நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 9 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

அன்று திங்கட் கிழமை.

காலையிலிருந்தே மனசு பரபரத்தது ராகவுக்கு.

‘இன்று கல்லூரி உண்டு. அந்தப் பொண்ணு இன்னிக்கி காலேஜுக்குப் போவாங்கல்ல! பஸ்ஸுலதானே போவாங்க. எந்த பஸ்ல போவாங்கான்னு தெர்லயே? எந்த பஸ்ல போனா என்ன! பஸ் ஸ்டாப்புல போய் நின்னா ஏதோ ஒரு பஸ்ல அவுங்க ஏறுவாங்கதானே. அப்ப அவங்கள பாக்க முடியும்ல’ நினைத்தவன் அம்மாவிடம், ‘வேலை இருப்பதால் அரைமணி முன்னதாகவே அலுவலகம் செல்ல வேண்டும்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

வண்டியில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தபோது, “டேய் ராகவ்! என்னடா இப்டியாயிட்ட. நேத்திக்குதா அந்தப் பொண்ண பாத்த. அந்தப் பொண்ணு பேருமட்டும்தான் தெரியும். மேற்கொண்டு அந்தப் பொண்ண பத்தி ஒன்னுமே தெரியாது. அதுக்குள்ள அந்தப் பொண்ணப் பாக்கப் போற அளவுக்கு ஆயிட்ட. ரொம்ப வேகமா தெரியல.

தன்ன நீ ஃபாலோ பண்றதா அந்தப் பொண்ணு நெனச்சு ஒன்ன கேவலாமா நெனச்சா என்ன பண்ணுவ? திடீர்னு நீ அவங்ககிட்ட பேசப் போய் அவங்க ஒன்ன கண்டுக்காமலோ அல்லது கண்டபடி பேசிட்டாலோ என்ன செய்வ? நெலம கேவலமா ஆயிடாது’ மனசு கேட்டபோது கொஞ்சம் தயங்கத்தான் செய்தான் ராகவ்.

ஆனால் இந்துவைப் பார்க்க வேண்டுமென்ற அவனின் ஆசையும் ஆர்வமும் மனதைக் கட்டிப் போட்டது.

சரவூர் காளியம்மன் கோயில் பஸ் ஸ்டாப். மணி எட்டு நாற்பது. இன்னும் பஸ்வர பத்து நிமிடம் ஆகும் என்பது தெரிந்து கோபுரவாசலில் நின்றபடி கர்பக்கிரகத்திலிருக்கும் காளியம்மனைக் கைகூப்பி வணங்கி கைகளால் கன்னத்தில் போட்டுக் கொண்டான். நிமிடத்திற்கும் குறைவான நேரம் கண்மூடி பிரார்த்தித்தான்.

பிரார்த்தனையை முடித்துக் கண்களைத் திறந்தபோது, கோயிலின் உள்ளேயிருந்து சமவயதுப் பெண்கள் மூன்று பேரோடு வெளியே வந்தாள் இந்துமதி.

எல்லோர் கையிலும் புத்தகம், நோட்டு, டிஃபன் பாக்ஸ் இருந்ததால் உடன் வந்த பெண்கள் இந்துவின் தோழிகளாக இருக்க வேண்டும்.

மூடிய கண்களைத் திறந்த நேரம் உள்ளேயிருந்து வெளியே வந்த இந்துமதியைப் பார்த்ததும் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்ததுபோல் ஓர் உணர்வு. ஒருவினாடி ஸ்தம்பித்துதான் போனான் ராகவ். அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. பார்த்தது பார்த்தபடி நின்றான்.

நேற்று சந்தித்தவன். சந்தித்த நிமிடத்திலிருந்து தன்னைப் பற்றி சிந்திக்க வைத்தவன் கோயில் வாசலில் வந்து நிற்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத இந்துவுக்கும் ராகவைப் பார்த்ததும் கிட்டத்தட்ட ராகவின் நிலைதான் ஏற்பட்டது. ‘குபீரெ’ன்று வயிற்றுக்குள் நிறைய நிறைய பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறப்பதுபோல் ஓர் உணர்வு.

தோழிகள் அறியாதவாறு ராகவை ஒரு பார்வை பார்த்துவிட்டு இந்து நகர்வதற்கும் அவள் ஏற வேண்டிய பஸ் வந்து நிற்பதற்கும் சரியாக இருக்க, பஸ்ஸில் தோழிகளை முதலில் ஏறவிட்டுக் கடைசியாய் ஏறும்போது படிகளில் ஏறிக்கொண்டே மெல்ல கழுத்தைத் திருப்பி தன்னையே பார்த்தபடி நிற்கும் இவன் கண்களை பார்வையால் சந்தித்தாள் இந்து.

இந்துவின் பார்வை அவனுக்கு என்னவெல்லாம் கூறியதோ சந்தோஷத்தில் மனம் பொங்கிப் பொங்கி வழிந்தது.

ஆயிற்று. கோயில், கடைத்தெரு, ஜவுளிக் கடை, சினிமா தியேட்டர், லைப்ரரி என்று ராகவும் இந்துவும் எதிர்பாராத நேரங்களில் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகளைக் காலம் உருவாக்கிக் கொடுக்க, கண்களால் பேசி, இதயத்தால் இணைந்து ஒருவழியாய்க் காதல் வலையில் வீழ்ந்தார்கள்.

வலையில் வீழ்த்தி வேடிக்கை பார்க்க விழைந்ததோ விதி.

இந்து பி.எஸ்.ஸி. மூன்றாம் ஆண்டில் கால்வைத்த போது ராகவ்-இந்துவின் காதல் உறுதியாய்க் கெட்டிப்பட்டிருந்தது.

கண்களால் பேசி, கருத்தில் நுழைந்து, இதயத்தால் இணைந்து, மெய்யால் மெய் தீண்டாது, அன்பை வளர்ப்பதே காதல் என்பதற்கேற்ப வாய்ப்புக் கிடைத்தாலும் விரல் தீண்டாக் காதல் அவர்களுடையது.

சினிமாக் காதலர்களின் காதல் வசனம் பேசினார்கள். சினிமா காதல் பாட்டுக்க‌ளைப் பாடினார்கள். இருவர் காதுக்கு மட்டுமே விழும்படி வீரத்திருமகனிலிருந்து “பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள்” பாடினார்கள். உரிமைக்குரலிலிருந்து “நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ” பாடினார்கள்.

“விழியே கதையெழுது” பாடினார்கள். “முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ” பாடினார்கள் “நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை” பாடினார்கள்.

ஆனாலும் ஓர் இடைவெளி விட்டே அமர்ந்து ஆயிரம் கதைகள் பேசினார்கள். உண்மையில் ராகவ்-இந்துவின் காதல் உண்மையானது. பொய்க் கலப்பு இல்லாதது. ஒருவர்மீது ஒருவர் வைத்திருந்த அன்பு நிஜமானது; ஆழமானது.

உலகில் எத்தனைக் காதல் ஜெயித்திருக்கிறது. திருமணத்தில் முடிந்திருக்கிறது என்று கணக்குப் பார்த்தால் அது விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில் தானே இருக்கும்.

ராகவ்-இந்துவின் காதல் ஜெயிக்குமா? தோற்குமா? அது விதியின் வலிய கைகளிலோ?

இந்து ராகவைச் சந்திக்கும் போதெல்லாம் கேட்கும் ஒரே கேள்வி “ராகவ், நாம ரெண்டு பேரும் வேறவேற சமூகத்த சேந்தவங்க. நம்ம பெற்றோர் நம்ம திருமணத்துக்கு சம்மதிப்பாங்களா? ரொம்ப பயமாருக்கு ராகவ்.”

ராகவுக்கும் அந்த பயம் உண்டுதான்.

ஆனாலும் இந்து தன் பயத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம், “இந்து அப்டீல்லாம் பயப்படாத. என் பக்கம் ஒரு ப்ரர்ச்சனையும் வராது. எங்கம்மாக்கு நா ஒரே புள்ளை.

என் சந்தோஷமே தன் சந்தோஷமா நெனைக்கிறவங்க என் அம்மா. ஊரு என்ன சொல்லும்? ஒறவு என்ன சொல்லும்னு மொதல்ல பயப்படுவாங்க. அப்றம் கடைசியா நம்ம புள்ளயோட சந்தோஷம்தா முக்கியம்னு நம்ம கல்யாணாத்துக்கு சம்மதம் சொல்லிடுவாங்க.

ஒங்க வீட்லயும் நீ ஒரே பொண்ணுதானே! அதுவும் செல்லப் பொண்ணு வேற. மொதல்ல ஜாதி கீதின்னு கத்துவாங்க. அப்றம் சமாதானம் ஆயிடுவாங்க பாரேன்.” இந்துவின் பயத்தைப் போக்க சமாதானம் சொன்னாலும் ராகவுக்கும் அந்த பயம் அதிகமாகவே இருந்தது.

ஜாதியெல்லாம் பார்த்தா வருகிறது காதல்.ஆனாலும் ஜாதிதான் தீர்மானிக்கிறது காதலின் வெற்றி தோல்வியை.

ராகவ்-இந்துவின் காதலுக்கு இருவரின் ஜாதி பச்சைக் கொடி காட்டுமா? படுகுழியில் தள்ளுமா?

என்ன தீர்ப்பு காத்திருக்கிறது அவர்களுக்கு?

“இந்து, நம்ம திருமணம் நம்ம பெத்தவங்க சம்மதத்தோடதா நடக்கனும்னு நா ஆசப்படறேன். முடிஞ்சவர அதுக்காகப் போராடுவோம். நிச்சயமா நாம ஜெயிப்போம் இந்து. நம்பிக்கையோட இருப்போம்.

அப்பிடி பெத்தவங்க சம்மதம் கெடைக்கலேன்னா அதுக்காக நாம பிரிஞ்சிடக் கூடாது இந்து. ஒன்னப் பிரிஞ்சு என் உயிர் வாழாது. என்னுயிர் உன்னோடுதான். ஒன் அனுமதி இல்லாம என் உயிர அந்த ஆண்டவனாலும்கூட பறிக்க முடியாது இந்து. இது சத்தியம் இந்து.” நெஞ்சம் நெகிழ பேசும் ராகவைக் கண்ணீரோடு பார்த்தாள் இந்து.

“ராகவ்” காதலோடும் கண்ணீரோடும் அவனைப் பார்த்து விம்மினாள் இந்து.

சட்டென இயல்புக்கு வந்தான் ராகவ்.

“சரி இந்து. லேட்டாயிட்டா ஒங்க வீட்டுல கவலப்படுவாங்க.நேரத்தோட வீட்டுக்குக் கிளம்பு” சொல்லிவிட்டு எழுந்து இந்துவை அனுப்பிவிட்டு வண்டியை எடுத்து வீடு நோக்கித் திருப்பியவனின் மனது ஏனோ சஞ்சலப்பட்டது.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.