நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 23

இனி எடுக்கப்போகும் எந்த முடிவையும் தன்னைக் கேட்டுத்தான் எடுக்க வேண்டுமென்றும், தான் சொல்வதைத்தான் இனி ரத்தினவேல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டு விட்டுப் போனான் தனசேகர்.

தனசேகரின் அடிமைபோல் ஆகிப்போனார் ரத்தினவேல்.

ரத்தினவேலும் தனசேகரும் சந்தித்துக்கொண்ட நேரத்தில் ‘ப்ரதோஷம்’ என்று கோயிலுக்குச் சென்றிருந்த செண்பகத்தம்மாவும் சுந்தரியும் தனசேகர் வந்து சென்ற பத்து நிமிடங்களுக்கெல்லாம் உள்ளே நுழைந்தனர்.

விட்டத்தைப் பார்த்தவாறு சோகமே உருவாக அமர்ந்திருந்த ரத்தினவேலைப் பார்த்து பதைபதைத்துப் போனார்கள் இருவரும்.

மாறிமாறி அவர்கள் கேட்டகேள்விகள் எதற்கும் பதிலளிக்கவில்லை ரத்தினவேல். மாறாக அவர் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

காரணம் புரியாது தவித்துப் போயினர் இருவரும். அழவே ஆரம்பித்து விட்டார் சுந்தரி.

வாசலில் செருப்பைக் கழற்றிப்போடும் சின்ன சப்தம். உள்ளே நுழைந்த இந்துமதிக்கு அப்பாவும் அம்மாவும் அழுதபடி இருப்பதும் அப்பத்தா தவிப்போடு நிற்பதும் பார்த்து பயமானாள்.

“அப்பா! அப்பா! ஏம்ப்பா அழுவுறீங்க? அம்மாவும் அழுவுறாங்க. என்னாச்சுப்பா?”

“ஏய்! பண்றதெல்லாம் பண்ணிட்டு ஏ அழுவுறீங்கன்னா கேக்குற? நாசமா போறவளே. பொண்ணாடி நீ. இந்த குடும்ப மானத்த வாங்கவே பொறந்த நீ ஏன் அழுவுறீங்கன்னா கேக்குற?”

“ஐயோ! ஐயோ! என்னங்க பேசுறீங்க நம்ம பொண்ணப் பாத்து. என்னாச்சுங்க ஒங்குளுக்கு? செல்லம், தங்கம், கண்ணூ குட்டிம்மான்னு வாய்க்குவாய் செல்லம் கொஞ்சுற நீங்க இந்துவப் பபாத்து ஏங்க இப்பிடிப் பேசுறீங்க?”என்றார் சுந்தரி. காரணம் புரியாமல் தவித்தார் அப்பத்தா.

பைத்தியம் பிடித்தவர்போல் மகளருகில் ஓடினார் ரத்தினவேல்.

“சொல்லுடி, சொல்லுடி யாரவன்? யாரு அந்தப் பார பய? எத்தன நாளா அவனோட பழக்கம்? எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நெனச்சியா? தெரியும்டி. எனக்கு எல்லாம் தெரியும்” ஆவேசம் வந்தவர் போல் கத்திக் கொண்டே இந்துவின் கன்னத்தில் ‘பளீரெ’ன்று அறைந்தார்.

“ஏய்! நாளேலேந்து நீ காலேஜுக்குப் போக்கூடாது. படிச்ச வரைக்கும் போதும்”

“அப்பா!” நடுங்கிப் போனாள் இந்து.

“ஏய்! என்ன அப்பான்னு கூப்டாத”

“எங்குடும்ப மானமே சந்தி சிரிக்கப் போவுதிடி ஒன்னால. இனிமே ஊரும் ஒறவும் காரித் துப்பப் போவுது, காரித் துப்ப”

“அய்யோ! என்னங்க நடக்குது இங்க. என்னென்னமோ சொல்றீங்களே? ஒன்னுமே புரியலயே!” தலையிலடித்துக் கொண்டு கதறினார் சுந்தரி.

“அழு! அழு! நல்லா அழு! இவ பண்ணுற காரியத்துக்கு. இவளப் பெத்த நாம நாக்கப் புடிங்கிக்கிட்டு செத்ருக்கனும். மானங்கெட்டத்தனமா இன்னும் உசிரோடில்ல இருக்குறோம். இவ, இவ எவனையோ காதலிக்கிறாளாம். படிக்கட்டம்னு காலேஜுக்கு அனுப்புனா லவ்வு பண்றா லவ்வு”

“அய்யோ! அய்யோ!” வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டார் சுந்தரி.

“பாவி மவளே! பாவி மவளே!” கத்திக் கொண்டே தரையில் விழுந்து உருண்டு புரண்டு அழுதார். தலையில் அடித்துக் கொண்டு புலம்பினார்.

அப்பத்தாவின் வயதான தேகம் நடுங்கியது. ‘தொப்’பென்று சேரில் அமர்ந்தவர் உணர்ச்சியற்றுப் போனார்.

“ஏய்! இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. இனிமே நீ காலேஜுக்குப் போகக்கூடாது. மீறி கால வாசப்படி தாண்டி வெச்ச பொண்ணுன்னும் பாக்கமாட்டேன் கால வெட்டீடுவேன். அந்தப்பாரப் பயல மறந்துடு. “

“இன்னும் பதினைந்து நாள்ள ஒனக்கும் தனசேகருக்கும் கல்யாணம். கண்ணுல மண்ணத் தூவிட்டு அந்தப் பயலோட ஓடிடலாம்னு நெனைக்காத. அப்டி ஏதும் செஞ்ச நானும் அம்மாவும் சத்தியமா தூக்குல தொங்கிடுவோம்”

அதிர்ந்து போனாள் இந்து.

‘தனசேகருக்கும் தனக்கும் கல்யாணமா?’ இந்து அழுதாள்; அரற்றினாள்; தேம்பினாள்.

“அப்பா! வேண்டாம்பா! காலேஜு போகாதன்னு சொல்லாதீங்கப்பா. நா ஒருத்தர விரும்புறது உண்ம தாம்ப்பா. அவுரு ரொம்ப நல்லவருப்பா. அவர என்னால மறக்க முடியாதுப்பா” சினிமா கதாநாயகி பேசும் வசனங்கள் அத்தனைத்தும் இந்துவின் வாயிலிருந்து வெளி வந்தன.

தனசேகரை மணக்க மறுத்தாள். ராகவைத் தவிர வேறு யாரையும் மனதால்கூட நினைக்க முடியாதென்றாள். விஷம் குடித்து சாவேனென்றாள்.

பைத்தியம் பிடித்தவர்போல் அங்குமிங்கும் ஓடி ஒருமுழம் கயிற்றோடு வந்த ரத்தினவேல்.

“நா தூக்குப் போட்டு சாவறேன்! சாவறேன்! அதுக்கப்புறம் நீ அந்தப் பயல கட்டிக்க. எம் பொணத்துமேல நின்னு தாலி கட்டிக்க” அறைக்குள் சென்று படீரெனத் தாள் போட்டுக் கொண்டார்.

“அய்யோ! அய்யோ! எதுவும் செஞ்சிக்கிடாதீங்க. நானும் வரேங்க. ரெண்டு பேருமா சாவோம்” கதவைத் தட்டித் தட்டி கதவைத் திறக்கச் சொல்லி கதறினார் சுந்தரி.

“அப்பா! அப்பா! கதவத் தொறங்கப்பா!” கதறினாள் இந்து.

நடப்பது எதுவும் தெரியாமல் நாற்காலியில் மூர்ச்சையாகிக் கிடந்தார் அப்பத்தா.

இந்து கல்லூரி செல்வது நிறுத்தப்பட்டது. தனது ரூமுக்குள்ளேயே தன்னை சிறைபடுத்திக் கொண்டாள் இந்து; அழுதாள்: ராகவை மறக்க முடியாமல் தவித்தாள்.

தனசேகரை வெறுத்தாள். ‘அவனை மணக்க வேண்டும்’ என்ற அப்பாவின் முடிவால் அதை நினைக்கும்போதே மனதால் செத்து செத்துப் போனாள். கண்ணீரே இந்துவுக்குச் சொந்தமாகிப் போனது.

தினம், தினம் தனசேகர் எதைப் பேச வேண்டும் எதைச் செய்ய வேண்டுமென இடும் ஆணைக்கு மகுடிக்கு ஆடும் நாகம்போல் அடங்கி அதற்கேற்றார்ப்போல் நடந்தார் ரத்தினவேல்.

இந்து தனக்குக் கிடைக்கப் போகின்ற மகிழ்ச்சியில் நாகராஜுடன் சேர்ந்து அங்குவார் அடக்குவாரின்றி குடித்துக் கும்மாளமிட்டுக் கொண்டாடிக் கொண்டிருந்தான் தனசேகர்.

தனசேகர் திருமணத் தேதி குறிக்க வற்புறுத்தியதால் வேறு வழியின்றி தேதி குறித்தார் ரத்தினவேல். மகளின் திருமணத் தேதியைக் குறித்துவிட்டு அழுது தீர்த்தார்.

“ஏங்க பொண்ணுக்கு நல்ல புள்ள தனசேகர் புருஷனா கெடைக்கப் போறாரு. எதுக்கு அழுவுறீங்க?”

“இல்ல! சுந்தரி இல்ல! தனசேகர்..” என்று ஆரம்பித்து அவனைப்பற்றி அனைத்தையும் சொல்லி முடித்தார் ரத்தினவேல்.

“ஏங்க! தனசேகரு என்ன வேணா செய்யட்டுங்க. நம்ம பொண்ணு வாழ்க்கையும் அவ சந்தோஷமுந்தாங்க முக்கியம். அவ விரும்புற புள்ளைக்கே கட்டிக் குடுத்துடுவோங்க” தாயுள்ளம் கணவனைக் கெஞ்சியது.

மனைவி பேச்சைக் கேட்டிருந்தால் ரத்தினவேல் தான் சந்திக்கப்போகும் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டிருக்கலாம்.

விதி விளையாடிப் பார்க்கத் துடிக்கும்போது புத்தி யார் பேச்சைக் கேட்கும். தனசேகருக்குப் பயந்தார் ரத்தினவேல்.

ரத்தினவேலின் வீடு அழுகையும் புலம்பலுமாய் சந்தோஷத்தைத் தொலைத்து களையிழந்து போனது.

பத்து நாட்களாக இந்து வரவே இல்லை. காத்திருந்து காத்திருந்து பார்த்துவிட்டு ஏமாற்றத்தோடு வீட்டுக்குத் திரும்புவது வாடிக்கையாயிற்று ராகவ்க்கு.

‘ஏன் இந்து வல்ல. உடம்பு, கிடம்பு சரியில்லையா? அல்லது வீட்ல வேற யார்க்காவதா..” மனசு இந்துவைப் பார்க்காமல் தவித்தது, ஏங்கியது.

அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்து முகம் கழுவி தான் தரும் காபியைக் குடித்துவிட்டுத் தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொள்ளும் மகனைப் பார்த்துக் கவலையானார் பார்வதி மாமி.

“ஏண்டா! ராகவ் செல்லம்! ஏன் கொஞ்சநாளா என்னவோ போல ஆயிட்ட. டல்லா இருக்க. அம்மாட்டகூட சரியா பேசமாட்டேங்கற. ஆபீஸ்ல எதாவது பிரர்ச்சனையா எங்கிட்ட சொல்லமாட்டியா? நீ முன்னாமாரி இல்லடாக் கண்ணு!” என்றார்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல. சாதாரணமாதா இருக்கேன்”

“ஒவ்வாய்தான் சொல்றது. உன்மேல எதையோ பறிகுடுத்தாப்ல பரிதாபமான்னா தெரியற”

“உச்!” கொட்டினான் ராகவ்.

“காலா காலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிண்டேன்னா எல்லாம் சரியாயிடும். சொன்னா கேக்கிறியா? இருவத்தேழு முடியப் போறது. இப்பிடியே விட்டா முப்பதாயிடும். அப்பறம் கெழவன்பா!” சொல்லிச் சிரித்தார்.

“அடப்போம்மா!” அலுத்துக் கொண்டான் ராகவ்.

“என்ன? போம்மா! வாம்மா! மாமா பொண்ணு அத்த பொண்ணு யாரும் வேண்டான்ட்ட. அந்நியத்துலயாவது பாக்கலாம்னா பிடிகுடுத்தே பேசமாட்டேங்ற. எந்தப் பொண்ணையாவது சினிமால காட்றாப்புல காதல் கீதல் பண்றியா? சொல்லீடு!”

பதில் சொல்லாமல் மௌனமாய் இருந்தான் ராகவ்.

“என்னடா ராகவ்! மௌனமா இருக்க.அப்டி ஏதும் உண்டுன்னா சொல்லிடு”

பதிலில்லை. விரல் நகங்களை இப்படியும் அப்படியும் பார்த்தான்.

ராகவின் மௌனம் மாமிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

“பதில் சொல்லாம இருந்தா கவலையா இருக்குல்ல. பதில் சொல்லு”

“அது..அது.. அது வந்து..”

“டேய்! நெஞ்சுல நெருப்பள்ளிக் கொட்டிடாதடா! ப்ராமணப் பொண்ணுதானே!”

பதிலில்லை.

நெஞ்சைப் பிடித்துக் கொண்டார் மாமி.

“ராகவ்! எதையாவது சொல்லிடாதடா! ப்ராமணப் பொண்ணுதானே!”

“இ..இ.. இல்லம்மா. வேற வேற ஜாதி” பயத்தோடு உண்மையைச் சொன்னான் ராகவ். வியர்த்துக் கொட்டியது.

‘படீர் படீரெ’ன்று தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டார் மாமி.

“அய்யோ! மோசம் போய்ட்டேனே! நா என்ன பண்ணுவேன். ஒட்டு, ஒறவெல்லாம் காரித் துப்புமே! அண்ணாவும் நாத்தனாரும் கைதட்டிச் சிரிப்பாளே! ஒருத்தர் மூஞ்சிலயும் இனிமே முழிக்க முடியாதே! பெத்தவாளுக்கு தெவசம் பண்ணக்கூட லாயக்கில்லாம போயிடுவயே!

இதுக்கு தானா ஒன்ன பத்துமாசம் சொமந்து பெத்தேன்?

ஏண்டா! கல்யாணம் பண்ணிக்க ஒருப்ராமணப் பொண்ணுகூடவா ஒனக்குக் கெடைக்கல.

அய்யோ! அய்யோ! நா என்ன பண்ணுவேன். என்ன பண்ணுவேன். இப்பிடி தலேல கல்லத் தூக்கிப் போட்டுயேடா!”கத்திக் கொண்டே வேரறுந்த மரம்போல் கீழே விழுந்தார் பார்வதி மாமி.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்


*

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.