூன்று நாள் காரியங்களை சாவடியில் முடித்து விட்டு சுய விருப்ப டிரான்ஸ்ஃபரில் நாகர் கோயிலுக்கு மனதில் வேதனைகளைச் சுமந்தபடி போய்ச் சேர்ந்தான் ராகவ்.

கும்பகோணத்திலிருந்து அவன் கிளம்பிய நாளுக்கு மறு நாள்தான் நிஜத்தில் இந்து தனசேகரின் திருமணத் தேதி குறிக்கப்பட்டிருந்தது.

அன்று இந்து-தனசேகர் திருமணம் நடக்கவிருந்த வீட்டில் அதிக கூட்டமில்லை. கல்யாண வீட்டிற்கான கலகலப்போ, சந்தோஷமோ துளியும் இல்லை.

மகளின் திருமணமென்று ரத்தினவேலுவோ சுந்தரியோ துளியும் சந்தோஷமின்றி எதையோ பறிகொடுத்தாற் போல் சுரத்தின்றி இருக்க, அப்பத்தா மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்டு மூலையில் முடங்கிக் கிடந்தார்.

அழுதழுது இந்துவின் முகம் வீங்கிக் கிடந்தது. ‘ராகவ்..ராகவ்..’ என்று மனது ராகவை நினைத்துத் தவியாய்த் தவித்தது.

மிகக் குறைந்த ஒப்பனையோடும் மனம் நிறைந்த வேதனையோடும் இருந்தாள் இந்து. வாசல் திண்ணையில் நாதஸ்வரமும் மேளமும்கூட அழுது வடிவது போல ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன.

இந்தத் திருமணத்தில் தனசேகருக்கும் நாகராஜுவுக்கும் மட்டுமே மிகுதியான சந்தோஷம். அதுவும் தனசேகர் தலை, கால் புரியாத சந்தோஷத்தில் இருந்தான்.

அதன் காரணாமாய் காலையிலிருந்தே போதை குறையாமல் இருக்க சரக்கை அவ்வப்போது ஏற்றிக் கொண்டே இருந்தான்.

இந்துவுக்குத் தாலிகட்டி மனைவியாக்கிக் கொள்ள நாகராஜின் வீட்டிலிருந்து என்ஃபீல்டில் கிளம்பியவனை நாகராஜ் வாழ்த்தி அனுப்பினான்.

“தனசேகரு வரும்போது அந்த திமிர் புடிச்சவன் ரத்தினவேலுவோட பொண்ணு இந்துமதிய ஒம் பொண்டாட்டியா அழச்சுகிட்டு வருவ. வரட்டும் வரட்டும், இனிமேதா இருக்கு என்னோட ஆட்டம்” இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.

அடித்திருந்த சரக்கு வேலை செய்ய ஆரம்பித்தது தனசேகரிடம். கண்ணு மண்ணு தெரியாமல் வண்டி ஓட்டினான் தனசேகர்.

இந்து வழுக்கி விழுந்த பாதை. தனசேகரின் வண்டி அந்தப் பாதையில் நுழைந்தது. கண்கள் மங்கலாய்த் தெரிந்தது தனசேகருக்கு. தாறுமாறாய் வண்டியைச் செலுத்தினான்.

சுழித்து நுங்கும் நுரையுமாய் வேகத்தோடு காட்டாற்று வெள்ளம்போல் ஓடிக் கொண்டிருந்தது குடமுருட்டி ஆறு.

பாதையின் ஓரமாய் ஆற்றுத் தண்ணீரில் மக்களோ கால்நடைகளோ வேறு எந்த ஒன்றோ விழுந்துவிடாமல் பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த இரும்பு கிராதி துருப்பிடித்து ஆற்றை நோக்கிச் சாய்ந்து நின்று கொண்டிருந்தது.

அடித்திருந்த சரக்கால் கண்கள் ‘மசமச’த்துபோய் தாறுமாறாய் ஓட்டிவந்த தனசேகரின் வண்டி துருப் பிடித்துச் சாய்ந்து நின்றிருந்த இரும்பு கிராதி மேல் வெகுவேகமாய் மோதி துள்ளிப் பாய்ந்துத் சுழித்து ஓடும் ஆற்றுக்குள் தலைகுப்புற விழுந்தது.

சரக்குப் போட்டிருந்த தனசேகரால் தப்பிக்க எந்த முயற்சியும் செய்ய முடியவில்லை. தண்ணீர் மூன்று முறை அவனை அடியிலிருந்து மேலே கொண்டு வந்தது.

‘பக்பக்’கென்று நிறைய தண்ணீர் குடித்தான் தனசேகர். வயிறு உப்பியது. நான்காம் முறை ஆற்றுநீர் அவனை மண்ணில் செருகியது.

சற்று நேரத்தில் தனசேகரின் சடலம் மேலெழும்பி வந்து மிதந்து மிதந்து ஆற்று நீரின் ஓட்டத்திற்கேற்ப செல்ல ஆரம்பித்தது.

மணமகன் வராமல் திருமணம் நின்று போனது. இந்துவை வந்தவர்களெல்லாம் ‘துக்கிரி அது இது’ என்று இஷ்டத்துக்கும் பேசிவிட்டுக் கிளம்பிச் சென்றார்கள்.

உண்மையில் ரத்தினவேல் குடும்பம் திருமணம் நின்று போனதில் சந்தோஷமே பட்டது. இந்துவைக் கேட்கவே வேண்டாம்.

இரண்டுநாள் கழித்து தனசேகரின் உடல் கரை ஒதுங்கியது. கேட்பவர் யாருமின்றி அரசாங்கமே தனசேகரின் சடலத்தை எரித்தது. ரத்தினவேலின் குடும்பம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளை தாங்கிக் கொள்ளமுடியாத அப்பத்தா காலமாகிப் போனார்.

ஒருமாதம் ஓடிப் போனது.

ராகவின் நினைவு வெகுவாகவே வாட்ட ஆரம்பித்தது இந்துவை.

“ஏங்க! நம்ம இந்து விரும்புற பையன் வீட்டுக்குனா போய்ட்டு வரலாங்க. அவுங்க சம்மதம் தெரிவிச்சா நம்ம பொண்ணு ஆசப்படவனையே கட்டி வெச்சுடலாங்க. ஊருமாச்சு ஒறவுமாச்சு. நம்ம பொண்ணு சந்தோஷந்தாங்க நமக்கு முக்கியம். மனைவி சுந்தரியின் பேச்சில் நியாயம் இருப்பதாகவே பட்டது ரத்தினவேலுக்கு.

தாங்க முடியாத சந்தோஷத்தில் திக்கு முக்காடிப்போனாள் இந்து.

சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே சென்ற ரத்தினவேல் சற்று நேரத்தில் தொங்கிய முகத்தோடு உள்ளே வந்தார்.

“ஏங்க! என்னாச்சு? சோகமா இருக்கீங்க”

“ப்ச்! சுந்தரி. அந்தப் பையன் வேல பாத்த ஆபீஸ்ல விசாரிச்சேன். அந்தப் பையனோட அம்மா போன மாசம் காலமாயிட்டாங்களாம். அந்த வருத்தத்துல இருந்த நேரத்துல இந்துவுக்கும் கல்யாணம் நடக்கப் போவுதுன்னு தெரிஞ்சிருக்குமோ என்னமோ, மேக்கொண்டு கும்பகோணத்துல இருக்கப் புடிக்காம மாத்தல் வாங்கிக்கிட்டு நாகர்கோயில் போய்டாரு போலருக்கு. ரொம்ப வருத்தமா இருக்கு சுந்தரி. இந்துவுக்கு நடக்கவிருந்த கல்யாணம் நின்னு போயிட்டுனு தெரியுமோ தெரியாதோ தெரியல..” வருத்தத்தோடு பேசினார் ரத்தினவேல்.

‘ராகவ் அம்மா இறந்துட்டாங்களா! ராகவுக்கு ஆறுதல்கூட சொல்லமுடியாத பாவியாயிட்டேனே’ என்று பரிதவிப்பாய் இருந்தது இந்துவுக்கு. நாகர்கோவிலுக்குப் பறந்து சென்று ராகவைப் பார்க்க மனம் தவித்தது.

“ஏங்க! நாம நாகர்கோயிலுக்கே போயி அந்தப் புள்ளயப் பாத்தா என்ன?”

“நீ வீட்டுலயே இரு இந்து. நாங்க போய் அந்தப் பையனப் பாத்துட்டு வரோம்”
அப்பாவும் அம்மாவும் சொல்லச் சொல்லக் கேட்காமல் ராகவைப் பார்க்கும் ஆசையில் தானும் கிளம்பினாள் இந்து.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்




தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.