“அக்கா …அக்கா …”
உள்ளே இருந்து வெளியே வந்தாள் ராசாத்தி.
“என்ன ஜானகி? எங்க கிளம்பிட்டீங்க? எங்கேயோ வெளில போற மாதிரி தெரியுது.”
“ஆமாக்கா வீட்டிலேயே அடஞ்சு கிடக்கிறது ஒரு மாதிரியா இருக்குது. அவரும் ரிட்டையர்டு ஆகிட்டாரு. மனசு சரியா இல்ல. வெளியில எங்கேயாச்சும் கொஞ்ச நாளைக்கு போயிட்டு வரலாம்ன்னு தான்.”
“ஆமாம் நீ சொல்றதும் சரிதான். எத்தனை நாளைக்கு தான் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துகிட்டு உட்கார்ந்து இருக்கிறது. வெளியில போய் தங்கிட்டு வந்தா மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.”
“ஆமாக்கா எங்க தம்பிய காணோம்?”
“யாரு வாலியா? அவன் அப்பவே கிளம்பி காலேஜுக்கு போயிட்டானே.”
“ஓ, அப்படியா! சரிக்கா ரோகிணி பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் நாங்க கிளம்புறோம்.”
“எங்க உங்க சொந்தக்காரங்க வீட்டுக்கா?”
“ஆமாக்கா. அவரோட சொந்த கிராமத்தில ஒரு வீடு இருக்கு. அங்க போய் கொஞ்ச நாள் தங்கிட்டு வரலாம்னு போறோம். ரோகிணி வந்ததும் உங்ககிட்ட சாவியை கொடுத்துட்டு போறோம். நீங்க ராக்கிய கொஞ்ச நாளைக்கு பாத்துக்கோங்க. அவனுக்கு சாப்பாடு வையுங்க. கரண்ட் பில் குறிக்க வந்தா கேட்ட தொறந்து மீட்டர் பாக்ஸை காமிங்க. வீட்டு மேலயும் அப்படியே ஒரு கண்ணு வச்சுக்குங்க.”
“சரி சரி இதெல்லாம் நீ சொல்லித்தான் எனக்கு தெரியணுமா?”
“சரிக்கா. நான் வரேன் அக்கா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் ஜானகி.
ராசாத்தி மறுநாள் காலையில் எதிர்வீட்டு வாசலிலும் கோலத்தை போட்டு விட்டு வந்தாள்.
வாலி அப்போது “அம்மா எங்கம்மா போயிட்டு வர?” என்று கேட்டான்.
“அது ஒன்னும் இல்லடா. எதிர்த்த வீட்டுக்குத்தான். அந்தப் புள்ள ரத்தினி போனதுக்கு அப்புறம் அந்தக் குடும்பமே நிலை குலைந்து போச்சு. யார் முகத்துலையும் சிரிப்பு இருந்த சுவடே தெரியல. அதான் சொந்த ஊருக்கு போயிட்டு வரலாம்னு கிராமத்துக்கு கிளம்பிட்டாங்க. நேத்திக்கு ஜானகி வந்து சொல்லிட்டு போனா. நான் போய் வீட்டு வாசல்ல கோலத்தை போட்டுட்டு ராக்கிய அவிழ்த்து விட்டுட்டு வரேன்.”
“ராக்கி எங்கேயும் போயிட மாட்டான்லம்மா?”
“அடேய் கேட்டை பூட்டித்தாண்டா வச்சிருக்கேன். எங்கேயும் போகமாட்டான் நாம தான் சாப்பாடு வைக்கணும்.”
“சரி நான் போய் குளிச்சிட்டு வரேன்” என்று நகர்ந்தான்.
ஒரு வாரம் சென்றது. இரவு 11 மணி. ராசாத்தி தன் வேலைகளை முடித்துவிட்டு ஜன்னல்களை சாத்திவிட்டு தூங்க செல்லும் நேரம்.
எதிர்வீட்டு மாடியில் ரத்தினியின் அறையில் லைட் எரிந்து கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் லைட் அணைந்தது. மீண்டும் ஒருமுறை எரிந்து அணைந்தது.
ராசாத்திக்கு பயம் பற்றிக் கொள்ள, அரவம் இல்லாமல் ஜன்னல் அருகே அப்படியே அமர்ந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் ராக்கி குலைக்கும் சத்தம் கேட்டது.
ராசாத்தி எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மதில் சுவரில் இருந்து ஒரு உருவம் குதித்து ஓடியது.
ராசாத்தியின் விழிகள் விரிந்தன.
‘பட்’ என்று ஜன்னல் கதவை சாத்தி விட்டு கட்டிலில் அமர்ந்தாள். உடலெங்கிலும் சில்லிட்டுப் போயிற்று.
ஃபேன் ஓடிய நிலையிலும் ராசாத்திக்கு உடம்பெல்லாம் வியர்த்து கொட்டியது. எழுந்து ஃப்ரிட்ஜிஜை திறந்து பாட்டிலில் இருந்த தண்ணீர் எடுத்து முகத்தை கழுவிக் கொண்டு ‘மடக் …மடக்…’ என்று தண்ணீரை குடித்தாள்.
‘என்ன நடக்கிறது? என்று ஒன்றும் புரியவில்லை. வாலி வேறு சினிமா பார்க்க போவதாக போய் விட்டான். இப்போது என்ன செய்வது?’ என்று யோசித்து கொண்டிருந்த ராசாத்தியின் சிந்தனையை கலைத்தது செல்போன்.
“டிடுடிட்டி ..டிடுடிட்டி… டிடுடிட்டி ….”
ராசாத்தி வேகமாக போனை எடுத்து ஆன் செய்தாள்.
“ஹலோ நான் ஜானகி பேசுறேன்.”
“சொல்லு ஜானகி எப்படி இருக்க?”
“நான் நல்லா இருக்கேன்கா. இப்போதான் கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்குது. இருந்தாலும் மறக்க முடியல. ஆமாம் ராக்கி எப்படி இருக்கான்?”
“ராக்கி எல்லாம் நல்லா இருக்கான். அது இருக்கட்டும் ஜானகி நீ போறப்போ ரூம்ல எதுவும் லைட் போட்டு வச்சிட்டு போனியா?”
“இல்லையே அக்கா!”
“அப்போ சுச்சி ஏதாச்சும் பால்ட்டா இருக்குமா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லையே”
“என்னன்னு தெரியல ஜானகி. மாடியில கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி லைட் எரிஞ்சுச்சு. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு அணைஞ்சிருச்சு. திரும்பவும் எரிஞ்சிச்சி”
“நம்ப ராக்கி கொலச்சுச்சா?”
“அந்த மாதிரி எதுவும் தெரியல. ஆனா நம்ப பழக்கப்பட்டவங்க போனா, நம்பல சுத்தி சுத்தி வந்து ஒரு மாதிரி கொலையும்ல அந்த மாதிரி குலஞ்சிச்சு. அதுவும் இல்லாம ஜன்னலை திறந்து பார்த்தா யாரோ குதிச்சு ஓடுற மாதிரி தோணுது. வாலி வேற வீட்ல இல்ல. சினிமாவுக்கு போயிட்டான். எனக்கு என்னமோ பயமா இருக்குது. நீங்க எப்போ வறீங்க?”
“நாங்க நாளைக்கு கிளம்பி வரலாம்னு இருக்கோம்.”
“நாளைக்கு சீக்கிரமா கிளம்பி வந்துருங்க”
“நாங்கள் காலையிலேயே சீக்கிரம கிளம்பி வந்துடுவோம். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க” என்று போனை கட் பண்ணினாள் ஜானகி.
காலையில் மகேந்திரன் சோபாவில் உட்கார்ந்து இருந்தார் .
அடுப்படியில் ஜானகியும் ராசாத்தியும் பேசிக் கொண்டு இருக்க, ரோகிணி பூச்செடிகளுக்கு எல்லாம் தண்ணி ஊத்தி கொண்டு இருந்தாள்.
வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது.
ரோகிணி உள்ளே ஓடினாள்.
“அப்பா… அப்பா … வாசல்ல போலீஸ்காரங்க வந்து இருக்காங்கப்பா …”
மகேந்திரன் சோபாவை விட்டு எழுந்து வெளியே வந்தார்.
மகேந்திரனை கண்டதும் இன்ஸ்பெக்டர் “வணக்கம் சார்..” என்றார்.
“வணக்கம். வாங்க… உள்ள வாங்க…”
சோபாவில் இருவரும் உட்கார்ந்தனர்.
“சார் நல்லா இருக்கீங்களா … என்ன விஷயம்? எங்கள வர சொல்லி இருந்தீங்க?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.
“அது வந்து சார், அன்னைக்கு அந்த சம்பவம் நடந்ததுக்கு அப்பறம் நாங்க ஊருக்கு போயிட்டு இன்னைக்கு காலையில தான் வந்தோம்.”
“சரி அதுக்கு என்ன?”
“நாங்க ஊருக்கு போறப்ப வீட்டை பூட்டிட்டு கேட் சாவியை எதிர்த்த வீட்ல கொடுத்துட்டு போயிருந்தோம். நேற்று இரவு எங்களுக்கு தூக்கம் வரவில்லை. எதிர்த்த வீட்டு ராசாத்திக்கு என் மனைவி போன் செய்து பேசினாள்.
அப்போது ராசாத்தி ரத்தினியின் ரூமில் லைட் அணைந்து அணைந்து எரிவதாகவும் ஏதோ ஒரு உருவம் மதில் சுவற்றின் மேலிருந்து குதித்து ஓடுவதாகவும் சொல்லி இருக்காங்க. அதனால்தான் நாங்க அவசரமா வந்தோம். வந்து பார்த்தா இங்க ஒன்னும் இல்ல. வச்சது வச்ச மாதிரி அப்படி அப்படியே இருக்குது.”
“சந்தேகப்படற மாதிரி உங்களுக்கு எதுவும் தெரியலையா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லங்க. எல்லாம் சரியா தான் இருக்குது. வந்தவன் யார் ஏன் வந்தான் என்று நீங்க தான் கண்டுபிடிக்கணும்.”
“ஆமா உங்க வீட்டு நாய் இங்கே தானே இருந்துச்சு. இல்ல அதையும் நீங்க அங்க கூட்டிட்டு போய்ட்டீங்களா?”
அப்போது அடுப்படியில் இருந்து வெளியே வந்த ராசாத்தி, “ஆமா சார் ராக்கிய நான்தான் பார்த்துக்கிட்டேன். அவன் இங்கே தான் இருந்தான்.”
“சரி இப்ப நீங்க சொல்லுங்கம்மா. நேற்று இரவு என்ன நடந்துச்சு? என்ன பார்த்தீங்க?”
ராசாத்தி முந்திய நாள் இரவு நடந்ததை முழுவதுமாக சொல்லி முடித்தாள்.
“வீட்டுச்சாவி உங்ககிட்ட தானே கொடுத்துட்டு போயிருந்தாங்க?”
“இல்லங்க சார். வீட்டு சாவி இல்ல. கேட் சாவி தான் என்னிடம் இருந்துச்சு.”
“அப்போ நீங்க வந்து பார்க்க வேண்டியதுதானே?”
“சார் நேத்து இரவு தான் இப்படி நடந்துச்சு. வீட்டுல யாரும் இல்ல. நான் மட்டும் தனியா தான் இருந்தேன். என் பையனும் 9 மணிக்கு எல்லாம் சினிமாவுக்கு நண்பர்களுடன் கிளம்பி போயிட்டான்.”
“இப்போ எங்க உங்க மகன்?”
“காலேஜ்க்கு கிளம்பி போயிட்டான்.”
“நேற்று இரவு எத்தனை மணிக்கு வந்தான்?”
“ரெண்டு மணி இருக்கும். சாப்பிடறியா என்று கேட்டேன். அதெல்லாம் வேண்டாமா நான் சாப்பிட்டேன் என்று சொல்லிவிட்டு படுத்து விட்டான்.
இன்ஸ்பெக்டர் மகேந்திரனை பார்த்து கேட்டார். “சரி சார். நேற்றிரவு வந்தவன் திருடனாக இருந்தால் திருடி இருக்க வேண்டும். நம்ப நாய் குலைத்திருக்க வேண்டும்.
வந்தவன் அப்புறம் ஏன் திருடாமல் போக வேண்டும்? வந்தவன் உங்க வீட்டிற்கு வந்து போய் பழக்கப்பட்டவனாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நாய் ஏன் குறைக்காமல் போக காரணம்?
வந்தவன் யாரு என்னன்னு ஒண்ணுமே புரியல. அவன் வந்த நோக்கம் தான் என்ன? சரி வாங்க மேலே போய் ரத்தினியின் ரூமைப் பாப்போம்.”
“இங்கே என்ன நடக்குது? ஏன் நடக்குது? ஒண்ணுமே புரியல. ரத்தினி இப்படி செய்ய காரணம் தான் என்ன? ஒரே மர்மமாக இருக்குது.”
“அதுதான் சார் எனக்கும் ஒன்னும் புரிய மாட்டேங்குது. நீங்க ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி. உங்க வீட்டில இப்படியெல்லாம் நடக்குதுன்னா?” என்று சொல்லிக்கொண்டே,
ரத்தினியின் ரூமுக்கு சென்ற இன்ஸ்பெக்டர் “இந்த ரூமுக்கு இதோட மூணாவது முறை வருகிறேன். வச்சது வச்சது போலவே இருக்குது. இதுவரையில் எந்த எவிடென்சோ, எந்த கைரேகையோ கிடைக்கவில்லை.
ரூமை சல்லடை போட்டு அரித்து விட்டோம். விசாரித்த வகையில் ரத்தினிக்கு காலேஜிலையும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நல்லவள் என்றுதான் பெயர் எடுத்து இருக்கிறாள். அவள் பழக்க வழக்கமும் சந்தேகப்படும்படி இல்லை.
வீட்டிலும் சந்தோசமாகத்தான் இருந்திருக்கிறாள். அப்புறம் ஏன் இப்படி செய்தாள்?”
இன்ஸ்பெக்டருக்கு மண்டையே வெடித்து விடும் போல் இருந்தது அப்படியே சோபாவில் உட்கார்ந்தார்.
“என்ன சார் மேற்கொண்டு என்ன செய்யலாம்னு இருக்கீங்க? ரத்தினிக்கு நேர்ந்தது என்ன? அவளுக்கு அப்படி என்ன நெருக்கடியான சூழ்நிலை இப்படி செய்து கொள்ள? இங்கு வந்து போனவன் யாரு? இதுகளுக்கெல்லாம் விடை தெரிந்தாலும் என் மனது அமைதியாகிவிடும். இதுகளுக்கெல்லாம் காரணம் தெரியாமல் பித்து பிடித்தவன் போல இருக்கின்றேன். இந்தப் பிரச்சனை எல்லாம் முடிந்ததும் நான் என் சொந்த ஊருக்கே போயிடுவேன்.” என்று புலம்பினார் மகேந்திரன்.
“சாரி சார். சீக்கிரமே கண்டு பிடிச்சிடுவோம். உங்களுக்கு ஒரு செக்யூரிட்டிக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க. தைரியமாக இருங்கள். நான் இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.
இரண்டு நாள் கழித்து இன்ஸ்பெக்டர் மகேந்திரனைன் வீட்டிற்கு வர, வாசலில் சேர் போட்டு உட்கார்ந்திருந்த கான்ஸ்டபிள் கையில் வைத்திருந்த புக்கை கீழே வைத்துவிட்டு இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்தார்.
இன்ஸ்பெக்டர் பதிலுக்கு சல்யூட் அடித்து விட்டு, கான்ஸ்டபிளிடம் “என்ன எல்லாம் சரியா நடக்குதா? எதுவும் சந்தேகப்படும்படி எதுவும் நடந்ததா? வீட்டுக்கு வெளியில் இருந்து ஆட்கள் யாரும் வந்தார்களா?” என்று விசாரித்துக்
கொண்டே, “இது என்ன புக்கு. நாவலா?” என்று அதை கையில் எடுத்து பெயரைப் படித்து விட்டு இரண்டு பேஜை திருப்பினார்.
இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விகளுக்கு கான்ஸ்டபிள் ஒவ்வொன்றாக பதிலளித்தார்.
“இது என்னையா? புக்குல ஒவ்வொரு எழுத்துக்கும் புள்ளி வச்சு விளையாடிட்டு இருக்கியா?அப்போ நீ டூட்டியை ஒழுங்கா பாக்கல.”
“அய்யய்யோ அதெல்லாம் ஒன்னும் இல்ல சார். நான்தான் சேரில் உட்கார்ந்து இருக்கிறது டைம் பாஸ் ஆகாமல் ரோகிணியிடம் ‘புக்கு ஏதாச்சும் இருந்தா எடுத்துட்டு வந்து குடும்மா’ என்று கேட்டேன். ரோகிணி கொண்டு வந்து கொடுத்த புக்கு தான் இது. அதைத்தான் படிச்சிட்டு இருந்தேன். அதுல ஒவ்வொரு எழுத்துக்கு கீழேயும் ஏற்கனவே புள்ளி வைக்கப்பட்டு தான் இருந்தது. நான் ஒன்னும் செய்யல” என்று சொன்னார்.
“சரி சரி இது என்னிடம் இருக்கட்டும். நானும் படிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் இன்ஸ்பெக்டர்.
ஒரு வாரம் சென்றது.
ராசாத்தி வாசலில் புள்ளி வைத்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்
வாசலில் ஜீப் வந்து நின்றது.
இன்ஸ்பெக்டர் ஜீப்பை விட்டு இறங்க, இரண்டு கான்ஸ்டபில்கள் அவர் பின்னே இறங்கி விடு விடு என்று உள்ளே ஓடி படுக்கையில் இருந்த வாலியை இறுக பிடித்தனர்.
“சார், சார், ஏன் சார் என்ன புடிக்கிறீங்க? நான் ஒண்ணுமே செய்யலையே..”
“அது ஒன்னும் இல்ல தம்பி உன்னைய மாமியார் வீட்டுக்கு அழைச்சிட்டு போக வந்திருக்கிறோம்” என்று கூறி கான்ஸ்டபிள் இருவரும் வாலியை இழுத்துக் கொண்டு சென்று ஜீப்பில் ஏற்றினார்கள். ஜீப் புறப்பட்டு சென்றது.
அதிர்ச்சியில் உறைந்து இருந்த ராசாத்திக்கு ஒன்றுமே புரியவில்லை. கூச்சல் இட்டுக் கொண்டு எதிர் வீட்டுக்குள் சென்றாள்.
போலீஸ் ஸ்டேஷனில்,
“ஏன் சார் அந்த புள்ள வாலியை புடிச்சுட்டு வந்துட்டீங்களாமே? அந்தப் பையன் நல்ல புள்ள சார். என்ன விஷயம்?” என்று கேட்டார் மகேந்திரன்.
“முதல்ல உட்காருங்க. உங்கள் மகள் ரத்தினியின் தற்கொலைக்கும் வாலிக்கும் சம்பந்தம் இருக்குது.”
“என்ன என்ன சார் சொல்றீங்க?”
” ஆமாம் இந்தப் பையன் கூட தானே ரத்தினி படிச்சிட்டு இருந்தா?”
“அதனால் என்ன தங்கமான புள்ள. வர்றதும் தெரியாது. போறதும் தெரியாது. இருக்கிற இடமே தெரியாமல் இருக்கிற புள்ள சார்.”
“வாலி எப்பவாவது உங்க வீட்டுக்கு வருவானா?”
“ஆமாம். ரத்தினியும் வாலியும் ஒன்னாத்தான் காலேஜுக்கு போவாங்க. வாலி எப்பவாவது வீட்டிற்கு வந்து ரத்தினிடம் படிக்க புக், நாவல் இதெல்லாம் வாங்கிட்டு போவான் திருப்ப கொண்டு வந்து கொடுத்து விடுவான். மற்றபடி எதுவும் தப்பான பழக்க வழக்கங்கள் எதுவும் கிடையாது. எல்லோரிடமும் அன்பாக பழகுவான்.”
“நீங்கதான் அப்படி நினைச்சுட்டு இருக்கீங்க. ரத்தினியின் தற்கொலைக்கு காரணமே அவன்தான். ரத்தினி கல்லூரியில் தன்கூட படிக்கும் ஒரு பையனிடம் நட்பாக பழகி இருக்கிறாள்.
அவள் அந்தப் பையனிடம் பழகுவது வாலிக்கு பிடிக்கவில்லை. வாலி ரத்தினியை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறான். வாலிக்கு இதை ரத்தினிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.
வாலி தான் ஒவ்வொரு தடவை வாங்கி செல்லும் புத்தகத்தில் ஒவ்வொரு எழுத்துக்கு கீழும் புள்ளி வைத்து, தான் காதலிக்கும் விஷயத்தை சொல்லி இருக்கிறான். ரத்தினி இதை அறிந்தும் மறுத்து இருக்கிறாள்.
வாலி கடைசியில் ரத்தினிடம் அந்த பையனை பற்றியும் உன்னை பற்றியும் கல்லூரியில் அவதூறு பரப்பி விட்டு விடுவேன் என்றும், இதனால் உன் குடும்ப மானமே போய்விடும். உங்க அப்பா நீதிபதி. மானம் போனால் தூக்கில் தொங்கி விடுவார்.
எனக்கு கிடைக்காத உன்னை யாரிடமும் வாழ விட மாட்டேன் என்று கடைசியில் வாங்கிய நாவலில் குறித்து கொடுத்து இருக்கிறான்.
இதை அறிந்த ரத்தினி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்.
அன்று இரவு சினிமாவுக்கு போவதாக சொல்லிவிட்டு வாலி தான் சுவர் ஏறி குதித்து இருக்கிறான். பழக்கப்பட்ட நாய் என்பதால் குழைந்து இருக்கிறது.
அந்த புக்கை எடுக்க தான் வாலி உள்ளே சென்று இருக்கிறான். மேல ஏறி செல்ல வழி தெரியாததால் திரும்ப வந்து விட்டான்.
இருந்தாலும் லைட் அணைந்து அணைந்து எறிய காரணம் ஸ்விட்ச் போர்டுல தான் ஏதோ பிராப்ளம் இருக்கணும். அத நீங்க சரி செய்து கொள்ளுங்கள்.”
“இப்போ வாலி எங்க? அவனிடம் நான் கேட்கணும். என் மகளை உன்னை நம்பி தானடா அனுப்பி வைச்சோம். நம்பிக்கை துரோகி என்று.”
“வாலி மாமியார் வீட்டு கவனிப்பில் களைப்பில் இருக்கிறான். எல்லாத்தையும் அவன் வாயாலேயே ஒப்புக் கொண்டு விட்டான். இதுதான் அந்த நாவல்” என்று மகேந்திரனின் கையில் கொடுக்க, மகேந்திரன் வாங்கிக் கொண்டார். அவர் மகள் ரத்தினைக்கு நியாயம் கிடைத்தது.
சூட்சமக்காரன் வாலிக்கு தண்டனை கிடைத்து. ஜெயிலில் அடைத்தார்கள் .
மகேந்திரன், ஜானகி, ரோகிணி மூவரும் வீட்டை காலி செய்து விட்டு ராசாத்தியை அழைத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு புறப்பட்டார்கள்.
மகேந்திரனின் வீட்டில் ரத்தினியின் ரூமில் மட்டும் இரவு 11 மணி ஆகிவிட்டால் லைட் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருக்கிறது.
நாவலை புரட்டும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறதோ?