நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 5 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

“ஏய்! இந்து! எந்திரி, எந்திரி மணி ஏழாவுது பாரு. இன்னிக்கி திங்கக்கெழம. காலேஜி உண்டில்ல. லேட்டா எழுந்தீன்னா அப்பறம் பஸ்ஸுக்கு லேட்டாயிட்டுன்னு பரவா பரப்ப. வெறும் வயத்தோட ஓடுவ. ம்..ம்..எந்திரி எந்திரி..” அம்மா சுந்தரி தோளைப் பிடித்து உலுக்கிய உலுக்கலில் கண் விழித்தாள் இந்து.

“அம்மா! அப்பா?”

“அப்பா நேத்து ராத்திரியே சொன்னாரே! மறந்துட்டியா? தாலுகா ஆபீஸ் ப்யூன் வீட்டுக் கல்யாணத்துக்குப் போவணும்னு. ஆறு மணிக்கே கெளம்பிப் போய்ட்டாரு. சரி! சரி! மணியாவுது பாரு. ராத்திரி முழுக்க மழ. இப்பதாங் கொஞ்சம் நின்னிருக்கு. தண்ணி ஜில்லுனு இருக்குமுன்னு வெந்நீரு வெளாவி வெச்சிருக்கேன். போய்க் குளி” என்று சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியே போனார் சுந்தரி.

சாத்தியிருந்த கொல்லைப் புறக்கதவைத் திறந்து பார்த்தாள் இந்து. ஆங்காங்கே
தண்ணீர் தேங்கிக் கிடந்தது. தென்னை மரங்களெல்லாம் குளிப்பாட்டி விட்டது போல் ஈரமாய்த் தெரிந்தன.

கொல்லைப்புறம் முழுவதும் பார்வையைச் சுழல விட்டவளின் பார்வை கொத்துக் கொத்தாய்க் காய்த்துத் தொங்கும் கொய்யா மரத்தின் மீது வந்து நின்றது.

இலைகளே தெரியாத அளவுக்கு ஒவ்வொரு கிளையிலும் நெல்லிக்காயைவிட கொஞ்சமே கொஞ்சம் பெரிய சைஸில் காயும் பழமுமாய்.

பார்ப்பவர்கள் ‘அடியம்மாடீ! எத்தினி காயி. எம்மாம் பழம் கொத்து கொத்தால்ல காச்சு தொங்குது’ என்று கண்களை விரித்து அதிசயக்கத்தக்க வகையில் பூவும் காயும் பழமுமாய் செழிப்பாய் வளப்பமாய் நின்று கொண்டிருந்தது கொய்யா மரம்.

கொய்யாபழத்தின் வாசம் அந்தக் கொல்லைப் புறத்தையே முற்றிலுமாய் சுற்றிச் சூழ்ந்திருந்தது. அணில் கடித்த பழம், கிளி கொத்திய பழமென்று அரையும் குறையுமாய் பழங்கள் ஆங்காங்கே தெரிந்தன.

கனிந்த பழத்தினை இரண்டாக பிய்த்தால் பிங்க் அல்லது சிகப்புக் கலரில் விதையின்றி ருசியோ ருசியாய் இருக்கும் சுவாமிமலைக் கொய்யா.

பழங்களின்மீது பார்வை பட்டதும் கல்லூரித் தோழிகளுக்கு இன்று கொண்டு வருவதாகச் சொன்னது நினைவுக்கு வர, பரபரப்பானாள் இந்து.

பாவாடையைக் கொஞ்சமாய் மேலே தூக்கி சேறு படாதவாறு இடுப்பில் பாவாடை நாடாவில் செருகிக் கொண்டாள்.

பளீரெனத் தெரிந்த பாதங்களும், கொலுசு அணிந்திருந்த கணுக்காலுக்கு சற்று மேல்வரை தெரிந்த கால்களும் ‘ஹையோ! இதென்னா கால்களா? வாழைத்தண்டா!’ என்று எண்ண வைக்கும் அளவுக்கு வழுவழுப்பாய் வெள்ளை வெளேறென்று பளிச்சிட்டன.

மரத்திலேயே மாட்டித் தொங்கிங்கொண்டிருந்த துரட்டியை எடுத்து நிறைய பழங்கள் தெரிந்த கிளையொன்றை கீழ்நோக்கி இழுத்தாள்.

இழுத்த வேகத்தில் கிளைகளிலும் இலைகளிலும் இரவு பெய்த மழையால் தேங்கி நின்றிருந்த தண்ணீர் சற்றே மேல்நோக்கி முகத்தைக் காட்டியபடி துரட்டியால் கிளையைப் பற்றியிருந்தவள் மீது ‘சலசல’வெனத் தண்ணீர்த் துளிகள் வீழ்ந்தன.

தலை, நெற்றி, மூக்கு, உதடு, காது மடல்கள், தோள்கள் என சிலீரென தண்ணீர் விழ “ஆ! அய்யோ! அம்மா! என்னமா சிலீர்ங்குது மழத்தண்ணி” என்றபடி தாவணித் தலைப்பால் முகத்தைத் துடைத்தவள் மார்பை மூடியிருந்த மேல்புறத் தாவணியை முக்காடுபோல் தலையை மூடி தண்ணீர் விழாதவாறு போட்டுக் கொண்டாள்.

இடக்கையால் கிளையைப் பற்றியிருக்கும் துரட்டியைக் கீழ்நோக்கி இழுக்க கொத்துக் கொத்தாய்ப் பழங்கள், பறிக்கும் தூரத்தில் கிட்டத்தில் வந்தன.

மரத்தினடியிலேயே கிடந்த குட்டி இரும்பு வாளியில் மழைநீர் ரொம்பியிருக்க ‘மழத்தண்ணிதானே’ என்று நினைத்தவாறு ‘வெடுக் வெடுக்’கென்று பழங்களைப் பறித்துப் போட்டாள்.

“ஏய்! இந்து காலேஜுக்கு நேரமாவுதுல. குளிக்காம கொள்ளாம இப்ப எதுக்குக் கொய்யாப்பழம் பறிச்சிக்கிட்ருக்க” கொல்லை வாசல் நிலையில் சாய்ந்து நின்றபடி குரல் கொடுத்தார் செண்பகத்தம்மா.

“ம்..பழம் எதுக்குப் பறிப்பாங்க? திங்கதா”

“அதுக்கு இம்மாம் பழமா!”

“நா திங்கன்னு சொன்னனா? எம் ஃப்ரண்டுங்களுக்கு”

“அதுக்கு இப்புட்டு பழத்தையா கொண்டு போவ? பழக்கடக்காரங்கிட்ட குடுத்தா முழுசா அஞ்சுரூவா குடுப்பான்ல”

“அய்ய! போ அப்பத்தா” என்றபடி அப்பத்தாவை இடது முழங்கையால் ஒருஇடி இடித்து விட்டு பழவாளியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் இந்து.

வாளியிலிருந்த பழங்களை நூலால் தயாரிக்கப்பட்ட தோளில் மாட்டிக் கொண்டால் இடுப்பு வரை தொங்கும் பையொன்றில் மாற்றிவிட்டு மணியைப் பார்த்தாள்.

மணி ஏழு ஐம்பது. “அய்யோ நேரமாயிடுச்சு” என்றபடி பாத்ரூம்க்குள் நுழைந்து கொண்டாள். அம்மா சுந்தரி விளாவி வைத்திருந்த வெந்நீர் பச்சைத் தண்ணியாய் ஆறிப் போயிருந்தது.

                  ******


"ராகவ்! டிபன் ரெடி!" கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்த
ராகவ் தாயின் குரல் கேட்டு, "தோ! வரேம்மா!" என்றபடி மீசையை சீப்பால் நீவி விட்டுக் கொண்டான்.

தோசையை விண்டு சட்னியில் தோய்த்து வாயிடம் கொண்டு சென்ற ராகவை,"ராகவ் மறந்துட்டேனே! இன்னிக்கு நீ ஆபீஸ் விஷயமா எந்தூருக்கோ போகனும்னியே! எந்த ஊருன்னு சொன்ன?" என்ற தாயின் கேள்வி தோசையை வாயில் போடாமல் தாமதிக்கச் செய்தது.

"அதுவாம்மா! ஊர் பேரு சரவூர். இங்கேந்து ஆறு அல்லது ஏழு மைல் தாம்மா இருக்கும்னு ஆபீஸ்ல சொன்னாங்க."

"அப்ப கொஞ்சம் சீக்கிரமா கிளம்பனும்?"

"ப்ச்! ஏழு மைல்லாம் ஒன்னுமே இல்ல. பத்தே நிமிஷத்துல நம்ம ராஜ்தூத் சல்லுனு கொண்டு விட்றாதா?"

முகத்துக்கு லேசாய் பவுடர் பூசி, ஒற்றைக் கீற்றாய் விபூதி இட்டு பெல்பாட்டம் பேண்ட்டை அணிந்து அதற்கேற்ற கலரில் ஷர்ட்டை டக்கின் பண்ணி பெல்ட் கட்டி அப்படியும் இப்படியும் உடலை அசைத்து அட்ஜெஸ்ட் பண்ணி கண்ணாடியைப் பார்த்தபோது, கண்ணாடிக்கு மட்டும் உயிரிருந்தால் அவனைப் பார்த்து 'அய்யோ! இப்படியொரு ஹேண்ட்சம் யூத்தா!' என்று கண்ணடித்திருக்கும்.

"அம்மா!கெளம்பறேம்மா" என்றவனிடம், "இந்தா டிஃபன் பாக்ஸ்" 

அம்மா நீட்டிய டிஃபன் பாக்ஸ்ஸை வாங்கி கைப் பையில் போட்டவன் "அம்மா வரும்போது எதாவது மளிக கிளிக வாங்கிண்டு வரணுமாம்மா?"

"எல்லாம் இருக்குடா கண்ணு! பாரேன் எம்புள்ளக்கி இருக்குற பொறுப்ப?" சிரித்துக் கொண்டே சொன்ன மாமிக்கு குரலில் பெருமை வழிந்தது.

வாசல் குரட்டில் கன கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது ராஜ்தூத். கல்லூரி நான்காண்டுகள் படித்து முடிக்கும் வரை லாம்ப்ரெட்டாதான். கழுதையாய்க் குதிரையாய் உழைத்தது. அரசுவேலை கிடைத்தபிறகு வாங்கியது இந்த ராஜ்தூத்.

வண்டியின் பெட்டியில் இருந்த துணியை எடுத்து வண்டியின் உடல் முழுதும் 'பட்பட்'டென்று தட்டினான் ராகவ்.ரியர்வ்யூ மிரரை லேசாய் அசைத்து சரியான பொசிஷனில் வைத்தான். ஸ்டேண்டைத் தள்ளிவிட்டு ஏறி அமர்ந்தான்.

பின் சீட்டில் ஓசையின்றித் தானும் மெல்லிய புன்னகையோடு ஏறி அமர்ந்து கொண்டது விதி. 

வாசல் தூணில் சாய்ந்து நிற்கும் அம்மாவிடம், "வரேம்மா" என்றபடி வண்டியை ஸ்டார்ட் செய்ய சீறிப்பாய்ந்தது வண்டி.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.